அன்னம் தரும் அண்ணன் இவர்
பள்ளிப்படிப்புடன் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த கணேசன் விவசாயத்தில் களமிறங்கினார். பின்னர் அவர் ரியல் எஸ்டேட், கட்டுமான பணிகளில் கவனம் செலுத்தினார். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் ஏற்பட்டது. தொழிலும் நன்கு போய் கொண்டிருந்ததால் கோயில்கள் மீதான பக்தி அன்னதான ஐடியாவுக்கு வழிகோலியது.கொரோனா காலத்தில் இப்பணி உச்சம் தொட்டது. பிழைப்பின்றி தவித்த ஏழை, எளியோர் குடும்பங்களுக்கு 25 கிலோ அரிசி, பருப்பு என உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கினார். பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆண்டுக்கு 10 முறையாவது மதுரை ரிங்ரோடு பாண்டி கோயிலில் 'கிடா' வெட்டி அன்னதானம் வழங்குகிறார்.வெள்ளி, செவ்வாய் நாட்களில் தவறாமல் அழகர்கோயிலில் ஆஜராகும் கணேசனுக்கு, ஆடி 18ம் நாளென்றால் அழகர்கோவில் 18ம் படி கருப்ப சாமிக்கு அரிவாள், சந்தனகாப்பு சாத்துவதோடு, 18 கிடாக்களை வெட்டி மூன்றாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குகிறார்.இனி கருப்பாயூரணி கணேசன் கூறுவதை கேளுங்களேன்: சுவாமி அய்யப்பன்மீது எனக்கு நம்பிக்கை உண்டு. 34 ஆண்டுகளாக சபரிமலைக்கு பக்தர்களை அழைத்துச் செல்கிறேன். தமிழ்மாத பிறப்பு நாட்களிலும் அங்கு செல்வேன். 15 ஆண்டுகளாக அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளராக உள்ளேன். சபரிமலை மேல்சாந்திகளுடன் நல்ல தொடர்பு உண்டு. சபரிமலை கோயிலுக்கு மஞ்சள் பை, விபூதி கவர் வழங்குவதை சேவையாக செய்கிறேன்.கடவுள் அனுக்கிரகத்தால் தொழில் நடக்கிறது. இதனால் அன்னதானத்திற்கென யாரிடமும் நன்கொடை பெறுவதில்லை. இதுபோன்ற பணிகளால் நிம்மதி, மகிழ்ச்சி கிடைக்கிறது. 'மக்களுக்காக மக்கள் பணி' என நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை நடத்தி ஏழைகளுக்கு உணவு, தையல் மெஷின், ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கியுள்ளேன். இயலாத மாணவர்களின் கல்வி, மருத்துவ தேவைக்கும் உதவியுள்ளேன். கோயில் நிர்வாகங்கள் கேட்டாலும் கொடுப்பேன். இப்பணிகளுக்கு எனது குடும்பமும் உறுதுணையாக உள்ளது என்றார்.வருமானத்தில் பெரும்பகுதியை அன்னதானத்திற்காக செலவிடும் இவரை வாழ்த்த 98425 32115ல் தொடர்பு கொள்ளலாம்.