உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / ஆம்னி பஸ்கள் இயக்கம் சீர்திருத்தங்கள் அவசியம்!

ஆம்னி பஸ்கள் இயக்கம் சீர்திருத்தங்கள் அவசியம்!

ஆந்திர மாநிலம், கர்னுால் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், சமீபத்தில் அதிகாலையில், 'ஏசி' ஆம்னி பஸ் ஒன்று அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பஸ்சில் பயணம் செய்தவர்கள் உட்பட, 20 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். மற்றவர்கள் லேப்டாப், மொபைல் போன், செருப்பு உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களால், பஸ்சின் கண்ணாடியை உடைத்து உயிர் தப்பினர். இந்த கோர விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதேபோல கடந்த, 14ம் தேதி ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஆம்னி பஸ், ஜோத்பூர் நெடுஞ்சாலையில் சென்ற போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 21 பேர் இறந்தனர். இப்படி ஆம்னி பஸ்கள் அடிக்கடி விபத்திற்கு உள்ளாவதும், அதனால், உயிரிழப்புகள் ஏற்படுவதும் பயணியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்னுால் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில், ஆம்னி பஸ்சின் டிரைவர்கள் இருவரும், தாங்கள் தப்பித்துக் கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனரே அன்றி, பயணியரை காப்பாற்ற சிறிதும் முயற்சிக்கவில்லை. பஸ்சின் கதவை திறக்க அவர்கள் உதவியிருந்தால், இன்னும் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். விபத்திற்குள்ளான ஆம்னி பஸ், யூனியன் பிரதேசம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டு பின், ஒடிஷா மாநில பதிவெண்ணுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆந்திரா, தமிழகம் உட்பட பல மாநிலங்களில், ஆம்னி பஸ்களை பதிவு செய்வதற்கான கட்டணம் அதிகமாக இருப்பதால், இப்படி வடகிழக்கு மாநிலங்களிலோ அல்லது யூனியன் பிரதேசங்களிலோ பதிவு செய்யப்பட்டு மற்ற மாநிலங்களில் இயக்கப்படுகின்றன. அத்துடன், இந்த ஆம்னி பஸ்கள் எல்லாம், சுற்றுலா வாகனங்களாக இயக்குவதற்கு தான் அனுமதி பெறப்படுகின்றன. பின், தனிப்பட்ட நபர்களுக்கு டிக்கெட் வழங்கி, குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையே இயங்கும் பஸ்களாக மாற்றப்படுகின்றன. இன்சூரன்ஸ் நிறுவனங்களும், இந்த சட்டவிரோத செயல்களுக்கு துணை போவதுடன், இப்பஸ்கள் விபத்தில் சிக்கினால், உயிரிழப்போர் குடும்பத்திற்கு இழப்பீடும் வழங்குகின்றன. பண்டிகை காலங்களில் இந்த ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலிக்கும் போது நடவடிக்கை எடுப்பதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் போக்குவரத்து துறையினரும், இந்த பஸ் உரிமையாளர்களின் விதிமீறல்களை கண்டு கொள்ளவோ, பஸ்களை முறைப்படுத்தவோ, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், விதிமீறல்களும், விபத்துகளும் தொடர்கின்றன. மேலும், ஆம்னி பஸ்களை இயக்கும் உரிமையாளர்கள், பயணியர் வசதி என்ற பெயரில், பஸ்களில் பல மாற்றங்களை செய்கின்றனர். அத்துடன் முறையான பயிற்சி இல்லாத டிரைவர்களையும் வேலைக்கு அமர்த்துகின்றனர். பாதுகாப்பு விதிமுறைகள் எல்லாம், போக்குவரத்து துறை அதிகாரிகள் துணையுடனே பெருமளவு மீறப்படுகின்றன. அதுவும், ஒரு விபத்து நடந்தவுடன் அது பற்றி பெரிதாக பேசுவதும், மற்றொரு சம்பவம் நடந்ததும் பழயதை மறந்து விடுவதும் வாடிக்கையாக உள்ளது. ஆந்திர மாநில விபத்திற்கு பிறகாவது, அனைத்து மாநில அரசுகளும் ஆம்னி பஸ்களின் இயக்கத்தை முறைப்படுத்தவும், அவற்றின் பதிவை அந்தந்த மாநிலங்களில் நியாயமான கட்டணத்தில் மேற்கொள்வதையும் உறுதி செய்ய வேண்டும். நன்கு பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் வாங்கிய நபர்கள் மட்டுமே, இதுபோன்ற பஸ்களை இயக்குவதையும் கட்டாயமாக்க வேண்டும். ஒவ்வொரு பஸ்சும், சரியான பாதுகாப்பு விதிமுறைகளின்படி இயக்கப்படுவதை உறுதி செய்ய, போக்குவரத்து துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்த வேண்டும். முறையான பரிசோதனைகள் எதுவும் இல்லாமல், பஸ்கள் இயக்கத்திற்கான சான்றிதழ்கள் தருவதையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, ஆம்னி பஸ்களின் இயக்கம் தொடர்பாக ஒரு குழுவை நியமித்து, அதன் பரிந்துரைகளை பெற்று, அவற்றை மாநில அரசுகள் முழுமையாக அமல்படுத்த வேண்டும். சீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே ஆம்னி பஸ்களில் சிறப்பான, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முடியும். இனியாவது அரசுகள் விழித்துக் கொண்டால் சரி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சுந்தர்
அக் 28, 2025 05:48

இங்க நீங்க என்னதான் சொன்னாலும் நாளைக்கு நாங்க அத மறந்துட்டு அடுத்த வேலையைப் பார்க்க போயிடுவோம்.


Sivagiri
அக் 27, 2025 12:09

இப்போதெல்லாம் சரக்கு அடிக்காமல் ஓட்டும் டிரைவர்கள் மிக மிக கம்மி - அபூர்வம் , தனியார் பேருந்து டிரைவர்கள் , மினிபஸ் டிரைவர்கள் , மினி - லாரி பெரிய லாரி , தனியார் நிறுவன , பள்ளிகள் கல்லூரி டிரைவர்கள் எல்லாம் சரக்கு அடிக்காமல் வண்டியை தொட மாட்டார்கள் . . . முன்பு சரக்கு அடித்தால் வண்டியை தொட மாட்டார்கள் . . . இப்போ எல்லாம் தலைகீழ் . . . கேள்வி கேட்க ஆளில்லை . . கேட்க வேண்டிய காவல்துறையும் போதையிலேயே ஆடுகிறது . . .


Sivagiri
அக் 27, 2025 12:01

ஏசி பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகளை பயணிகள் திறக்க முடியாதபடி அமைப்பதே எந்த அசம்பாவிதம் நடந்தாலும் பயணிகள் உடனடியாக வெளியேற முடியாத படி சிக்கி கொள்கின்றனர் , அதோடு. , ஜன்னல்களை திறக்க முடியாதபடி இருப்பதால் தீ- புகையும் வெளியேறமுடியாத படி மூச்சடைக்க வைத்து முழுவதும் எரிந்து போக செய்கிறது , ரயில் ஏசி பெட்டிகளிலும் அப்படியே உள்ளது . . பயணிகள் தாங்களாகவே திறக்குமாறு அமைத்து ஆபத்து காலங்களில் மட்டும் திறக்க வேண்டும் என்று எழுதி வைக்கலாம் ,


K.Ravi Chandran, Pudukkottai
அக் 27, 2025 09:33

விபத்து நேரத்தில் தப்பிக்க யாருக்கும் வழி தெரிவதில்லை. விமானத்தில் சொல்வது போல் அவசர கால வழியை எப்படி பயன் படுத்துவது என பஸ் கிளம்பும் முன் யாரும் சொல்லித் தருவதும் இல்லை. ஆம்னி பஸ்களின் வேகத்தைக் குறைத்தாலே பெருமளவு விபத்துகள் இங்கு குறையும்.


Ramesh Trichy
அக் 28, 2025 09:44

Yes, the safety instructions/awareness session needs to be given by drivers to the passengers on every trip. The bus owners / the organisation must check the alcohol level, and it needs to be recorded. The camera must be installed in the cabin and body camera to be with the driver. The IVMS monitor needs to be installed in each vehicle, and records must be maintained.


Kulandai kannan
அக் 27, 2025 08:12

30 ஆண்டுகளுக்கு முன்னெல்லாம் அனைத்து இரவு பஸ்களிலும் இரண்டு டிரைவர்கள் இருப்பார்கள், ஷிப்டு முறையில் ஓட்டுவார்கள். இப்போது ஒரே டிரைவர்தான்.


சாமானியன்
அக் 27, 2025 08:11

பெருநகரங்கட்கு எத்தனை ரயில், பஸ் சேவை இருந்தாலும் போதவில்லை. அரசாங்கத்திடம் பஸ்வாங்க போதிய பணம் இல்லை. ஆம்னி பஸ் காலத்தின் கட்டாயம். எந்த ஆம்னி பஸ் முதலாளியும் லோன் இல்லாமல் வாங்குவதில்லை. டிரைவர் சம்பளம், பராமரிப்பு செலவு, இன்ஸூரன்ஸ், ஆளும் கட்சிக்கு பர்மிட் வாங்க வாய்க்கரிசி இத்தியாதி. இந்த லட்சணத்தில் கட்டணத்தை எந்த அரசியல்வாதியாலும் ஒழுங்கு படுத்துவது இயலாத ஒன்று. ரயில் புக்கிங் தொடங்கிய சிலமணி நேரத்திலேயே ஓவர். என்னதான் செய்வது. பண்டிகை சமயத்தில் சொந்த உருக்கு போய் திரும்ப லீவு போடாமல் வர மிகுந்த அதிர்ஷ்டம் தேவை. எளிதில் தீப்பற்றும் பொருட்களை தடை செய்தாலும் பொறுப்பே இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். பாவம் ஆம்னி பஸ் முதலாளிகள்.


Varadarajan Nagarajan
அக் 27, 2025 06:38

எவ்வளவோ விதிமீறல்கள் இருந்தாலும் மக்கள் சேவையை கருத்தில்கொண்டு எப்பொழுதும் ஒரே நிரந்தரமான கட்டணத்தில், சீரான வேகத்தில் மக்களுக்கு சேவையளிக்கும் சில நிறுவனங்கள் இன்றும் இருந்துகொண்டிருக்கின்றன. அந்த நிறுவனங்களுக்கு மக்களின் பேராதரவு தொடர்ந்து இருந்துகொண்டுள்ளது. நேர்மாறாக பல நிறுவனங்கள் நடந்துகொண்டுள்ளன. பேருந்துகள் அந்தந்த மாநிலங்களில் பதிவுசெய்யாமல் இயக்கப்படுவது அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிந்துதான் நடக்கின்றது. எந்தெந்த காலங்களில் எவ்வளவு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன என்பதும் ஆன்லைன் தளங்களில் இருப்பதும் அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியும். பேருந்துகள் குறித்த நேரத்தில் புறப்பட்டு சீரான வேகத்தில் இயக்கப்படுவதில்லை என்பதும் அதிகாரிகளுக்கு தெரியும். பயணியர் பேருந்தில் அனைத்துவிதமான பார்சல்களும் எடுத்து சொல்லப்படுவதும் அதிகாரிகளுக்கும் தெரியும். அவற்றில் எந்தவிதமான அபாயகரமான மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் உள்ளன என்பது விபத்து நடக்கும்வரை யாருக்கும் தெரியாது. இவைகளை இன்னும் எத்தனை விபத்துக்கள் நடந்தபிறகுதான் அரசு முறைப்படுத்துமென்பது தெரியவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை