70 வயதை தாண்டியவர்களுக்கு இலவச காப்பீடு வரவேற்கத்தக்கது!
மற்ற சில நாடுகளை ஒப்பிடுகையில், நம் நாட்டில் மருத்துவ காப்பீடு எடுத்துள்ளவர்கள் எண்ணிக்கை குறைவே. அதாவது, மொத்த மக்கள் தொகையில், 27 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவ காப்பீடு திட்டங்களில் சேர்ந்துள்ளனர். அதனால் தான், 'ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா'வின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும், ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதன் வாயிலாக, நாடு முழுதும் உள்ள ஆறு கோடி மூத்த குடிமக்களை உள்ளடக்கிய, 4.5 கோடி குடும்பங்கள் பயனடையும். இத்திட்டத்தால், மத்திய அரசுக்கு முதலில், 3,347 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இந்தத் தொகை, திட்டத்தின் தேவைக்கேற்ப அதிகரிக்கப்பட உள்ளது. மூத்த குடிமக்களுக்கு அவர்களது வருமானம் அல்லது சமூக பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல், இந்த காப்பீடு வழங்கப்பட உள்ளதால், 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன் பெறலாம். ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்கிய யோஜனாவின் கீழ், 12.34 கோடி குடும்பங்களை சேர்ந்த, 55 கோடி தனி நபர்களுக்கு மருத்துவ காப்பீடு தரப்பட்டுள்ளது.கடந்த லோக்சபா தேர்தலின் போதே, பா.ஜ., கட்சி தரப்பில் இது தொடர்பாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழி தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது.தனியார் நிறுவனங்களில் மருத்துவ காப்பீடு எடுத்துள்ளவர்கள், இ.எஸ்.ஐ., எனப்படும், ஊழியர்களுக்கான அரசின் ஈட்டுறுதி திட்டத்தில் சேர்ந்துள்ளவர்களும், மத்திய அரசின் இதர காப்பீடு திட்டங்களில் சேர்ந்துள்ளவர்களும், தங்களின் பழைய திட்டத்தில் தொடரலாம் அல்லது இப்புதிய திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் சேரும் மூத்த குடிமக்களுக்கு தனித்துவமான அடையாள அட்டை வழங்கப்படும். அதுமட்டுமின்றி, பாரத் ஜன் ஆரோக்கியா திட்டத்தில் ஏற்கனவே சேர்ந்த குடும்பங்களில் உள்ள, 70 வயதிற்கும் மேற்பட்டவர்கள், ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை கூடுதலாக, 'டாப் ஆப் கவரேஜ்' பெறலாம். 70 வயதிற்கு குறைவான மற்ற குடும்ப உறுப்பினர்களுடன், இந்த கூடுதல் காப்பீட்டு தொகையை பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை.சில குறைபாடுகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பயனுடையது; திட்டம் அமலுக்கு வரும் போது, ஏராளமானவர்கள் இதில் சேர்ந்து பயனடைவர். நம் நாட்டில் சிறந்த மருத்துவ காப்பீடு வசதிகளை பெறுவதில், ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. சில மாநிலங்களில் ஏழை மக்களுக்கான மருத்து காப்பீட்டு திட்டங்கள் அமலில் இருந்தாலும், ஆயுஷ்மான் பாரத் வாயிலாக, 70 வயதை கடந்த ஒவ்வொரு மூத்த குடிமகனுக்கும் கட்டுப்பாடுகள் இல்லாமல், மருத்துவ காப்பீடு வசதியை மத்திய அரசு அளித்துள்ளது மிகப்பெரிய விஷயமே.கூட்டு குடும்பங்கள் அல்லாத தனிக்குடித்தனங்களும், மனிதர்களின் வாழ்நாளும் அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில், மருத்துவ சிகிச்சை செலவுகள், பலருக்கும் கவலை தரும் விஷயமாக மாறிவிட்டன. பல குடும்பத்தினரால், இத்தகைய செலவுகளை சமாளிக்க முடியவில்லை. அதனால் தான், ஓய்வூதிய காலத்தை சிரமமின்றி கழிக்கவும், அதற்காக ஒரு நிதியை உருவாக்கவும், ஊழல் போன்ற முறைகேடுகளில் பலர் ஈடுபடுவதும் தொடர்கிறது.எனவே, தேவைப்பட்டால் தற்போதைய திட்டத்தில் உள்ள இடர்பாடுகளை நீக்கவும், பிற நாடுகளில் பின்பற்றப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் உள்ள நல்ல அம்சங்களை சேர்க்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும். அத்துடன், குறிப்பிட்ட நோய்களுக்கு தான் மருத்துவ காப்பீடு உண்டு; மற்றவற்றுக்கு கிடையாது என்ற நிலைமையை அகற்றுவதும் அவசியம். மொத்தத்தில், 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்குவது என்ற மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கதே.