தென் ஆப்ரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில், 'ஜி - 20' உச்சி மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. உலகளாவிய புவிசார் அரசியலில் நிலவும் குழப்பமான சூழல் மற்றும் பன்முகத்தன்மையுடன் முடிவெடுப்பதில் நீடித்த சிக்கல்களுக்கு இடையே இந்த உச்சி மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. 19 முக்கிய நாடுகள், ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆப்ரிக்க யூனியன் என்ற இரு பெரிய குழுக்கள், ஜி - 20 அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கின்றன. சொல்லப் போனால், 193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா., சபைக்கு பின், இரண்டாவது பெரிய அமைப்பு எதுவென்றால் அது ஆப்ரிக்க யூனியன் தான். 55 ஆப்ரிக்க நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. சர்வதேச அளவில் இந்த அமைப்புக்கு அங்கீகாரமும் இருக்கிறது. அதனால், ஆப்ரிக்க யூனியனை வைத்திருக்கும் தென் ஆப்ரிக்கா இந்த முறை, ஜி - 20 உச்சி மாநாட்டுக்கு தலைமை ஏற்றது பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருந்தது. அதே சமயம், இந்த மாநாட்டை முடக்கி போட, ஆரம்பம் முதலே அமெரிக்கா காய் நகர்த்தி வந்தது. வெள்ளை இனத்தவர்களுக்கு எதிராக இனவெறி படுகொலையை நிகழ்த்திய நாடு என குற்றஞ்சாட்டி, தென் ஆப்ரிக்காவை இழிவுபடுத்தியது. இறுதியாக மாநாட்டையும் அமெரிக்கா புறக்கணித்தது. சீனா, ரஷ்யா, அர்ஜென்டினா, மெக்சிகோ போன்ற நாடுகளின் தலைவர்களும் இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை. இதனால், பெரும் எதிர்பார்ப்புடன் கூடிய இந்த மாநாடு வெறும் சடங்காக முடிந்து விடுமோ என்ற அழுத்தம் தென் ஆப்ரிக்காவுக்கு ஏற்பட்டது. அதிலும், 'ஆப்ரிக்காவின் வளர்ச்சிக்கு முன்னுரிமை தரும் வகையில், முதல் முறையாக சொந்த மண்ணில் நடத்தும்போது இப்படி நடக்கலாமா' என, தென் ஆப்ரிக்க அரசு சங்கடப்பட்டது. ஆப்ரிக்காவின் வளர்ச்சிக்காக அரிய கனிமவளங்கள், தாதுக்களை பயன்படுத்திக் கொள்ளுதல், கடன் நிலைத்தன்மை, எரிசக்தி மாற்றத்திற்கு சர்வதேச நிதி உதவி ஆகியவற்றை கேட்டு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஜி - 20 உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்க தென் ஆப்ரிக்கா விரும்பியது. ஆனால், அந்நாட்டின் முன்னுரிமைகளை அமெரிக்கா நிராகரித்தது. மேலும், 'ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நிலைத்தன்மை' என்ற ஜி - 20 கருப்பொருளையும், 'அமெரிக்க எதிர்ப்பு' என அழைத்தது. தெற்கின் குரல் கடந்த, 2023ல், 'உலகளாவிய தெற்கின் குரல்' என்ற கருப்பொருளுடன் பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக இந்தியாவில் இம்மாநாட்டை நடத்தினார். அப்போது அது வளரும் நாடுகளின் கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது. அதன்பின் பிரேசிலில் நடந்த ஜி - 20 உச்சி மாநாட்டிலும் அதே கருத்துகள் எதிரொலித்தன. எனவே, 'உலகளாவிய தெற்கின் குரல்' என்ற கருப்பொருள் ஜோஹனஸ்பர்க் உச்சி மாநாட்டிலும் பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு இந்தியா கைகொடுக்க, இந்தோனேஷியா, பிரேசில் நாடுகளும் இணங்கி வந்தன. அமெரிக்கா இந்த மாநாட்டை புறக்கணித்தாலும், எந்த நோக்கத்திற்காக நடத்தப்பட்டதோ அது நிறைவேறி இருக்கிறது. அந்த வகையில் மாநாடு வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இந்தியா. தற்போதைய சர்வதேச அரசியலில் சில முக்கியமான முடிவுகள் ஒருதலைபட்சமாகவும், அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அமைப்புகளை மீறியும் எடுக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான முடிவுகள் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு வெளியே எடுக்கப்படுகிறது. அதேபோல், ஐ.நா.,வின் பருவநிலை மாற்ற மாநாட்டில் வளர்ந்த நாடுகள் எடுக்கும் ஒருதலைபட்சமான முடிவே ஓங்கி நிற்கிறது. வர்த்தக விதிகளும், உலக வர்த்தக அமைப்புக்கு வெளியே, அதுவும் அதன் கட்டமைப்புகளுக்கு எதிராக எடுக்கப்படுகிறது. அப்படி ஒரு நிகழ்வு தென் ஆப்ரிக்கா தலைமையில் நடந்த ஜி - 20 உச்சி மாநாட்டில் நடக்காமல் பார்த்துக்கொண்டது இந்தியா தான். ஆறு அம்ச அஜண்டா இந்த மாநாட்டில் இந்தியா முன்வைத்த ஆறு அம்ச நிகழ்ச்சி நிரல் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டது. மறுசுழற்சியை மேம்படுத்த முக்கிய கனிமவளங்களின் வினியோகம், நகர்ப்புற சுரங்கம், இரண்டாம் நிலை பேட்டரி உற்பத்தி போன்ற திட்டங்களை, சரியான நேரத்தில் இந்தியா முன்வைத்தது. இதனால், 'சப்ளை செயின்' எனப்படும், வினியோக தொடரில் ஏற்பட்டிருந்த அழுத்தம் குறைந்தது. அரிய வகை கனிமவளங்கள் மற்றும் தாதுக்களின் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடு விதித்து மொத்த உலக நாடுகளையும் அதிர வைத்தது நினைவு இருக்கலாம். அதன் காரணமாக, வரிப் போரை கைவிட்டு, சீனாவுடன் இணக்கமாக செல்லும் நிலைபாட்டையும் அமெரிக்கா எடுத்திருந்தது. கனிமவளங்கள் விநியோக தொடர் விவகாரத்தில், அந்த பாணியை தான் இந்தியா முன் வைத்தது. அந்த யோசனைக்கு பெரும் வரவேற்பும் கிடைத்தது. எனினும், 2026ம் ஆண்டு ஜி - 20 நாடுகளின் தலைமை அமெரிக்கா வசம் செல்லவுள்ளது. அப்போது வளரும் நாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எல்லாம் அமெரிக்கா கலைத்து விடக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது. ஆனால், அதற்கு சரியாக ஓராண்டு இருக்கிறது. தெற்கு நோக்கிய உலகளாவிய நலனுக்கான மாற்றத்திற்கு அந்த கால அவகாசமே போதுமானது. 'உலக பொருளாதாரத்தின் மையம் மாறிக் கொண்டிருக்கிறது' என ஜி - 20 உச்சி மாநாட்டில் கனடா பிரதமர் கார்னே கூறியிருந்ததும் விரைவில் நிதர்சனமாகவுள்ளது. ஒருவேளை, அந்த மாற்றத்திற்கு இடையூறு ஏற்பட்டால், அதை தடுத்து நிறுத்த அப்போதும் இந்தியா வின் பங்களிப்பு அவசியம். ஏனெனில், மாற்றம் ஒன்றே மாறாதது. டி.எஸ்.திருமூர்த்தி, ஐ.எப்.எஸ்., (ஓய்வு) ஐ.நா.,வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தர பிரதிநிதி