அரசு மருத்துவமனையில் குப்பை; ஒரு மாதமாக அகற்றாத அவலம்
திருப்பூர், தாராபுரம் ரோட்டில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. புறநோயாளிகளாக, 2,500 பேர் தினசரி வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக, 820 பேர் தங்கி சிகிச்சை பெறும் வசதியுள்ளது. கடந்த ஒரு மாதமாக, பிளாஸ்டிக் கழிவு, குப்பைகள், உணவுக்கழிவுகள் சேர்ந்து, பத்து டன்னுக்கு மேல் குப்பை தேங்கியுள்ளது. துர்நாற்றம் வீசாமல் இருக்க, குப்பை மீது ஸ்பிரே அடிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும், குப்பையில் இருந்து ஈக்கள் படையெடுக்கின்றன. வரும் நாட்களில் குப்பை அதிகமாவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்படும் வாய்ப்பும் உருவாகும். அதிகாரிகள் கூறுகையில், '' மருத்துவக் கழிவு, உணவக விடுதி கழிவுகள் ஒப்பந்த நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு விடுகிறது. வெளியிடத்தில் கிடக்கும் குப்பைகள் வழக்கமாக இரண்டு அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை மாநகராட்சி மூலம் எடுத்துச் செல்லப்படும். நவ. முதல் வாரம் குப்பை எடுத்தது. அதன் பின் குப்பை எடுக்க லாரிகள் வரவில்லை. இந்த வாரம் குப்பைகள் அகற்றப்பட்டு விடும் என்று மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் கூறினர்'' என்றனர்.