சென்னை திருவான்மியூர் கலாசேத்ராவில் கதகளி திருவிழா நடந்துவருகிறது.முதல் நாளான்று (21/9/24) அம்பரீஷ சரித்திரம் என்ற பக்தி கதை கதகளி மூலமாக நிகழ்த்தப்பட்டது.
அம்பரீஷர் ஏழு உலகங்களையும் கட்டியாளும் சக்கரவர்த்தியாக இருந்தாலும் அதிகாரத்தால் அல்லாமல் பக்தி மார்க்கத்தில் ஆட்சி செய்தார்.மகாவிஷ்ணுவின் மீது பக்தி அதிகம் கொண்டிருந்தார்.
ஒரு முறை மகாயாகம் செய்து முடிக்கும் தருவாயில் துர்வாசர் அங்கு வந்தார், தனக்கு உணவளித்து யாகத்தை நிறைவு செய்யலாம் என்று சொல்லிவிட்டு ஆற்றில் குளிக்கச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை.
யாகத்தை முடிக்கும் நேரம் நெருங்கியதால் துளசி நீரை அருந்தி அம்பரீஷர் யாகத்தை நிறைவு செய்தார், இதை அறிந்த துர்வாசம் கோபம் கொண்டு ஒரு அரக்கனை உருவாக்கி அம்பரீஷரை அழிக்க ஏவினார்.
ஆனால் மகாவிஷ்ணு ஏவிய சக்ராயுதம் அரக்கனை தடுத்து அழித்ததுடன் நிற்காமல், துர்வாசரையும் துவம்சம் செய்யும் நோக்குடன் விரட்டியது.பயந்து போன துர்வாசர் விஷ்ணுவிடமே உயிர்பிச்சை கேட்டு சரணடைந்தார் ஆனால் விஷ்ணுவோ உண்மையான பக்தனான அம்பரீஷர் மட்டுமே உம்மை மன்னிக்கும் தகுதி உண்டு ஆகவே அவரிடம் செல் என்று சொல்லிவிட்டார்.
கடைசியில் அம்பரீஷரிடம் வந்து நிற்க , அவரும் சக்ராயுதத்தை வேண்டிக் கொள்ள சக்ராயுதம் மறைந்தது துர்வாசர் நிம்மதி பெற்றார் அம்பரீஷரின் பக்தியை எண்ணி துர்வாசர் வியந்தார்.
இதுவே அம்பரீஷ சரித்திரமாகும் இந்த சரித்திரக்கதையை கதகளி ஆட்டமாக கேரளா மாநில கலைக்குழுவினர் வழங்கினர்.மெதுவாக ஆரம்பித்து பின் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த நாட்டிய நாடகத்தை பலரும் ரசித்து பார்த்தனர்.-எல்.முருகராஜ்