உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / சுடச்சுட பிரியாணியும்... பாய்சன் தட்டுகளும்

சுடச்சுட பிரியாணியும்... பாய்சன் தட்டுகளும்

விசேஷ வீடுகள், கேன்டீன்களில் ஆவி பறக்கும் பிரியாணி, காரசாரமான குழம்புகளை வெள்ளை நிற தெர்மோகோல் தட்டுகளில் பரிமாறுவது சாதாரணமாகி விட்டது. 'கழுவ வேண்டாம்; துாக்கி வீசிவிடலாம்' என்ற வசதியின் பின்னால், உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்கள் இருப்பதை பலரும் கவனிப்பதில்லை. 'தெர்மோகோல் தட்டுகள் 'எக்ஸ்பாண்டட் பாலிஸ்டைரீன்' என்ற பிளாஸ்டிக் பொருளால் தயாரிக்கப்படுகின்றன. இதில் சுடச்சுட பிரியாணி, சாம்பார், ரசம் அல்லது எண்ணெயில் பொரித்த உணவுகளை வைக்கும்போது, வெப்பம் மற்றும் உணவின் தன்மையைப் பொறுத்து அதில் உள்ள 'ஸ்டைரீன்' போன்ற வேதிப்பொருட்கள் உணவுக்குள் கசியும் வாய்ப்பு உள்ளது. உணவின் வெப்பநிலை, கொழுப்புத் தன்மை மற்றும் தட்டுடன் உணவு தொடர்பில் இருக்கும் நேரம் அதிகரிக்கும்போது இந்தக் கசிவு அதிகரிக்கலாம்' என்கின்றன ஆய்வுகள்.

சுற்றுச்சூழல் விஞ்ஞானி அசோக்குமார் வீரமுத்து கூறியதாவது:

அதிக வெப்பமும் எண்ணெயும் தெர்மோகோல் தட்டின் அமைப்பை பாதித்து, நுண் பிளாஸ்டிக் துகள்கள் உணவுடன் கலக்கும் வாய்ப்பை ஏற்படுத்தலாம். இவை உடனடியாக ஒரு குறிப்பிட்ட நோயையோ, புற்றுநோயையோ ஏற்படுத்தும் என்று உறுதியாகக் கூற முடியாது. அதே நேரத்தில், மனித உடலுக்குள் சேரும் நுண் மற்றும் நானோ பிளாஸ்டிக்குகளால் ஏற்படக்கூடிய நீண்டகால பாதிப்புகள் குறித்து உலகளவில் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. சில நிமிடங்கள் உணவு சாப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் தெர்மோகோல் தட்டுகள் எளிதில் மக்குவதில்லை. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் தொடர்பான விதிகளைக் கருத்தில் கொண்டு, விழாக்கள், கேன்டீன்கள், உணவகங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தெர்மோகோல் தட்டுகளைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதிலாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டுகள், செராமிக், கண்ணாடி பாத்திரங்கள் அல்லது உணவுப் பயன்பாட்டுக்கு சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்