பிராமி - வட்டெழுத்துகளில் புத்தகம்: சிறுமி சாதனை
பிராமி மற்றும் வட்டெழுத்து என்பது, செம்மொழியான தமிழ் மொழியின் ஆதிதோற்ற எழுத்துருக்கள். சங்க கால சுவடிகள், செப்பேடுகள், கோவில் கல்வெட்டுகள் என, அனைத்திலும் வட்டெழுத்துகள் தான் இடம் பெற்றுள்ளன. இம்மொழியை கற்றுத்தேர்வது என்பது, சாதாரண விஷயமல்ல; அதுவும், இம்மொழியில் புத்தகம் எழுதுவதென்பது அசாத்தியமானது. இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார், திருப்பூர், பல்லடம் ரோடு பகுதியில் வசிப்பவர், மோஷிகா, 12 வயது. கிட்ஸ் கிளப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார். தனியார் நிறுவன பணியாளர்களான செல்வகுமார், ஜீவிதா தம்பதியின் மகள்.
வட்டெழுத்து - பழமையான எழுத்துரு:
வட்டெழுத்து என்பது, தமிழ் மொழியின் மிகப்பழமையான எழுத்துரு. சங்க காலத்தில் இருந்து சோழர் காலம் வரை பயன்படுத்தப்பட்ட முக்கியமான எழுத்து வடிவம். இதை கற்றால் நம் பழமையான வரலாற்றை நேரடியாக புரிந்து கொள்ள முடியும்.கல்வெட்டு மற்றும் பிராமி எழுத்துகள் வளைவு, நேர் கோடு, சின்னங்கள் கலந்தவை. இதை எழுதும் போது, குழந்தைகளின் கவனம் சிதறாது. நினைவாற்றல் பெருகும்; கை மற்றும் கண் ஒருங்கிணைந்து செயல்பட்டு, படைப்பாற்றல் மேலோங்கும்.எழுத்தின் மீதுள்ள இந்த ஆர்வம், வரலாறு, தொல்லியல் மற்றும் இலக்கியம் சார்ந்த படிப்பை தேர்வு செய்து, அந்த துறையில் சாதிக்க முடியும். இந்த எழுத்துருக்களை அறிந்த குழந்தைகள், தமிழ் மரபை பாதுகாக்கும் தலைமுறையாகவும், வரலாற்று கல்வெட்டுகளை படிக்கும் திறன் கொண்டவர்களாகவும் விளங்குவர். வட்டெழுத்தை பயன்படுத்தி கலைகள் அழகெழுத்து, கைவினைப் பொருட்கள், சுவரோவியம் போன்றவற்றை உருவாக்க முடியும். - நல்லசிவம்: தலைவர், திருப்பூர் இலக்கிய சங்கம் அரசு உதவினால் திறமை மெருகேறும்:
மோஷிகாவின் தாய் ஜீவிதா நம்மிடம் பகிர்ந்தவை: மோஷிகாவுக்கு, 6 வயதாக இருக்கும்போது, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு அழைத்து சென்றோம். அங்குள்ள கற்களில் செதுக்கப்பட்டுள்ள வட்டெழுத்துக்களை உற்று கவனித்து, அதுகுறித்த விளக்கத்தை எங்களிடம் கேட்டாள். அவளது ஆர்வத்தை அறிந்து, தஞ்சை தமிழ் பல்கலை இணைய தளத்தின் உதவியுடன், தமிழ் வட்டெழுத்துகள் மட்டுமின்றி, பிராமி எழுத்துகளையும் கற்றுக் கொள்ள துவங்கினாள். பின், அவளே படிப்படியாக எழுதி படிக்க துவங்கினாள். அந்த ஆர்வத்தின் வெளிப்பாடாக தான் சங்க இலக்கிய பாடல்களை புத்தக வடிவில் வெளியிட்டாள். அவள், 4ம் வகுப்பு வரை கோவை, சாய்பாபா காலனி அருகேயுள்ள ராமலிங்க காலனி அரசுப்பள்ளியில் பயின்றாள். அவரது திறமையை அங்குள்ள ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் வெகுவாக ஊக்குவித்தனர்; கலெக்டர் வாயிலாக அவளுக்கு பாராட்டும் கிடைத்தது. அவளது திறமை மென்மேலும் வளர இதுதான் மிக முக்கிய காரணமாக இருந்தது. தற்போது அவள் படிக்கும் பள்ளி நிர்வாகத்தினரும் ஊக்குவிப்பு வழங்குகின்றனர். தமிழ் மொழியை ஊக்குவிக்க பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வரும் தமிழக அரசு, என் மகளின் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிக்க உதவினால், அவளின் திறமை இன்னும் மெருகேறும்.