உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / மேடை பேச்சுகளில் தமிழின் சுவை குறைகிறதே...: பேச்சாளர் மானசீகன் மனவருத்தம்

மேடை பேச்சுகளில் தமிழின் சுவை குறைகிறதே...: பேச்சாளர் மானசீகன் மனவருத்தம்

எழுத்தாளர்களில் சிலர் மட்டும் மேடைப்பேச்சுகளில் மக்களை வசிகரிப்பார்கள். பேச்சாளர்களில் சிலர் மட்டுமே எழுத்தில் பிரகாசிப்பார்கள். ஆனால் சிந்திக்க வைக்கும் எழுத்து, பேச்சு மூலம் வாசகர்களை வசீகரிப்பவராக திகழ்பவர் பேராசிரியர் மானசீகன்.இவர் தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர். உத்தமபாளையம் ஹாஜி ராவுத்தர் ஹவுதியா கல்லுாரியில் தமிழ்த்துறை பேராசிரியராக உள்ளார்.இவர் 2018 ல் 'எங்கே இருக்கிறாய் கேத்தரின்' என்ற கட்டுரை நுாலில் துவங்கி, தற்போது 'மூன்றாம் பிறை' என்ற நாவல் வரை 12 நுால்களை எழுதி உள்ளார்.மானசீகன் மனம் திறந்ததாவது...இயற்பெயர் முகமது ரபீக். கல்லுாரியில் படிக்கும் போது மானசீகன் என்ற புனைப்பெயரில் எழுதினேன். எனது புனைப்பெயரும் இயற்பெயரும் 'மனதிற்கு நெருக்கமானவன்' என்ற அர்த்தமுடையது. சிறு வயதில் தாத்தா வீட்டில் வளர்ந்தவன். அங்கு சித்தி, மாமா என அனைவரும் வாசிப்பு பழக்கம் கொண்டவர்கள். இதனால் சிறுவயதில் இருந்தே வாசிப்பு பழக்கம் என்னையும் அதிகமாக ஆட்கொண்டது.பேராசிரியர் அப்துல் சமதுவின் மேடைப்பேச்சுக்கள்பேச்சாளராக வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்தது. பள்ளியில் கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்பேன். கல்லுாரி முடித்து வாணியம்பாடி அப்துல்காதர், நாஞ்சில்சம்பத் தலைமையில் பட்டிமன்றங்களில் பேச ஆரம்பித்தேன். அப்படியே பட்டிமன்ற பேச்சு தொடர்கிறது. எனினும் தனிச்சொற்பொழிவில் அதிக கவனம் செலுத்துகிறேன்முதன் முதலில் 'அன்பே' என்ற இதழில் எழுத துவங்கினேன். 'எங்கே இருக்கிறாய் கேத்தரின்' நுாலை தொடர்ந்து வாக்காளன் ஆகிய நான், இளம்பிறை குறிகளுக்குள் ஓரு பூர்ணிமை, இசைசூபி, ஏழாம் வானத்து மழை, மாதவையா முதல் கிருபா வரை என கட்டுரை நுால்கள், 4 கவிதை நுால்களும் எழுதி உள்ளேன்.தற்போது வெளியான 'மூன்றாம் பிறை' நாவலை வாசகர்கள் அதிகம் விரும்பி படித்து, விமர்சனம் எழுதுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நாவல் வீழ்ந்த குடும்பத்தின் சரித்திரம், அவர்களுடன் மற்றவர்களின் உறவாடல்கள் பற்றியது.நவீன எழுத்தாளர்களிடம் மரபு இலக்கிய வாசிப்பு குறைவாக உள்ளது. எந்த மொழியில் எழுதுகின்றோமோ அந்த மொழியின் ஆழம் நன்றாக தெரிய வேண்டும். உயர்ந்த தலைப்புகளில் பேசி வந்த பட்டிமன்றங்கள், மேடைப்பேச்சுக்களில் தமிழின் சுவை குறைந்து வருகிறது. மேடைப்பேச்சுக்கள் நகைச்சுவை, கேலி செய்தல் என்ற நிலையில் செல்கிறது. பேசுபவர்கள் எந்த தலைப்பில் பேசுகிறோமோ அதைப்பற்றி ஆழமாக படித்து சிந்தனையை துாண்டும் வகையில் பேச வேண்டும். அவ்வாறு பேசினால் தான் நிலைக்க முடியும்.

புத்தகம் படிக்கும் பழக்கம்

வீடுகளில் பெற்றோர் வாசிக்க துவங்கினாலே பிள்ளைகள் தானாக வாசிக்க துவங்குவார்கள். இதில் பிள்ளைகளை குறை சொல்லக்கூடாது. அதே போல் தேர்விற்கான பாடங்களுக்கு மட்டும் அதீத முக்கியத்தும் வழங்குவது வாசிப்பை பாதிக்கிறது. அலைபேசி மூளையின் திறனை மாற்றி வாசிப்பு பழக்கத்தை சிதைக்கிறது. இதனை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இப்படியே போனால் புத்தகம் வாசிப்பது மறந்து விடும்.மாணவர்கள் அதிக அழுத்தம் இல்லாத போது பாட புத்தகத்தை தாண்டி மற்ற புத்தகங்களை வாசிப்பர். அதிக சுயநலப்போக்கு, அறம் சார்ந்த நம்பிக்கை இன்றி பலர் வாழ்கின்றனர். இதற்கு ஒரே தீர்வு மொழி, வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் தொடர்பாக நிறைய நுால்கள்படிப்பது தான்.இளைஞர்கள் ஜாதி, மத உணர்வுகளை கடந்து பேதமின்றி பழகுதல் அவசியம். நடிகர்களை கொண்டாடாமல் நிதர்சனத்தை புரிந்து கொள்ள வேண்டும். வரலாறு, உலகின் மதங்கள், பேரரசுகள் உள்ளிட்ட பல்வேறு கருக்களை மையமாக கொண்டு நுால்கள் எழுதி வெளியிட தயாராகி வருகிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sankar
மார் 04, 2025 07:02

தந்தை? சொன்ன காட்டுமிராண்டி பாஷையை ஒழிக்கும் முயற்சியில் வழித்தோன்றல்கள்?.....


kantharvan
மார் 10, 2025 15:10

வன்மம் வன்மம் வன்மம் வேறென்னே இருக்கிறது உங்கள் மனதில் சங்கர்??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை