மதுரையில் பழிக்குப்பழியாக தொடரும் கொலை; காளி தாயார் உட்பட 7 பேர் கைது
மதுரை : மதுரையில் பழிக்குப்பழியாக தி.மு.க., பிரமுகர் வி.கே.குருசாமிக்கும், அ.தி.மு.க., பிரமுகர் ராஜபாண்டி தரப்பிற்கும் 22 ஆண்டுகளாக தொடரும் முன்பகையால் இதுவரை 22 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடைசியாக கொலை செய்யப்பட்ட 'கிளாமர்' காளி கொலை வழக்கில் பிரபல ரவுடி வெள்ளை காளியின் தாயார் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங்போர்டு 'கிளாமர்' கார்த்திக் என்ற காளீஸ்வரன் 32, மார்ச் 22இரவு தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் வெள்ளை காளி கூட்டாளிகளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 'கிளாமர்' கார்த்திக் மதுரை மாநகராட்சி தி.மு.க., முன்னாள் மண்டல தலைவர் வி.கே. குருசாமியின் சகோதரி மகன். குருசாமிக்கும், அ.தி.மு.க., முன்னாள் மாநகராட்சி மண்டல தலைவர் ராஜபாண்டிக்கும் அரசியல் ரீதியான பகை 22 ஆண்டுகளாக குடும்ப பகையாக மாறி இருதரப்பிலும் மாறி மாறி 22 கொலைகள் நடந்தன.இருநாட்களுக்கு முன் 'கிளாமர்' காளி கொலை வழக்கில் தொடர்புடைய சுள்ளான் பாண்டி, வேறு ஒரு வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை முன்கூட்டியே கைது செய்ய தவறிய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இந்நிலையில் காளி கொலை வழக்கில் சதி திட்டம் தீட்டியதாக வெள்ளை காளியின் தாயார் மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த ஜெயக்கொடி 65, கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே இரு வழக்குகள் உள்ளன.மேலும் கொலை வழக்கில் வெள்ளை காளியின் கூட்டாளிகள் சக்கிமங்கலம் நந்தகுமார் 20, ஸ்டேட் பாங்க் காலனி அசோகன் 32, காமராஜர்புரம் நவீன்குமார் 22, சிவகங்கை திருப்புவனம் மணல்மேடு முத்துகிருஷ்ணன் 18, பாலகிருஷ்ணன் 26, சென்னை கொளத்துார் கார்த்திக் 28, கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் பாலகிருஷ்ணனுக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
யார் அந்த வெள்ளை காளி
காளி பெயரில் பல ரவுடிகள் இருப்பதால், எளிதில் அடையாளம் காண 'பளீச்'சென இருந்ததால் 'வெள்ளை' காளி 38, என போலீசார் அடைமொழி வைத்தனர். உண்மையான பெயர் காளீஸ்வரன். திருமணமானவர். உட்கட்சி தேர்தலில் போஸ்டர் ஒட்டிய தகராறில் குருசாமிக்கும், ராஜபாண்டிக்கும் மோதல் ஏற்பட, 2003ல் ராஜபாண்டி தரப்பைச் சேர்ந்த சின்னமுனுசு கொலை செய்யப்பட்டார். இவர் வெள்ளை காளியின் சகோதரர். அதிலிருந்து ஆரம்பித்ததுதான் பழிக்குப்பழி, ரத்தத்திற்கு ரத்தம்.வெள்ளை காளி மீது 9 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள், 30க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் உள்ளன. தற்போது புழல் சிறையில் உள்ளார். சிறையில் இருந்தே குருசாமி தரப்பினரை 'போட்டு' தள்ள திட்டம் வகுத்து கொடுத்து வருவதாகவும், சிறை நட்பால் புதுப்புது கூட்டாளிகளை உருவாக்குவதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இவரது வழிகாட்டுதல்படிதான் பெங்களூருவில் குருசாமி மீது கொலை முயற்சி, 'கிளாமர்' காளி கொலை நடந்தது என்கின்றனர் போலீசார். ஆனால் 'கிளாமர்' காளி கொலையில் வெள்ளை காளி பெயர் சேர்க்கப்படவில்லை. கொலையாளிகளை காவலுக்கு எடுத்து விசாரிக்கும்போது அவர்கள் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படும்.