வயலின் இசைப்பாலும், வாய்ப்பாட்டு குரலாலும் கர்நாடக இசையை உலகெங்கும் பரப்பி ரசிகர்களை பரவசப்படுத்துபவர்கள் ரஞ்சனி - காயத்ரி சகோதரியர். அவர்கள், வரும் 18ம் தேதி, மாலை 5:00 மணிக்கு, சென்னை நாரதகான சபாவில் 'ரசா பை ராகா' என்ற இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். இதுகுறித்து அவர்களிடம் உரையாடியதில் இருந்து...'ரசா பை ராகா' விளக்குங்கள்?ரஞ்சனி: ராகங்கள் இல்லாமல் சங்கீதம் இல்லை. ராகங்களின் ரசம் தான் பரவசம். அதை வழங்குவதுதான் 'ரசா பை ராகா!'அதை வழங்கும் ரஞ்சனி - காயத்ரியின் ஆங்கில முதல் எழுத்துகளை சேர்த்தால் 'ராகா' வரும். அதாவது, 'ராகா' சகோதரியர் வழங்கும் புதுமையான இசை நிகழ்ச்சி.கர்நாடக சங்கீதம் என்றாலே நிரல்படுத்திய, நேர்க்கோட்டு நிகழ்ச்சிகள் தானே இருக்கும். அதில் என்ன புதுமை?காயத்ரி: அப்படித்தான் பலரும் நினைக்கின்றனர். நாங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளில் அமைந்த கர்நாடக சங்கீத பாடல்களை இணைத்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டில்லி ஆகிய நகரங்களில், தலா 2:30 மணி நேரம் கச்சேரியை செய்ய உள்ளோம்.வெவ்வேறு மொழி பாடல்களை இணைப்பதுதான் புதுமையா?காயத்ரி: இல்லை. உலகில் பல உயிர்கள் உள்ளன. எல்லா உயிர்களுக்கும் நீர் தானே ஆதாரம். அதுபோல வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு விதமான இசை உள்ளது. அவற்றுக்கு, கர்நாடக இசையே ஆதாரமாக உள்ளது. என்றாலும், அந்தந்த மொழி, கவிஞர்கள், இசை மேதைகளின் மேதைமைகளையும், தனித்தன்மைகளை விளக்குவதாகவும், வேறுபாட்டு நுட்பங்களை விளக்குவதாகவும் எங்கள் நிகழ்ச்சி அமையும். மராட்டியில் இறுதியில் பாடும் 'அபங்'கை, கர்நாடக இசையுடன் கலந்து புதுமை படுத்த உள்ளோம். அதாவது, நாட்டில் மொழிகள், இனங்கள் பல இருந்தாலும், இசையும் அது தரும் உணர்வும் ஒன்றுதான் என்பதை, எங்கள் நிகழ்ச்சி நிரூபிக்கும்.செவ்விசையைப் போலவே நாட்டுப்புற இசையும் பழமையானது தானே?ரஞ்சனி: நிச்சயமாக. நாட்டுப்புற இசை மட்டுமல்ல, திரை இசையும் முக்கியமானதுதான். அவற்றையும், எங்களின் கச்சேரியில் ஒருங்கிணைப்போம். அதேநேரம், தீவிர கர்நாடக இசை கலைஞரும் விமர்சிக்காத வகையில், பயிற்சி செய்துள்ளோம்.இந்த முயற்சிக்கு எது உந்து சக்தி?காயத்ரி: இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான கர்நாடக சங்கீத பாடல்களை தொகுத்து, 'ரசா பை ராகா' என்ற நிகழ்ச்சியை வழங்கினோம். அது, உலகளவில் புகழடைந்ததுடன், ராஜாவாலும் பாராட்டப்பட்டது. அது, எங்களுக்கு நம்பிக்கை தந்தது. கர்நாடக இசையை பாமரனுக்கும் சேர்க்க வேண்டும் என விரும்புகிறோம். அதை, 'ஏகாத்துவம், எப்போ மியூசிக்' வழியாக சாத்தியமாகி உள்ளது. -- நமது நிருபர் --