உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / ஓவியமா... இது சவுமியா வரைந்த காவியமா

ஓவியமா... இது சவுமியா வரைந்த காவியமா

'முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்'இக்குறளுக்கு எடுத்துக்காட்டாக தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் தினமும் ஒரு குறள் என ஓவியத்தின் மூலம் அதன் பொருளை உணர்த்தி இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த சவுமியா. தற்போது சென்னை வி.பி. வைஷ்ணவ் கல்லுாரியில், விஷூவல் கம்யூனிகேஷன் துறை உதவி பேராசிரியராக பணிபுரிகிறார்.அவரிடம் பேசுகையில்...வேலுாரில் பள்ளி படிப்பை முடித்தேன். கல்லுாரியில் யூ.ஜி., ஆங்கில இலக்கியம் படித்தேன். படித்துக்கொண்டிருக்கும்போதே அனிமேஷனில் ஆர்வம் வந்ததால் அதில் டிப்ளமோ முடித்தேன்.கவிதைகள், கதைகளை ஓவியங்களாக பிறர் வரைந்ததை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. நாமும் இப்படி செய்ய வேண்டும் என்ற உந்துதல் வந்தது. கல்லுாரி படிப்பு முடித்த பின் விளக்கப்படம், வரைபடங்கள், அனிமேஷன் படங்கள் உருவாக்குவதில் ஆர்வம் மேலிட்டது. ஓவியங்கள் வரைந்து வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இப்படித்தான் உருவானது.தமிழில் எத்தனையோ பாடல்கள், செய்யுள்கள் இருந்தாலும் இரண்டே வரிகளில் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் திருவள்ளுவர் தந்துள்ளார். ஆயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்டிருந்தாலும் இன்று வரை நம் வாழ்க்கையை தொடர்பு படுத்தி பல வகையில் உதவுகிறது. பொறாமை, அன்பு பற்றி அற்புதமாக எழுதியிருப்பார். சினத்தை பற்றின குறள்களை படிக்கும் போது நமக்கு பயமே வந்துவிடும். கோபத்தை நம் கழுத்தில் சுற்றியிருக்கும் பாம்பு என்பார். ஒவ்வொரு குறளும் ஒவ்வொரு வகையில் இருப்பது கூடுதல் சிறப்பு. குறள்களை 1330 நாட்களில் 1330 ஓவியங்களாக வரைந்து இன்ஸ்டாவில் வெளியிட்டேன். முதலில் துவங்கும் போது பல தயக்கங்களும், சந்தேகங்களும் இருந்தன. 1330 நாட்கள் எப்படி இடைவிடாமல் இதனை மேற்கொள்ள போகிறோம் என்ற பயம் இருந்தது. ஆனால் நாள் ஒன்றுக்கு ஒரு குறள், திருவள்ளுவருடன் தினமும் பயணித்து அவர் இன்று என்ன சொல்ல போகிறார், அவரிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள போகிறோம் என்ற எண்ணம் வந்தவுடன் அந்த பயம் பறந்து போய்விட்டது.ஒரு குறளுக்கு ஏற்றவாறு ஓவியம் வரைய நான்கு மணி நேரம் ஆகும். சில சமயங்களில் 10 மணி நேரம் வரை கூட தொடரும். குறளுக்கு ஏற்றவாறு ஓவியம் வரைந்து அதன் கீழ் பொருள் விளக்கத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினேன். அதனை பார்த்து விட்டு முகம் தெரியாதவர்கள் பாராட்டும் போது கூடுதல் பொறுப்பு வந்தது. ஓவியத்தை இன்னும் அழகாக்கினேன்.நாளடைவில் இது ஒரு சாதாரண முயற்சி என்பதை கடந்து மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி பார்த்தனர். 900 ஓவியங்கள் நான் கையால் வரைந்தது. மீதமுள்ளது நான் உருவாக்கிய டிஜிட்டல் ஓவியங்கள்.அடுத்து சங்க இலக்கியங்களில் குறிப்பட்டுள்ள பெண் புலவர்கள் பற்றி இது போன்ற முயற்சியில் தொடர திட்டமிட்டுள்ளேன். கம்பராமாயணத்தில் இருந்து ஒரு பாடல் எடுத்து வரைந்துள்ளேன். நம் கலாச்சாரம், வரலாறு மீதான ஆர்வம் அதிகம் இருப்பதால் அதன் தொடர்பாக என் அடுத்த படைப்புகள் இருக்கும்.ஆங்கில இலக்கியம் படித்தாலும் எனக்கு தமிழ் மேல் அளவுகடந்த பற்று உண்டு. 'இயல், இசை, நாடகம்' என்று சொல்வோம் அல்லவா. அதில் 'இயலை' எடுத்துக்கொண்டு 'இயல் ஆர்டின்ஸ்டா' என்ற பெயரில் குறளோவியங்களை பதிவிடுகிறேன்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