உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / ஆண் ஆடலாமா பரதம்? : நாட்டியக்கலைஞர் ஸ்ரீமதி

ஆண் ஆடலாமா பரதம்? : நாட்டியக்கலைஞர் ஸ்ரீமதி

பாவம், ராகம், தாளம் சேர்ந்ததுதான் பரதம். பழங்கலைகளில் ஒன்றான பரதத்தில் பந்தநல்லுார் பாணி, வழுவூர் பாணி, காஞ்சிபுரம் பாணி, தஞ்சாவூர் பாணி, மைசூர் பாணி என ஆட்ட முறைகள் உள்ளன. இதில் வழுவூர் முறையை உலகளாவிய மாணவர்களுக்கும் கற்றுதந்து கவனம் பெறுகிறார் பரத நாட்டிய கலைஞர் ஸ்ரீமதி. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இவரின் நடனப்பள்ளி உலகின் பல்வேறு நாடுகளிலும் கிளைகளை நிறுவியிருக்கிறது. வெளிநாட்டு மாணவர்கள் நிறைய பேர் இவரிடம் படிக்கின்றனர். இவர் மனம் திறந்ததாவது... என்னுடைய 5 வயதில் பரதம் கற்க ஆரம்பித்தேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நடிகர் கமலஹாசன் என பிரபலங்களுக்கு பரதம் கற்றுக்கொடுத்த நாட்டிய கலைஞர் கே.ஜெ.சரசா எனது குரு. இதுவரை 500க்கு மேல் தனிநபர் கச்சேரி, 'தீம் பெர்பாமன்ஸ்' செய்திருக்கிறேன். எம்.பி.ஏ., நிதி மேலாண்மை படித்ததோடு நிறுவனமொன்றில் வேலை பார்த்தவாறு பரத நாட்டிய வகுப்பு எடுத்தேன். பின் முழுநேரமாக நடன வகுப்பெடுக்க முடிவு செய்து வேலையை ராஜினாமா செய்தேன். 2008ல் சென்னையில் வாடகை கட்டடத்தில் பரத நாட்டியப்பள்ளி ஆரம்பித்தேன். இன்று அது சொந்தக்கட்டடத்திற்கு மாறியிருக்கிறது. அதிகாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை வகுப்புகள் நடத்துகிறேன். கணவரின் வேலை நிமித்தம் 3 ஆண்டுகளுக்கு முன் துபாயில் குடியேறியதால், அந்நாட்டில் லைசென்ஸ் பெற்று நடனப்பள்ளி துவங்கினேன். அங்கு வசிக்கும் வட இந்தியர்களின் பிள்ளைகளுக்கு நேரடி வகுப்பெடுக்கிறேன். மற்ற நாடுகளிலிருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் கற்றுத்தருகிறேன். உலகளாவிய கொரோனா ஊரடங்கு, ஆன்லைன் வகுப்புக்கான கதவை திறந்தது. குருட்டுத்தனமாக ஆன்லைன் வகுப்பு தொடங்கக்கூடாது என்பதற்காக குரு மார்கள், மூத்த நடன கலைஞர்களிடம் ஆன்லைன் வகுப்பு தொடர்பாக விளக்கங்கள் பெற்று தெளிவான பின் வகுப்பு ஆரம்பித்தேன். நேரடி வகுப்பில் மாணவர்கள் செய்யும் தவறுகளை சரிசெய்ய வாய்ப்பிருக்கும். ஆன்லைன் வகுப்பில் அது சிரமம். ஆகவே பயிற்சியை வீடியோவை பதிவுசெய்து கூகுளில் அப்லோட் செய்தோம். ஆன்லைனில் நேரடி வகுப்புகளுக்கு பின் வீட்டு பயிற்சியில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க அந்த வீடியோக்கள் மாணவர்களுக்கு உதவியாக இருந்தது. குஜராத்தி, மலையாளி, பெங்காலி, மராத்தி, தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் பயின்று வருகிறார்கள். அவர்கள் ஜதி, பாடல்களை உணரும்போதுதான் நடனத்தை அழகாக வெளிப்படுத்த முடியும். எனவே மாணவர்கள் புரிந்துகொள்ள அவரவர் தாய்மொழியிலான பாடல்களில் பரதம் கற்றுக்கொடுக்க முனைகிறோம். இதனால் அவர்களின் உடலும் மனதும் ஒன்றி நாட்டியமாடுவதை பார்க்க முடிகிறது. தமிழர் கலாசார புரிதல் இருப்பவர்களுக்கு பரதம் சொல்லித்தருவது எளிது. வெளிநாட்டில் வளரும் குழந்தைகளுக்கு அந்த புரிதல் இருக்காது. தாய், தந்தை அரவணைப்பும் குறைவாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு பரதம் சொல்லித்தருவது சவாலானது. பரதத்தின் ஆணி வேரிலிருந்து பண்பாடு, நோக்கம், ஆன்மிகம், வழிபாடு, கடவுள் அத்தனையும் அவர்கள் புரிந்து கொள்ளும்படி கற்றுத் தரவேண்டும். பரதம், ஹிந்து சமயத்தோடு தொடர்புடையது. இது மாற்றுமதத்தை சேர்ந்த மாணவர்களுக்கு நெருடலை ஏற்படுத்தாத வண்ணம், அவர்களின் இறைஉணர்வையும் மதிக்கும் வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது. கிறிஸ்தவ பாடல்களுக்கு 'ஆர்கெஸ்ட்ரா' மூலம் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்தது வரவேற்பு பெற்றது. பரதம் ஆடுவதிலும் அர்ப்பணிப்பிலும், ஆண், பெண் சமமானவர்கள். ஆண், பரதம் கற்பதால் அவரின் இயல்பான தோரணை பறிபோகும் என சிலர் பயப்படுகிறார்கள். உண்மை அதுவல்ல. பரதநாட்டிய அடையாள கடவுளான நடராஜர் ஆண் தானே. முன் காலத்தில் பரதத்தில் நட்டுவனார்களாக இருந்தவர்கள் ஆண்கள். இப்போதும் நிறைய ஆண் கலைஞர்கள் உள்ளனர். திறமையுள்ள ஏழை மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்குவதோடு அவர்களின் அரங்கேற்றம், மேடை கச்சேரி போன்றவற்றையும் நானே கவனித்துக்கொள்கிறேன். ஒரு மாணவரை பயிற்சிக்கு உட்படுத்தி திறமையான நாட்டிய கலைஞராக மேடையேற்றி அழகு பார்ப்பது நான் இன்னொரு தாய்மைபேறு அடைவதுபோல பூரிப்பைத்தருகிறது. அந்த பரிபூரணத்தை விடவும், வேறெந்த அவார்டுகளும், கவுரவங்களும் மகிழ்ச்சி தருவதில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sridhar
ஆக 20, 2025 12:34

தங்களின் தொலைபேசி என்ன என்பதை தெறியப்படுத்தவும்


angbu ganesh
ஆக 18, 2025 09:36

ஆண்டவன் நடராஜர் தான் பாரத கலையின் நாயகர்