உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / சிலிண்டர் வேட்டை

சிலிண்டர் வேட்டை

இன்றைய தேதியில் தேசத்தின் தேசியப் பிரச்சினை எதுவென்று கேட்டால், எல்லைப் பாதுகாப்பு அல்ல; அது சமையல் எரிவாயு உருளைக்கான தட்டுப்பாடுதான். பாரத தேசமே ஒரு சிலிண்டருக்காக வீதியில் இறங்கி அலைபாய்கிறது.என்ன மாயமோ, என்ன மந்திரமோ தெரியவில்லை! ஊரில் உள்ள அத்தனை பேர் வீட்டு அடுப்பும் ஒரே நாளில் 'புஸ்'ஸென்று அணைந்துவிட்டதைப் போல, காஸ் ஏஜென்சி வாசல்களில் மக்கள் தவம் கிடக்கிறார்கள். அந்த வரிசையைப் பார்த்தால் திருப்பதி ஏழுமலையான் தரிசனமே தோற்றுவிடும் போலிருக்கிறது.'சிலிண்டர் இல்லாமல் வீட்டுப் படி ஏறினால் சோறு கிடையாது' என்று இல்லத்தரசிகள் 'அன்புக் கட்டளை' இட்டுவிட்டார்கள் போலும்! பாவம் ஆண்கள், அலுவலகத்திற்கு விடுமுறை போட்டுவிட்டு, சைக்கிளிலும் ஸ்கூட்டரிலும் காலி சிலிண்டரை வைத்துக்கொண்டு அலைவதைப் பார்த்தால் கல்நெஞ்சும் கரையும்.அதிர்ஷ்டவசமாக ஒரு சிலிண்டர் கிடைத்துவிட்டால், ஏதோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது போன்ற பெருமிதத்தோடு அதை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். போகிற வழியில் எவனாவது தட்டிப்பறித்துச் சென்றுவிடுவானோ என்கிற பயத்தில், அந்த இரும்பு உருளைக்கு கனத்த சங்கிலி போட்டு, 'லாக்கரில்' வைப்பது போலப் பூட்டுப்போடடு பாதுகாக்கின்றனர்.தங்கம் விலை உயர்ந்ததை விட இந்த இரண்டே நாளில் சிலிண்டர் விலை கருப்பு சந்தையில் ஜெட் வேகத்தில் விர்ரென்று உயர்ந்து கொண்டு போகிறதுஇந்தப் பிரச்சினைக்கு இப்போதைக்கு விடிவுகாலம் பிறக்காது என்று முடிவு செய்த சில இல்லத்தரசிகள், 'அம்மா காலத்து விறகு அடுப்பே மேல்' என்று அடுப்புக்கரியோடு மல்லுக்கட்டத் தொடங்கிவிட்டார்கள்.இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட இயற்கை உணவுப் பிரியர்கள், 'அடுப்பே இல்லாமல் அவல் உணவு செய்வது எப்படி? நெருப்பு இல்லாமல் நெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி?' என்ற பயிற்சி வகுப்புக்கு வருமாறு அழைப்பு விடுகின்றனர்.இந்தச் 'சிலிண்டர் அரசியல்' சாமானிய மக்களை இன்னும் எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகிறதோ?-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை