உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் வரவேற்கத்தக்கதே!

ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் வரவேற்கத்தக்கதே!

கடந்த மாதம் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, டில்லி செங்கோட்டையில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, 'சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி.,யில் மாற்றங்களை செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது மக்களுக்கு தீபாவளி பரிசாக அமையும்' என்று அறிவித்தார். இதன்படி, சமீபத்தில் டில்லியில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், தற்போது, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என, நான்கு அடுக்குகளாக உள்ள ஜி.எஸ்.டி., விகிதத்தை, 5, 18 என, இரு அடுக்குகளாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில், சிகரெட், புகையிலை பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு மட்டும், 40 சதவீத சிறப்பு வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை, வரும், 22ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். நாடு முழுதும் சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி.,யானது, 2017 ஜூலை, 1 முதல் அமலுக்கு வந்தது. தற்போது, எட்டு ஆண்டுகளுக்குப் பின், ஜி.எஸ்.டி.,யில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள், அரசியல்வாதிகள், தொழில் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். பால், சென்னா, பனீர், ரொட்டி, நோட்டு புத்தகங்கள், உயிர்காக்கும் மருந்துக்கள், காப்பீடு பிரீமியங்களுக்கான ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ததும், பொதுமக்களுக்கு ஆறுதல் தரும் விஷயமாகும். அத்துடன், பல பொருட்களை, 5 சதவீத ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வருவதால், அவற்றின் தேவை அதிகரிக்கும் என்பதில் மாற்றமில்லை. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 50 சதவீத வரி விதித்துள்ளதால், அது இந்திய தொழில் துறையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தாக்கத்தை, உள்நாட்டு நுகர்வை அதிகரிப்பதன் வாயிலாக குறைக்க முடியும். அதற்கு ஜி.எஸ்.டி., வரி விகித மாற்றம் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன், கார்கள், 'ஏசி' மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றை பிறகு வாங்கிக் கொள்ளலாம் என, தள்ளிப்போட்டு வந்தவர்கள், அவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதால், 22ம் தேதிக்கு பின் வாங்க முன்வருவர். கடந்த பிப்ரவரி மாதம், நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, வரி செலுத்துவோர் பயன் பெறும் வகையில், நேர்முக வரியான வருமான வரியில், சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அது நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக, மாதச்சம்பளம் பெறுவோருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. அதைத்தொடர்ந்து, தற்போது ஜி.எஸ்.டி., மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சொகுசு கார்கள் மற்றும் உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும் சிகரெட், புகையிலை, பான் மசாலா போன்ற பாவப் பொருட்களுக்கு, சிறப்பு வரியாக, 40 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதும், குறிப்பிட்ட முன்னேற்றமே. ஆடம்பர பொருட்களுக்கு அதிக வரி என்பது, மக்கள்நலன் காக்கும் அரசிற்கான நல்ல நெறிமுறையாகும். பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவின் ஆடம்பர பொருட்கள் சந்தையை பயன்படுத்த விரும்புகின்றன. பல நாடுகளுடன் இந்திய அரசு தாராள வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டு வரும் நிலையில், அன்னிய நிறுவனங்கள் நம் நாட்டில் கால் பதித்து ஆதிக்கம் செலுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அதே நேரத்தில், அந்நிறுவனங்களால் நம் நாட்டவருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியாது என்பதால், அவற்றின் உற்பத்தி பொருட்களுக்கு அதிக வரி விதிப்பது சரியானதே. அத்துடன் சிகரெட் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களால் மக்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவதுடன், அரசின் சுகாதார துறைக்கான செலவும் அதிகரிக்கிறது. எனவே, அவற்றுக்கு கூடுதல் வரி விதிப்பு நியாயமானதே. மொத்தத்தில் ஜி.எஸ்.டி.,யில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் பாராட்டத்தக்கவை; வரவேற்கத்தக்கவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Sitaraman Munisamy
செப் 08, 2025 16:03

GST சட்டத்தை கொண்டுவந்தது யார் . அதனால் யார் பயன் அடைந்தார்கள் . கோவை அன்னபூர்ணா உரிமையாளர் பேசியதால் இத்தணை ஆண்டுகள் கழித்து gst மாற்றி அமைக்கப் பட்டுள்ளது . அப்போதும் இட்லி சப்பாத்தி இவற்றுக்கு வரியில் வேறுபாடு உள்ளது. கூட்டத்தில் ஆமாம் சாமி போடுவதற்கு தான் உள்ளனர். மக்கள் நலன் குறித்து கவலைப்பட எந்த மாநில மத்திய அரசும் இல்லை


Paul Durai Singh. S
செப் 08, 2025 15:54

வட இந்தியர்கள் கோதுமைக்கு வரி இல்லை தென்னிந்திய அரிசிக்கு வரி


Santhakumar Srinivasalu
செப் 08, 2025 12:42

பெட்ரோல் பொருட்களை எப்போ மோடியும் நிர்மலாவும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவாங்க?


ஆரூர் ரங்
செப் 08, 2025 15:02

ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு மனதாக முடிவெடுக்க வேண்டும். அதற்கு முன்னர் ஸ்டாலின், பினராயி, ராகுல் ஆதரவளிக்க வேண்டும். ( ஆனா பெட்ரோல் விலையைக் குறைத்த ஸ்ரீலங்கா பாகிஸ்தான் நிலைமை என்னாச்சு?)


kannan
செப் 08, 2025 12:30

இட்லி க்கு 5%, ஆனால் ரொட்டிக்கு 0% என்பது உண்மையா?


ஆரூர் ரங்
செப் 08, 2025 15:03

ஓட்டலில் இட்லி சப்பாத்தி எதைச் சாப்பிட்டாலும் 5 சதவீதம் ஜிஎஸ்டி உண்டு. கடையில் பாக்கெட்டில் வாங்கினால்தான் சப்பாத்தி, ரொட்டி, பரோட்டாக்கு வரி கிடையாது .


vivek
செப் 08, 2025 15:13

அப்போ டாஸ்மாக் சரகிற்கு எவளோ கண்ணன்


kannan
செப் 08, 2025 16:50

விவேக், நான் குடிப்பது இல்லை, குடிப்பவர்கள் ஒன்றும் குழந்தைகளும் இல்லை, அதனால் அவர்கள் குறித்து கவலையும் இல்லை, அவர்கள் அதிகமாக கொடுக்கிறார்கள் என்று கவலையைவிட கேஸ் 450 ரூபாய் இருந்தது 900 ஆனது, 70 வது ரூபாய் இருந்த பெட்ரோல் 100 ஆனது குறித்துமே கவலை, சாராய விலை ஊழல் குறித்து குடிப்பவகளே கவலைப்படாத போது பாஜக ஆதரவாளர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? சாதாரண மக்களைக் குறித்து கவலைப்படுங்கள், குடிகார்ர் களின் இழப்பைப் பொருத்துக்கொள்ள முடியாத உங்களுக்கு ஏன் சாமான்ய மக்கள் படும் துன்பங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை? ஓவர் அக்கரை, உங்கள் தரத்தையல்லவா காட்டுகிறது?


அப்பாவி
செப் 08, 2025 09:45

எல்லோரும் சொகசு கார், சொகுசு குளிர்பானம் வாங்கி அதிக ஜி.எஸ்.டி கட்டி நாட்டுக்கு வருமானம் தேடிக்கொடுக்கணும். இல்லைன்னா சாமான் விலை ஏறி அதிக ஜி.எஸ்.டி கட்டுவீங்க. அப்புடி இல்லைன்னா, சாமான் வாங்காத குற்றத்துக்காக 5 பர்சண்ட் ஜி.எஸ்.டி வங்கிக்.கணக்கிலிருந்து உருவிடுவாங்க.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 08, 2025 09:26

இன்புட் ஜிஎஸ்டிக்கும் அவுட்புட் ஜிஎஸ்டிக்கும் வரும் வித்தியாசம் மக்கள் தலையிலே தானே விழும். ஜீரோ ஜிஎஸ்டி ன்னு பிலிம் காட்டிட்டு விலை ஏறப் போகுது என்ற உண்மையை மறைக்க பார்க்கிறீர்களே இதுக்கு பருத்தி மூட்டை குடவுனிலேயே இருந்திருக்கலாம் என்று எல்லோரும் சொல்றாங்களே ஜீ.


ஆரூர் ரங்
செப் 08, 2025 09:37

ஆக ஜிஎஸ்டி க்கு முன்பு வரி எதுவும் கட்டாமல் வாங்கினேன் என்கிறீர்கள். சேவை வரி 18 சதவீதம் அமல்படுத்தியது பசி. அதைத் தவிர மத்திய விற்பனை வரி மாநில விற்பனை வரி, எக்சைஸ் கலால் வரி, நுழைவு வரி மொத்தம் 52 சதவீதம் வரை வேறு இருந்தது


vivek
செப் 08, 2025 09:57

GST பற்றி பொது அறிவு கூட ஜெய்ஹிந்துக்கு இல்லையே


SANKAR
செப் 09, 2025 00:01

arur compare price when PC was there and " taxed heavily"and NOW


புதிய வீடியோ