உள்ளூர் செய்திகள்

யாரிடம் கேட்கலாம், ஈ, தா, கொடு

இரவு, பகல்: இந்த இரு சொற்களுக்குமுள்ள தொடர்பு என்ன?இரண்டும் பொழுதைக் குறிக்கும் சொற்கள்தாம். ஆனால், ஒன்றுக்கொன்று பொருந்தாத, முற்றிலும் மாறுபட்ட பொருட்களைக் குறிக்கின்றன. சூரியன் இல்லாத, இருளான பொழுது இரவு. சூரியன் நன்கு வெளிப்படுகிற, ஒளியான பொழுது பகல்.இவ்விரண்டையும் 'எதிர்ச்சொற்கள்' என்கிறோம். அதாவது, ஒன்றுக்கொன்று எதிரான சொற்கள்: இரவு இருந்தால் பகல் இல்லை; பகல் இருந்தால் இரவு இல்லை.இவ்வாறு பல எதிர்ச்சொற்களைக் குறிக்கலாம்: உண்மை, பொய்; இன்பம், துன்பம்; வளர்ச்சி, வீழ்ச்சி; மேல், கீழ்; இனிப்பு, கசப்பு.எதிர்ச்சொற்களை அடுத்தடுத்து ஒரே சொற்றொடரில் பயன்படுத்துவது நயமான உத்தி. எடுத்துக்காட்டாக: 'அவன் இரவும் பகலும் பாடுபட்டு உழைத்தான்' என்று சொல்லும்போது, இரவு - பகல் என இருவேளைகளிலும் பாடுபட்டான் எனும் பொருள் வருகிறது. அதேபோல், 'இவர் இன்ப துன்பங்களைப் பொருட்படுத்தாமல் சேவை புரிகிறார்' என்றால், எது நிகழ்ந்தாலும் அவர் தன்னுடைய சேவை எண்ணத்தை விடவில்லை என்பது புரிகிறது.இதனால், சொற்களைக் கற்கும்போது அவற்றின் எதிர்ச்சொற்களையும் கற்கலாம். இதன்மூலம் இருசொற்களின் பொருளும் அவற்றைப் பயன்படுத்தும் விதமும் நமக்குப் பழகும். இதற்காகவே 'எதிர்ச்சொல் அகராதிகள்' வெளியிடப்படுகின்றன. எதிர்ச்சொல் என்பதை, எதிர்ப்பதம் எனவும் குறிக்கலாம். பதம் என்றால் சொல் என்பது உங்களுக்குத் தெரியும்தானே!இணைப்பதம்/ இணைச்சொற்கள்எதிர்ச்சொல்போல, இணைச்சொற்களையும் பயில்வது சிறப்பாகும். அதாவது, ஒரு சொல்லுக்கு இணையான, அதே பொருளை வெளிப்படுத்தும் பிற சொற்கள்.எடுத்துக்காட்டாக, சொன்னான், செப்பினான், உரைத்தான், பேசினான் ஆகிய நான்கு சொற்களும் இணையானவை. இவற்றில் ஒரு சொல் இடம்பெற்றிருக்கிற இடத்தில் இன்னொரு சொல்லைப் பயன்படுத்தலாம். 'அவன் சொன்னான்' என்பதும் 'அவன் செப்பினான்' என்பதும் ஒரே பொருளை உணர்த்துகின்றன.அனைத்தும் ஒரே பொருளைத்தான் உணர்த்துகின்றன என்றால், இணைச்சொற்களால் என்ன பயன்? ஒரு சொல் போதாதா?ஒரு மொழியின் சொற்கள் அனைத்தும் வெவ்வேறு தேவைகளுக்கேற்ப உருவாகின்றன. சில நேரங்களில் ஒரேமாதிரித் தோன்றும் சொற்களிடையே நுணுக்கமான வேறுபாடுகளும் இருப்பதுண்டு.எடுத்துக்காட்டாக, ஈ, தா, கொடு என்ற மூன்று சொற்களும் நமக்கு ஒன்றுபோல் தோன்றலாம். ஆனால் தொல்காப்பியர் அவற்றைப் பிரித்துக்காட்டுகிறார்ஈ: உயர்நிலையில் இருப்பவரிடம் தாழ்நிலையில் இருப்பவர் கேட்பதுதா: சமநிலையில் இருப்பவரிடம் இன்னொருவர் கேட்பதுகொடு: தாழ்நிலையில் இருப்பவரிடம் உயர்நிலையில் இருப்பவர் கேட்பதுஆக, இணைச்சொற்களை இதுபோன்ற நுணுக்கமான பொருள் மாறுபாடுகளுடன் கற்பது நல்லது. இதன்மூலம் அதனைப் பொருத்தமான இடத்தில் பொருத்தமான விதத்தில் பயன்படுத்தலாம்.இந்தச் சொற்களுக்கு எதிர்ச்சொல், இணைச்சொல்லைச் சிந்தியுங்கள்:உங்கள் நினைவிற்கு1 வெம்மை...............................................2 விரைந்தான்...............................................3 முதல்...............................................4 பெரியது...............................................விடைவெம்மை:எதிர்ச்சொல் - தண்மை இணைச்சொல் - சூடுவிரைந்தான்:எதிர்ச்சொல் - மெதுவாகச் சென்றான்,இணைச்சொல் - வேகமாகச் சென்றான்முதல்:எதிர்ச்சொல் - கடைசி,இணைச்சொல் - தொடக்கம்பெரியது:எதிர்ச்சொல் - சிறியது,இணைச்சொல் - பாரியது(குறிப்பு: இச்சொற்களுக்குப் பல இணைச்சொற்கள் இருக்கலாம், இங்கு தந்திருப்பது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே.)- என்.சொக்கன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !