உள்ளூர் செய்திகள்

தமிழே அமுதே

'உம்' கொட்டிக் கேட்பது ஏன்?நாம் பேசும்போது, சில சொற்களுக்கு 'உம்' போட்டுச் சேர்த்துச் சொல்வோம். அவ்வாறு கூறினால்தான் அழுத்தமான பொருள் கிடைக்கும்.'ஆலும் வேலும் பல்லுக்குறுதி''அன்பும் அறனும் உடைத்தாயின்''அல்லும் பகலும் அயராது பாடுபட்டான்''பாலும் பழமும் உண்டான்'மேலே உள்ள தொடர்களைப் பாருங்கள். இரண்டு பெயர்ச்சொற்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பெயர்ச்சொல்லோடும் 'உம்' என்று சேர்த்துக் கூறுகிறோம். இவை உம் தொடர்கள் எனப்படும்.அந்த உம் இல்லாமல் அந்தத் தொடரைச் சொல்லிப் பார்ப்போமா? ஆல் வேல் பல்லுக்குறுதி - பொருள் நன்றாகவே இல்லை. அவ்வாறும் சொல்லலாம்தான். ஆனால், உம் சேர்த்துச் சொல்லும்போதுதான் பொருள் வலிமை கிட்டுகிறது.உம் சேர்ப்பது, நம் மொழியில் காற்புள்ளிபோல் செயற்படுகிறது. அடுத்தடுத்த பெயர்கள் வருகையில், நாம் சேர்த்துக்கொண்டே செல்லலாம். சேரனும் சோழனும் பாண்டியனும் வேளிரும் வந்தனர் எனலாம்.எல்லாவற்றோடும் உம் சேர்த்துவிட முடியாது. அதற்கென்று சில தன்மைகள் உள்ளன. உம் சேர்க்கப்படும் பெயர்ச்சொற்கள் யாவும் ஓரினமாக இருக்க வேண்டும். மேலே உள்ளவற்றைப் பாருங்கள். ஆலும் வேலும், அன்பும் அறனும், பாலும் பழமும் என, ஓரினமாக இருக்கின்றன. இல்லையேல் ஒன்றுக்கொன்று எதிர்ச்சொல்லாகவும் இருக்கலாம். காயும் கனியும், இரவும் பகலும், மழையும் வெய்யிலும். உம் சேர்த்துச் சொல்வதற்கு, ஒரு நுணுக்கம் இருக்கிறது. ஒருவர் ஒன்றைச் சொல்கிறார். அதனைக் கேட்பவர் என்ன செய்கிறார்? 'உம்' என்று சொல்லிக் கேட்கிறார். அந்தக் கேட்புச் செயற்பாட்டுக்கு இரண்டே இரண்டு மொழிப்பொருள்கள்தாம் உண்டு.ஒன்று, 'ஆம்' என்பது. இன்னொன்று, 'உம்' என்பது. எதிராளி சொல்வதை ஒப்புக்கொண்டபடி கேட்டால், 'ஆம்' என்று கேட்பதாகக் கொள்ளலாம். அதன் இன்னொரு வழிதான் 'ஆங்(ம்)' என்று வாயைத் திறந்தபடி கேட்பது.அடுத்தடுத்துச் சொல்வதைச் சொல்லிச் செல் என்பதைப்போல், செவிமடுத்தால் 'உம்' கொட்டிக் கேட்பதாகக் கொள்ளலாம். சொல்பவர் சொல்லும் வாக்கியத்தை, கேட்பவர் 'உம்' சேர்த்துக் கேட்கிறார். கேட்பவர் 'உம்' கொட்டினால்தான் சொல்பவர் ஊக்கம் பெற்று மேற்செல்கிறார்.பேச்சில் பயன்படும் சின்ன ஒலிப்புக்குக்கூட மொழியோடு கொண்ட வலிமையான பொருள் உண்டு என்பதற்கு 'ஆம், உம்' போன்றவை நல்ல எடுத்துக்காட்டுகள்.- மகுடேசுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !