கவர்ச்சி அறிவிப்புகளால் ஆட்சியை பிடித்த பா.ஜ.,
மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், மஹாராஷ்டிராவில், பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணியும், ஜார்க்கண்டில் சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான, 'இண்டி' கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன. மஹாராஷ்டிராவில், யாரும் எதிர்பாராத வகையில், மஹாயுதி கூட்டணி அபார வெற்றி பெற்றது, பா.ஜ., கட்சிக்கும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும், புது உத்வேகம் தருவதாக அமைந்துள்ளது. அதேநேரத்தில், ஜார்க்கண்டில் பா.ஜ., எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் பிடித்துள்ளது. மஹாராஷ்டிரா முதல்வராக உள்ள ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியை உடைத்து தான், முன்னர் பா.ஜ.,வுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார்; முதல்வரானார். அதனால், சிவசேனா தொண்டர்கள், அவர் மீது மிகுந்த கோபத்தில் இருப்பர்; சட்டசபை தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பர் என, சிலர் தரப்பில் நம்பப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, ஷிண்டே அணி இடம் பெற்ற கூட்டணிக்கு, மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். பா.ஜ.,வின் தீவிர ஆதரவாளர்களே எதிர்பாராத வெற்றி இது என்று சொன்னால் மிகையில்லை. இந்தாண்டு முற்பகுதியில், லோக்சபா தேர்தல் நடந்த போது, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அணியினர், கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று, பா.ஜ., தலைமையிலான அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். அதனால், சட்டசபை தேர்தலிலும், காங்., தலைமையிலான அணிக்கே மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அதற்கு முற்றிலும் மாறாக பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதற்கு, காங்., தலைமையிலான அணியின் அதீத நம்பிக்கையும், ஒற்றுமையின்மையுமே முக்கிய காரணம். அதே நேரத்தில், இந்த வெற்றியை பெற, கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ., கடும் பிரயத்தனம் செய்தது. ஜாதி ரீதியான ஓட்டுகளை பெறவும், வெற்றிக்கொடி நாட்டவும் பயனுள்ள தேர்தல் உத்தியையும் செயல்படுத்தியது. வாக்காளர்களை, குறிப்பாக பெண்களை கவரும் வகையில், பா.ஜ., தலைமையிலான கூட்டணியினர், அறிவித்த நலத்திட்டங்களும் தேர்தல் வெற்றிக்கு துாண்டுதலாக அமைந்தன. மொத்தத்தில், காங்., தலைமையிலான அணியினரை விட, பா.ஜ., தலைமையிலான கூட்டணியினர் சிறந்தவர்கள் என்று மக்கள் எண்ணும் அளவுக்கு, அவர்களின் செயல்பாடுகள் இருந்துள்ளன. பா.ஜ., அணியின் திறமையான பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், எந்த நடவடிக்கைகளையும் காங்கிரஸ் அணியினர் மேற்கொள்ளவில்லை. வாக்காளர்களை கவரும் செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை. அதேநேரத்தில், தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ., கூட்டணியினர், முதல்வர் தேர்வு உட்பட சில பிரச்னைகளை சுமுகமாக தீர்த்து, குழப்பம், சச்சரவு எதுவும் இல்லாமல், ஆட்சி அமைக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லாமல், 2019 சட்டசபை தேர்தலுக்கு பின், பா.ஜ., - சிவசேனா கூட்டணியில் நிலவியது போன்ற குழப்பங்கள் நிகழ அனுமதித்தால், கூட்டணிக்குள் விரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அந்த நிலைமை உருவாக, பா.ஜ., மேலிடம் அனுமதிக்காது என்றே நம்பலாம். ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற, பழங்குடியினருக்கு சாதகமாக, அவர் பின்பற்றும் கொள்கைகளே காரணம். ஹேமந்திற்கு எதிராக அமலாக்கத் துறையினர் ஊழல் வழக்கு பதிவு செய்து, சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர். இந்த விவகாரம் அவரின் வெற்றியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. மாறாக, அவருக்கு பழங்குடியினர் மத்தியில் அனுதாபத்தை தேடித் தந்துள்ளது. மஹாராஷ்டிராவில், பெண்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என, பா.ஜ., கூட்டணி அறிவித்ததை போன்று, ஜார்க்கண்டிலும் ஹேமந்த் சோரன் கவர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இது, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு ஏற்கனவே உள்ள பழங்குடியினர் ஆதரவை மட்டுமின்றி, மற்ற பிரிவினரின் ஆதரவையும் தேர்தலில் பெற்றுத் தந்துள்ளது. ஆளும் கட்சிக்கு எதிராக உருவாகியிருந்த அதிருப்தியையும் மாற்றி விட்டது.