உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்தனைக் களம் / மீண்டும் எழுகிறதா கச்சத்தீவு பிரச்னை?

மீண்டும் எழுகிறதா கச்சத்தீவு பிரச்னை?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சமீபத்தில் ராமேஸ்வரம் சென்ற முதல்வர் ஸ்டாலின், இலங்கை உடனான கச்சத்தீவு பிரச்னையை மீண்டும் எழுப்பி உள்ளார். குறிப்பாக, மத்தியில் ஆளும், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்டு, அந்தக் கடல் பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் தொழில் செய்ய வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை கருத்தில் கொள்ளும்போது, இந்தப் பிரச்னை, மீண்டும் நம் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கி அங்கலாய்க்கிறது. முதல்வர் ஸ்டாலினின் ராமேஸ்வரம் பயணத்துக்கு முன், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே, அதிரடியாக கச்சத்தீவிற்கு பயணம் செய்தது, அந்நாட்டில் மட்டுமே பேசுபொருளாக இருந்தது. தமிழகத்தில் எந்த அதிர்வலைகளையும் ஏற்படுத்தவில்லை. இலங்கை அரசும், அந்நாட்டை ஆளும் ஜே.வி.பி., கட்சியினரும் இல்லையென்று சொன்னாலும், அனுரவின் கச்சதீவு விஜயம் குறித்து இங்கே தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில், அக்கட்சியின் தலைவரான விஜய் பேசினார். விஜய் அன்று, தன், 35 நிமிட உரையில், கச்சத்தீவை பிரதமர் நரேந்திர மோடி மீட்டெடுக்க வேண்டும் என்பது குறித்து, அரை நிமிடமோ, ஒரு நிமிடமோ தான் பேசி இருப்பார். அவரது உரையை அக்கு வேறு ஆணி வேறாக அலசிய எதிர்க்கட்சியினரும், பத்திரிகையாளர்களும் கச்சத்தீவு குறித்து, பிரதமருக்கு விஜய் விடுத்த வேண்டுகோளை கண்டுகொள்ளவே இல்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக, சில மோடி 'பக்தர்கள்' தான், விஜயின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர். அவர்களும் கச்சத்தீவை மீட்பது குறித்து வாய் திறக்கவில்லை. ஆதிக்க ஜாதி இலங்கை அதிபர் அனுரவின் கச்சத்தீவு பயணமே, இலங்கையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள, அவரது அரசு உறுதி அளித்துள்ள மாகாண சபை தேர்தலை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, இரு நாட்டு தமிழ் மீனவர்களிடையே இருக்கும் பிரச்னைகளை முன்வைத்து, கச்சத்தீவு பயணத்தின் மூலம் அவர்களை மீண்டும் கவரமுடியும் என்ற தவறான எண்ண ஓட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாகும். கடந்த ஆண்டு, இலங்கையில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், தமிழ் அரசியல் தலைமைகளிடையே நிலவிய ஒற்றுமை இன்மையால், ஆளும் கட்சி அந்த பகுதிகளில் எதிர்பாராத வெற்றிகளை குவித்தது. குறிப்பாக, தமிழ் மீனவர்களின் ஓட்டுகளை அந்த கட்சி பெற்றது. அதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. ஒன்று, தமிழ் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களில், மீனவர்களும் அடங்குவர். அவர்கள் எப்போதுமே, யாழ்ப்பாண நகர்பகுதியை மையப்படுத்தி அரசியல் செய்யும், உயர் ஜாதியினர் ஓட்டளிக்கும் தமிழ் கட்சிகளுக்கு எதிரணியில் இருந்திருக்கின்றனர். முதலில், அவர்களில் ஒருவராக இருந்த பிரபாகரன் தலைமையி லான விடுதலை புலிகள் அமைப்பை ஆதரித்தனர். இனப்போர் மு டிந்த காலம் துவங்கி, யாழ்ப்பாண சமூகம் கரித்துக்கொட்டிய மத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி., கட்சிக்கு ஓட்டளித்து வந்தனர். சமீபகாலங்களில் அவரது அரசியல் வீழ்ச்சிக்கு பின், ஆளும் ஜே.வி.பி., கட்சிக்கு பார்லிமென்ட் தேர்தலில் ஓட்டளித்தனர். குறிப்பாக, ஜே.வி.