தற்போதைய காலகட்டத்தில், சிறிய அளவிலான மருத்துவ சிகிச்சைகளுக்கும், பெரிய அளவில் பணம் செலவிட வேண்டிய நிலை உள்ளது. அதனால், மருத்துவ காப்பீடு என்பது, வாலிப வயதினர், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் முக்கியமானது. இதுவரை, 65 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால், அவர்களுக்கு மருத்துவ காப்பீடு எடுக்க முடியாத நிலை இருந்தது. அதில், தற்போது மாற்றம் செய்துள்ளது, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அமைப்பு. ஆம்... மருத்துவ காப்பீடுகளுக்கான பிரதான விதிகளில் திருத்தங்கள் செய்துள்ளது. இதனால், 65 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால், அவர்கள் சொந்தமாகவோ அல்லது அவர்களுக்காக பிள்ளைகளோ மருத்துவ காப்பீடு எடுக்க முடியும். எதிர்பாராத மருத்துவ செலவுகளுக்கு எதிராக, போதுமான பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். மேலும், அதிகபட்ச வயது வரம்பை ரத்து செய்துள்ள அதே வேளையில், அனைத்து காப்பீடு நிறுவனங்களும், தங்களிடம் மருத்துவ காப்பீடு பெற விரும்பும் அனைத்து வயதினருக்கும் மருத்துவ காப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தெரிவித்துள்ளது. மூத்த குடிமக்கள், மாணவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்குமான பிரத்யேக மருத்துவ காப்பீடு திட்டங்களை, காப்பீடு நிறுவனங்கள் அறிமுகம் செய்யலாம் என்றும் கூறியுள்ளது. அத்துடன், மருத்துவ காப்பீட்டில், சில வகை சிகிச்சைக்கான காத்திருக்கும் காலத்தை, 48 மாதங்களில் இருந்து, 36 மாதங்களாகவும் குறைத்துள்ளது. ஏற்கனவே இருக்கும் நோய்கள் குறித்து பாலிசிதாரர் தெரிவித்திருந்தாலும் சரி; தெரிவிக்காமல் இருந்தாலும் சரி; 36 மாதங்களுக்கு பிறகு, காப்பீடு கிளைம்களை நிறுவனங்கள் நிராகரிக்க முடியாது என்றும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.இந்த நடவடிக்கை வாயிலாக எதிர்பாராத மருத்துவ செலவுகளால், முதியோர்களும், அவர்கள் சார்ந்திருக்கும் குடும்பத்தினரும் இனி பெருத்த அதிர்ச்சிக்கு ஆளாவது தவிர்க்கப்படும். வரும், 2050ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, 20 சதவீதத்தை தாண்டும் என, ஐ.நா., மக்கள் தொகை அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், ஒவ்வொருவரின் வாழ்நாள் காலம் அதிகரிக்கும் சூழலில், 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு காப்பீடு என்பது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அறிவிக்கும் பாலிசிகள், நுகர்வோருக்கு சாதகமானதாக மாற்றப்பட வேண்டியதும் அவசியமாகும். மருத்துவ காப்பீடு எடுத்தவர்கள், சிகிச்சை பெற்ற பின், அதற்கான பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து பெறுவதில் சந்திக்கும் சிக்கல்கள், சிரமங்கள் குறைக்கப்பட வேண்டும்.இந்த விவகாரத்தில் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் நம்பிக்கையின்மை பிரச்னைகள் தீர்க்கப்பட்டால், ஏராளமானோர் மருத்துவ காப்பீடு எடுக்க தைரியமாக முன்வருவர். மேலும், மருத்துவ காப்பீடுகள் எடுக்கும் போது, அவற்றில் உள்ள நன்மைகளை மட்டுமே ஏஜன்ட்கள் சொல்லுகின்றனர்; என்னென்ன சிக்கல்கள் உருவாகும், எந்தெந்த நோய்களுக்கு காப்பீடு கிடையாது என்பதை விளக்கமாக தெரிவிப்பதில்லை. இதுவும் வாடிக்கையாளர்களை துன்புறுத்தலுக்கு ஆளாக்குகிறது.எனவே, மருத்துவ காப்பீட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் தொந்தரவில்லாத, 'க்ளைம் செட்டில்மென்ட்' போன்றவை, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு முக்கியமானது. அத்துடன் தவறான நபர்கள், காப்பீடு தரும் நிறுவனங்களை ஏமாற்றுவதும், முறைகேடுகளில் ஈடுபட்டு க்ளைம் பெறுவதும், தேவையற்ற சேவைகளுக்கு பணம் பெறுவதும் தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு தீவிரமான கண்காணிப்பு அவசியம். அதனால், தற்போதைய மாற்றங்களுடன், மேலும் பல மாற்றங்களும் அவசியம்.