UPDATED : செப் 24, 2024 08:02 PM | ADDED : செப் 24, 2024 07:59 PM
மகாபாரத இதிகாசத்தில் பாண்டவ சகோதரர்களின் எதிரியாக விளங்கியவர்களில் ஜராசந்தன் என்ற மன்னன் முக்கியமானவன்.
மகத நாட்டு அரசன் பிருஹத்ரனின் இரு மனைவிக்கு இரண்டு துண்டுகளாக பிறந்து பின் ஜரா என்ற அரக்கியால் ஒன்று சேர்க்கப்பட்டவன் என்பதால் ஜராசந்தன் என்ற பெயரில் அழைக்கப்பட்டான்.
மிகவும் ஆற்றலும் வலிமையும் மிக்கவன், தனது மருமகன் கம்சனைக் கொன்றதால் கிருஷ்ணன் மீது மிகுந்த வெறுப்பு கொண்டவன்.இதன் காரணமாக கிருஷ்ணர் வாழ்ந்த மதுரா மீது 18 முறை படையெடுத்துச் சென்று அவரை அச்சுறுத்தியவன்.
கிருஷ்ணருக்கு வேண்டிய பல அரசர்களை போரில் வென்று அவர்களை தனது நாட்டிற்கு கொண்டுவந்து இரும்புக்கூண்டில் அடைத்து வைத்தவன்.
இவனை எப்படியும் வெல்லவேண்டும்,வெல்லவேண்டும் என்பதை விட போரிட்டு கொல்லவேண்டும் என்று முடிவு செய்த கிருஷ்ணன் யாராலும் வெல்ல முடியாத மமதையுடன் இருந்த ஜராசந்தனை சந்திக்க பீமனை யாசகம் கேட்கும் அந்தணர் போல அனுப்பிவைத்தான்.ஜராசந்தன் பீமன் யார் என்பதை அறியாமல் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க உன்னுடன் போரிட வேண்டும் என்கிறான்.ஜராசந்தன் போரிட சம்மதிக்கிறான்.ஜராசந்தனுக்கும்,பீமனுக்கும் 27 நாட்கள் போர் நடைபெறுகிறது,இந்தப் போர் மகாபாரதத்தில் மிகவும் விவரிக்கப்படுகிறது,பீமனால் ஜராசந்தனை எளிதல் கொல்லமுடியவில்லை, கடைசியில் கிருஷ்ணரின் ஆலோசனைப்படி ஜராசந்தனை இரு வேறு துண்டுகளாக்கி எதிரெதிர் திசையில் விட்டெறிந்த பிறகே ஜராசந்தன் இறந்தான்.வலிமையும் ஆற்றலும் இருந்தாலும் தீமையின் பக்கம் இருந்தால் துர்மரணமே கிடைக்கும் என்பதற்கு உதாரணமான ஜராசந்தனின் கதையை, கதகளி நாட்டிய நடனமாக சென்னை திருவான்மியூரில் உள்ள கலாச்சேத்ரா நாட்டிய பள்ளியில் நிகழ்த்தினர்.மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நாட்டிய நாடகத்தை பலரும் ரசித்துப் பார்த்தனர்.-எல்.முருகராஜ்.