உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / உடைந்து உடைந்து விழுந்தாலும் எழுவேன்

உடைந்து உடைந்து விழுந்தாலும் எழுவேன்

உடுமலை அருகே வெஞ்சமடை பகுதியை சேர்ந்த முதுகலை பட்டதாரி திலகசுதாவிற்கு பிறந்ததிலிருந்தே எலும்பு பிரச்னையை கொண்டவர். தும்மினால், பயந்தால், விளையாடினால் என சிறு அசைவுக்கும் இவரின் உடல் எலும்புகள் நொறுங்கி விடும். இதுவரை 400க்கு மேற்பட்ட எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களே இவரை கண்ணாடி குழந்தை எனும் அழைக்கும் அளவிற்கு எலும்பு பிரச்னை இருக்கிறது. இவருக்கென ரெடி மேடாகவோ, டெய்லர்களாலோ உடை கூட தயாரிக்க முடியாத நிலை. அண்ணாந்து வானத்தை கூட பார்க்க முடியாத அளவிற்கு சிரமப்பட்ட திலகசுதாவிற்கு தன்னம்பிக்கை அந்த வானத்தை மிஞ்சும் அளவிற்கு இருந்திருக்கிறது. இதனால் தான் 6வது படிக்கும்போதே டெய்லரிங் கற்றுக்கொண்டு தனக்கான ஆடைகளை தயாரிக்க தொடங்கினார். தொடர்ந்து தன்னுடைய தேவைகளுக்காக யாரையுமே சார்ந்திருக்க கூடாது என்ற எண்ணத்தில் பகுதிநேரமாக வீட்டிலிருந்தே பல்வேறு பணிகளை மேற்கொண்டு பணம் ஈட்ட தொடங்கினார். வீட்டிலிருந்தே கல்வியையும் கற்றுக்கொண்டு பகுதி நேரமாக பணிகளையும் பார்த்துக்கொண்டு முதுகலை தமிழ் பட்டதாரியாகினார். யாரும் நம்பவில்லை 'சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட திலகசுதா, ஒருவரை பார்த்தால் அப்படியே வரையக்கூடிய 'போர்ட்ரேட்' ஓவியத்தில் சிறந்து விளங்குகிறார். பென்சில் ஓவியம் வரைதல், நுால்களால் பொருட்கள் தயாரிப்பு, ஆடை வடிவமைப்பு என திறமையை காட்டி வருகிறார். ஆரி வொர்க் படித்து, அதில் 40க்கும் மேற்பட்டோருக்கு ஆசிரியராகவும் இருந்து வருகிறார். ஆனால் இவர் சந்திந்த சவால்களோ ஏராளம். மாற்றுத்திறனாளி என்ற காரணத்தினால் இவரை நம்பி எந்த பணியும் எவரும் ஆரம்பத்தில் கொடுத்ததில்லை. நம்பிக்கை இழக்காமல் வீட்டிலிருந்தே பணிகளை மேற்கொண்டு வாடிக்கையாளர்களை சம்பாதித்து, தற்போது அதே பகுதியில் ஒரு கடையை நிறுவி தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறார். திலகசுதா கூறியதாவது: ஆரம்பத்தில் எவரும் என்னை நம்பவில்லை. என் உடல் பிரச்னையை குறையாக கருதினர். 20 ஆண்டுகளாக வீடு, மருத்துவமனையை தவிர எதுவுமே தெரியாது. 4 சுவற்றிற்குள்ளே இருந்துதான் இத்தனையையும் கற்றுக்கொண்டேன். நினைத்தால் எல்லாம் ஆரம்பபுள்ளி, இல்லையென்றால் முற்றுப்புள்ளிதான். மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து எல்லோருக்கும் நம்பிக்கையை ஊட்டி என்னால் ஆனதை செய்ய வேண்டும். யாருடைய அனுதாபத்திலும் நான் முன்னேறவில்லை. சொந்த உழைப்பால் நம்பிக்கையை முதலீடாக வைத்து முன்னேறி வருகிறேன். கடை நிறுவி 4 வருடம் ஆகி விட்டது. உடலின் குறையை கண்டுகொள்ளாமல் என் திறமையை நம்பி பொறுப்புகளை கொடுக்கும் வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கி விட்டனர். துவண்டு போகாமல் முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும் என்றார். இவரை வாழ்த்த 86109 17130


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை