கொங்கு மண்டலம் சார்ந்த மொழி படைப்பான 'நீர் வழிப் படூஉம்' நாவலை எழுதிய தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துலகை நேசிக்கும் பலரும், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே புதுவெங்கரையாம்பாளையம் கிராமம் சென்று ராஜசேகரன் என்ற தேவிபாரதியை சந்தித்து, 'உலகம் உள்ளவரை எழுத்தும், எழுத்தாளர்களும் கவுரவிக்கப்படுவார்கள்' என நம்பிக்கையை தந்து செல்கின்றனர். நாமும் அங்கு சென்றோம். சுற்றிலும் விளை நிலங்கள். வீடுகள் உள்ள பகுதியில் தகரம், ஓடு, கான்கிரீட் மூடிய தாத்தாவின் பூர்வீக வீட்டில், லுங்கி அணிந்து அதிக பொத்தான் இணையாத சட்டையுடன் தேவிபாரதியை கண்டு பேச்சை தொடர்ந்தோம்.* புத்தகம் படிப்பது எங்கு துவங்கியது?
என் தாத்தா, தந்தை நல்லமுத்து ஆசிரியர்கள். தினமும் அரச்சலுார் நுாலகத்துக்கு அழைத்து செல்வர். அமைதியாக உடனிருக்க வேண்டும் அல்லது நுால்களை படிக்க வேண்டும் என்பர்; நான் படிப்பேன். ஒரு கட்டத்தில் அப்பா கூறியதை தாண்டி படிக்க முயன்றேன். பிளஸ் 2 படித்தபோது ஒரு இலக்கிய பத்திரிக்கையில் குடும்ப உறவு பற்றி எழுதினேன். இலக்கியம், கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதினேன். இதற்கிடையில் ஆரம்ப பள்ளி ஆசிரியரானேன். எழுத, படிக்க நேரம் தேவை என உணர்ந்தேன். வி.ஆர்.எஸ்., கொடுத்துவிட்டு எழுத துவங்கினேன். 40 வயதுக்கு மேல் முழுமையாக வாசிப்பு, எழுத்து, சந்திப்பவர்களிடம் பேசுவதும் இயல்பாகிவிட்டது. இப்போது வயது 65. 'நீர் வழிப் படூஉம்' எனது 3வது நாவல். நாலாவதாக 'நொய்யல்' என்ற நாவலையும் எழுதி உள்ளேன்.* அதென்ன 'நீர் வழிப் படூஉம்'. இந்த நாவல் விருதை பெறும் என எதிர்பார்த்தீர்களா?
'நீர் வழிப் படூஉம்' என்பது 'யாதும் ஊரே; யாரும் கேளிர்' என்பது போல. 'நீரின் வழியாக நடக்கும் வாழ்க்கை' என்பது நல்ல தமிழ். இந்த நாவல் வந்தது முதல் பல தளங்களில் பேசு பொருளானது. ஜெயமோகன் உட்பட பலர் அழைத்து கூறினார்கள்.என் அம்மா, பெரியம்மா, மாமா போன்றோரின் வாழ்வியல் நிகழ்வே நாவலின் கதாபாத்திரமானது. வேறு பல பாத்திரங்களும் உள்ளன. சொந்த வாழ்க்கை அனுபவங்கள் எப்போதும் பேசு பொருளாகும். தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி, நீர்வழி வாழ்வு முறை, பிற கருத்துகளுடன் 8 மாதத்தில் இந்நாவலை நிறைவு செய்தேன்.* நீங்கள் வியந்த எழுத்து?
டால்ஸ்டாய், காந்தியை அதிகம் படித்தேன். மகாபாரதத்தை பல முறை படித்து வியந்தேன். அதில் உள்ள கதாபாத்திரங்களின் நிறைவு, வியாசரை போல யாரும் எழுத்துஉலகில் எட்ட முடியாது என புரிய செய்தது. அதுபோன்றவர்கள் பற்றி அறியப்படாத தகவல்கள் எழுத்தாக வருவதை விரும்பி படிப்பேன்.* சிறந்த நாவல், கவிதைக்கே சாகித்ய அகாடமி விருது வழங்கினாலும், இடதுசாரிகள் போன்ற சிலரையே தேடி வழங்குவதாக கூறப்படுவதேன்?
நான் எழுதத்துவங்கி 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது. கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல் என பல தளங்களில் எழுதினேன். காலச்சுவடில் பொறுப்பாசிரியராக செயல்பட்டேன். பல ஆண்டாக விதைத்து, பராமரித்ததன் பலனாகவே விருது வழங்கப்பட்டுள்ளது. படைப்பாளிகளுக்கு இதுபோன்ற விருது அவசியம். அவர்களை மேலும் பல தளங்களுக்கும், காலங்களுக்கும் உத்வேகத்துடன் செயல்பட செய்யும். சாகித்ய அகாடமி விருதுக்கான தேர்வு முறைகள், அனைத்தையும் தாண்டியது. அசோக மித்ரன், ஜானகிராமன், புதுமைப்பித்தன் என பல படைப்பாளிகள் இடதுசாரிகள் அல்ல. எழுதுபவரை பார்த்து வழங்கப்படுவதல்ல விருது. அவ்விருது ஒரு கருத்துக்குள் ஆட்படக்கூடாது. படைப்பாளிக்கு ஒரு விருதும், ஒரு லட்சம் ரூபாயும் பெரிதல்ல.* அடுத்த நாவலுக்கு தயாராகிவிட்டீர்களா?
ஒரு ஆண்டுக்கு முன்பே 'ஆதி யாகமம்' என்ற படைப்பை எழுத தயாராகி வருகிறேன். இது 900 பக்கம் தாங்கியது. இன்னும் ஒரு ஆண்டுக்கு மேலாகும். பல மனிதர்களை சேர்த்து முழு வடிவத்துடன் நாவலை உருவாக்கி வருகிறேன். சென்னை புத்தக கண்காட்சியில், 1000 புதிய நுால்கள் வெளியிடப்பட்டன. அதை பார்த்தால், எழுதுபவர்கள், வாசிப்பவர்கள் அதிகரித்து கொண்டே வருவதை காட்டுகிறது. பல புதியவர்கள், இளையவர்கள் புதிய நடையில் எழுதுவதை படிப்பேன்.பாறையாக உள்ளதை செதுக்கும்போதுதான் சிற்பமாகிறது. படித்துப்படித்து செதுக்கினால் நல்ல படைப்புகள் கிடைக்கும். அதை இன்றைய தலைமுறையினர் செய்வார்கள்.