பி., தலைமை, சிங்கள மீனவ சமுதாயத்தை சார்ந்ததும், அவர்களும் தென் இலங்கையில் ஆதிக்க ஜாதியினரை அரசியல் ரீதியாக எதிர்த்து வந்ததும் கூட ஒரு காரணம் தான். ஆனால், பார்லிமென்ட் தேர்தலில், தமிழ் தலைமைகளுக்கு அளித்த மரண அடியை தொடர்ந்து, அவர்கள் மீது பச்சாதாபப்பட்டு மட்டுமே, வடக்கு- கிழக்கு மாகாண மீனவர்களும், பிற சமூகத்தினரும், இந்த ஆண்டு நடந்த நாடு தழுவிய உள்ளாட்சி தேர்தல்களில் அவர்களுக்கே ஓட்டளித்தனர். அதனால், இழந்துவிட்ட தமிழ் மீனவர் ஓட்டுகளையும் குறிவைத்தே ஜனாதிபதி அனுர, கச்சத்தீவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். உண்மை என்னவோ, கச்சத்தீவு பகுதியில் மீன் வளங்களே இல்லை. அதுவும் தங்களது சமீபத்திய கடல் பகுதியிலேயே அதிகமாக மீன் வளங்கள் இருக்கும்போது, குறிப்பாக இலங்கை வட மாகாண மீனவர்கள், 15 கி.மீ., தொலைவில் இருக்கும் கச்சத்தீவு பகுதிக்கு ஏன் வரப்போகின்றனர்? அது போன்றே, கச்சத்தீவு பகுதியில் மீன்வளம் இல்லவே இல்லை என்பதை, நம் ராமேஸ்வரம் மீனவர்களும் நன்றாகவே அறிந்துள்ளனர். அந்த வகையில், கடந்த பல ஆண்டுகளாக, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற குரலும், கோரிக்கையும், கருணாநிதி, ஜெயலலிதா தொடர்ந்து தற்போதைய முதல்வர் ஸ்டாலின் போன்றோரிடமிருந்து மட்டுமே அவ்வப்போது எழுந்து வந்துள்ளது. மீனவர்களும், பிற அரசியல் தலைவர்களும் கூட, சமீப காலங்களில் அது குறித்து அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்பதே உண்மை. அரிய கனிமங்கள் இது இப்படி இருக்க, அனுரவின் கச்சத்தீவு பயணத்திற்கு, நம் நாடு குறித்த ஒரு காரணமும் உண்டு. கடந்த ஆண்டு நம் பார்லிமென்ட் தேர்தல் காலத்தில், பிரதமர் மோடியும், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரும், கச்சத்தீவை 1974- - 76 காலகட்டத்தில் அப்போதைய இந்திரா அரசே இலங்கைக்கு, 'தாரை வார்த்தது' என்று பொருள்படும்படி, வடமாநிலங்களில் பிரசாரம் செய்தனர். ஆனால், அது எடுபடவில்லை. ஒன்று, அவர்களுடைய பிரசாரம், தமிழகத்தில் பார்லிமென்ட் தேர்தல் முடிந்த பின்னரே முன்னெடுக்கப்பட்டதால், வடமாநிலங்களில் எடுபடவில்லை. வடமாநில வாக்காளர்களுக்கு கச்சத்தீவு பிரச்னை என்னவென்றே புரியவில்லை. அதைவிட குறிப்பாக, நம் முன்னாள் வெளியுறவு துறை ராஜதந்திரிகள் சிலர், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஆதரித்து தேசிய பத்திரிகைகளில் பேட்டி கொடுத்தனர். அவர்கள் கூறியது போல, கச்சத்தீவிற்கு பதிலாக, கன்னியாகுமரி ஒட்டிய கடலில், 'வாட்ஜ் பாங்க்' என்று அறியப்படும் பகுதியை இந்தியாவிற்கு இலங்கை கொடுத்தது. அப்போதைய பாதுகாப்பு சூழலில், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கடற் படையின் ஊடுருவலை சமாளிக்க, நமக்கு வாட்ஜ் பா ங்க் பகுதியின் மீது ஆதிக்கம் தேவை இருந்தது. அது போன்றே, அந்த கடல் பரப்பின் அடியில், அரிய கனிம வளங்கள் புதைந்திருப்பதும், நம் அரசிற்கு தெரிந்தே இருந்தது. உள்நாட்டு பிரச்னை எது எப்படியோ, அப்போதைய இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, இந்தியாவில் உயிர்த்தெழுப்பிக்கப்பட்ட கச்சத்தீவு பிரச்னை, நம் நாட்டின் உள்நாட்டு பிரச்னை என்றார். அதை மீறி, கச்சத்தீவை திருப்பி தரவேண்டும் என்று இந்திய அரசு, இலங்கை அரசிடம் எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார். இதே பதிலை தான், த.வெ.க., தலைவர் விஜயின் மதுரை பேச்சிற்கு பின், இலங்கை பார்லிமென்டில் பதில் அளித்த தற்போதைய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தும் தெரிவித்தார். எனினும், அதை தொடர்ந்து யாழ்ப்பாணம் விஜயம் செய்த அதிபர் அனுர, கச்சத்தீவிற்கு சென்று வந்ததை நம் அரசு தலைமைகளுக்கு விடும் செய்தியாகவும் பார்க்க வேண்டும். அதாவது, நம் தேர்தல் பிரசாரத்தில் இரு நாட்டு விவகாரங்களை அனாவசியமாக உள்ளிழுப்பதன் மூலம், அனுர அரசிற்கு அனாவசியமான சங்கடங்களை தோற்றுவிக்காமல் இருப்பதற்கான கோரிக்கையே, அனுரவின் கச்சத்தீவு விஜயம். சிந்தனைக்களம் -என்.சத்திய மூர்த்தி சர்வதேச அரசியல் ஆய்வாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

chinnamanibalan
அக் 06, 2025 11:35

கச்சத்தீவை இலங்கைக்கு அன்று தாரை வார்த்து கொடுத்தவர் பிரதமர் இந்திரா காந்தி. அப்போது தமிழக ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக போராடவில்லை மாறாக அமைதியாக இருந்தது. திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது மவுனமாக இருந்து விட்டு, தற்போது பேசிப் பயனென்ன? கடந்த கால நிகழ்வுகளை மக்கள் மறந்து இருப்பார்கள் என்ற நம்பிக்கையிலா?


veeramani
அக் 06, 2025 09:27

பண்டாரநாயகா இந்திரா ஒப்பந்தம்... இதிலும் இந்திய அரசு சாணக்கியத்தனமாக நடந்தது. கச்சத்தீவு ..சுமார் 12 சதுரகிமீ பரப்பு. நல்லதண்ணீர் இல்லை. சில தென்னைமரங்கள் மட்டுமே உள்ள ஒரு தீவு. அங்கு கிறிஸ்துவ சர்ச் உள்ளது. 50, 60 கலீல் கள்ளக்கடத்தல்க்கு பயன்படுத்தப்பட்ட தீவு இது. இது அறிந்த பின்னர்தான் இந்திரா கச்சத்தீவை இலங்கையிடம் விற்றுவிட்டு அத்தகு பதில் மிக பெரிய கடல் அரேவை பெற்றார். அதாவது கன்யாகுமரியில் தேங்கும் தென் கிழக்கும் உள்ள பவழ பாறை பகுதியை பெற்றுக்கொண்டார். இங்குதான் நாட்டுரல் காஸ் உள்ளது பெட்ரோல் உள்ளது சும்ம சிறு குழந்தை போல கச்சத்தீவு பற்றி இந்தியர் எவரும் பேசக்கூடாது


ஆரூர் ரங்
அக் 06, 2025 10:52

நிஜமாகவே காஸ் இருந்தால் இத்தனை ஆண்டுகளாக ஏன் தோண்டி எடுக்கவில்லை? ராமநாதபுரம் அரசர் அளித்த கச்சத்தீவை அவரிடம் அல்லது தமிழக அரசிடம் ஒப்புதல் பெறாமல் எப்படி இலங்கைக்கு தாரை வார்த்தார்கள். காவிரி பிரச்சினை மட்டுமல்ல கச்சத்தீவு விஷயத்திலும் இந்திரா தமிழகத்திற்கு துரோகம் இழைத்தார்.


rama adhavan
அக் 06, 2025 07:44

அடுத்த நாட்டுக்கு கொடுத்த ஒரு பகுதியை மீண்டும் எப்படி நம்மால் திருப்பி வாங்கமுடியும் அதை எப்படி ஸ்ரீலங்கா நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதையும் முதல்வர் ஸ்டாலின் சொல்லலாமே?


Rajasekar Jayaraman
அக் 06, 2025 05:41

நீலிகண்ணீர் வடித்து.


R GOPAL
அக் 06, 2025 05:38

தேர்தல் வந்தால் கச்சத்தீவு,NeeT,இந்தி எதிர்ப்பு கூடவே வரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை