UPDATED : ஆக 25, 2026 08:06 PM | ADDED : ஆக 25, 2026 08:01 PM
சத்தீஸ்கர் மாநிலத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பஸ்தர் மாவட்டம், ஜெகதல்பூரில் நேற்று வழக்கத்தை விடவும் கூடுதல் களைகட்டியிருந்தது. காரணம், இந்துக்களின் மிகப்பனிதமான 'ஸ்ராவண்' (ஆவணி) மாதத்தின் கடைசிச் சோமவாரம்!காலை முதலே அங்குள்ள புகழ்பெற்ற 'பூதேஷ்வர் மகாதேவ்' திருக்கோவிலை நோக்கி பாயும் நதியெனப் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அரஹர மகாதேவா... சம்போ மகாதேவா... என்ற முழக்கம் விண்ணைப்பிளக்க, ஆலய வளாகமே சிவமயமாய் மின்னியது.இந்த ஆண்டின் கடைசிச் சோமவார ஆன்மீக ஊர்வலத்திற்கு கூடுதல் மகுடம் சேர்த்தது பக்கத்து மாநிலமான ஒடிசாவிலிருந்து வந்திருந்த பாரம்பரியக் கலைக்குழுவினரின் வருகைதான்!சிவனின் பூத கணங்களைப் போலவும், பல்வேறு புராணக் கதாபாத்திரங்களின் வேடமணிந்தும் களமிறங்கிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள், மேள தாளங்களின் அதிரடி இசைக்கேற்ப ஆடிய ஆட்டம் காண்போரைக் பரவசத்தில் ஆழ்த்தியது. உடலெங்கும் விபூதி பூசி, கையில் திரிசூலமும் உடுக்கையும் ஏந்தி அவர்கள் ஆடிய நடனம், அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.வாயிலிருந்து நெருப்பை உமிழ்வது,நெருப்பு வளையத்தினுள் நடனமாடுவது,மண்டையோட்டு மாலை அணிவது,பெரிய பெரிய சிவனின் உருவங்களை தாங்கி வந்தது என்பன போன்ற காட்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்கவைத்தது.ஜெகதல்பூரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த பிரம்மாண்ட ஆன்மீக ஊர்வலத்தில், வழிநெடுகிலும் மக்கள் மலர்களைத் தூவி வரவேற்பளித்தனர். சத்தீஸ்கரின் மண்ணில் ஒடிசாவின் கலைச் சிறப்பு சங்கமித்த இந்த நிகழ்வு, எல்லைகளைக் கடந்த பக்தியின் உன்னதத்தை உலகிற்கு பறைசாற்றுவதாக அமைந்தது!ஆவணி மாதத்தின் நிறைவு நாளில், பூதேஷ்வர் மகாதேவனின் அருள் பெறத் திரண்ட மக்களால் பஸ்தர் பிராந்தியமே நேற்று ஆன்மீகக் கடலில் மூழ்கித் திளைத்தது.