உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / பிரஜ்வல் குற்றம் புரிந்திருந்தால் தண்டிக்கப்படுவது அவசியமே!

பிரஜ்வல் குற்றம் புரிந்திருந்தால் தண்டிக்கப்படுவது அவசியமே!

லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து வரும் இந்தச் சூழலில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.பி.,யுமான, பிரஜ்வல் ரேவண்ணா மீது கூறப்பட்டுள்ள பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு களும், அவற்றை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகி உள்ள ஆபாச வீடியோ காட்சிகளும், கர்நாடகா மட்டுமில்லாமல், தேசிய அரசியல் களத்திலும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. இது, நாட்டு மக்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயமாகவும் அமைந்துள்ளது. பாலியல் ரீதியாக பல பெண்களை, பிரஜ்வல் துன்புறுத்தியது தொடர்பாக, 3,000க்கும் மேற்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த விவகாரத்தில், கர்நாடக ஆளும் கட்சியான காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜ.,வுக்கும் இடையே வார்த்தை போரும் நடந்து வருகிறது. அதற்கு காரணம், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன், பா.ஜ., கூட்டணி வைத்திருப்பது தான். பிரஜ்வல் மீதான பாலியல் புகார்கள் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து, கர்நாடக மாநில அரசு விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில், பிரஜ்வலின் தந்தையான எம்.எல்.ஏ., ரேவண்ணாவும், பெண்களை மானபங்கம் செய்தது மற்றும் பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், 'பிரஜ்வல் போன்றவர்களின் செயல்பாடுகளை, எந்த வகையிலும் பொறுத்துக் கொள்ள முடியாது; அப்படிப்பட்டவர்கள் தண்டிக்கப் படுவர்' என, உறுதி அளித்துள்ள பிரதமர் மோடி, பிரஜ்வல் வெளிநாடு தப்பிச் செல்ல, கர்நாடக காங்கிரஸ் அரசே காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.'பிரஜ்வல் விவகாரத்தில், அரசு தரப்பில் எந்த விதமான குறுக்கீடுகளும் இருக்காது' என, முதல்வர் சித்தராமையா உறுதி அளித்தாலும், சிறப்பு புலனாய்வு குழுவினர் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதில், பல சவால்களை சந்தித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. பிரஜ்வல் மற்றும் அவரது தந்தைக்கு எதிராக புகார் தரும்படி, சில தரப்பில் நிர்ப்பந்தம் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களை வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் கண்டறிவதிலும், அவர்களிடம் இருந்து புகார்களை பெறுவதிலும் பிரச்னைகள் உள்ளன. அதற்கு காரணம், பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர், தேவகவுடா குடும்பத்தினரின் கோட்டையாக கருதப்படும் ஹாசன் மாவட்டத்தில் உள்ள தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. பிரஜ்வலுக்கு எதிராக புகார் கொடுத்தால், சமூக ரீதியாக தங்களுக்கு பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படும்; விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும் என, பாதிக்கப்பட்ட பெண்கள் அஞ்சுவதாகவும் கூறப்படுகிறது.ஏனெனில், நம் சமூகத்தில் பாலியல் ரீதியாக குற்றம் புரிந்தவர்களை விட, அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களே மிக மோசமான முறையில் நடத்தப்படுகின்றனர். இந்த விவகாரம் எல்லாம் சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு சவாலாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்கள், தைரியமாக முன்வந்து புகார் கொடுத்தால், அவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்; எந்த விதமான அச்சுறுத்தல்களும், நிர்ப்பந்தங்களும் அவர்களுக்கு ஏற்படாது என்பதை, மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் பல பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வருவர். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் எனில், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, வெளிநாட்டிற்கு தப்பி ஓடியுள்ள பிரஜ்வலுக்கு எதிராக, 'புளூ கார்னர் நோட்டீஸ்' விடுக்கப்பட்டு உள்ளதால், அவரை கைது செய்து அழைத்து வந்து, சட்டத்தின் முன் நிறுத்தி, குற்றம் செய்தது உண்மையெனில், கடும் தண்டனை வாங்கித் தர வேண்டியதும் கட்டாயமாகும். அப்போது தான், செல்வாக்குள்ள அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட எவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பது உறுதியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை