அணிலோடும், யானையோடும் ஒருவரானேன்: வனவாசம் செய்யும் ஜஸ்டஸ் ஜோஸ்வா
சிங்கம் வாழ்விடமான மத்திய பிரதேசத்தின் குனோ நேஷனல் பூங்கா, ஆசியாவின் மிகப்பெரிய புல்வெளியான குஜராத்தின் கட்ச், களக்காடு முண்டந்துறை பகுதிகளில் வனம், சுற்றுச்சூழல் தொடர்பாக ஆய்வு நடத்தியவர். இயற்கை, வனவிலங்குகள் மீதான ஆர்வத்தால் அவற்றை பாதுகாக்க முயற்சி செய்து வருபவர். கல்லுாரிகளில் மாணவர்களுக்கு கருத்தரங்கு மூலம் விழிப்புணர்வும், அரசு, தன்னார்வ அமைப்புகளுக்கு, வனப்பகுதியை மேம்படுத்த ஆலோசனைகளும் வழங்கி வருகிறார் வன சுற்றுச்சூழலியலாளர் ஜஸ்டஸ் ஜோஸ்வா. இவர் கூறியதாவது...'பிறந்தது திருச்சி. பெற்றோர் ஆப்பிரிக்காவில் வேலை பார்த்ததால் 4 - 7 வயது வரை அங்கு வளர்ந்தேன். அப்போதே பறவைகள் மீது ஆர்வம் அதிகம் உண்டு. பெயர் தெரியவில்லை என்றாலும் அவற்றை பார்ப்பேன்.பைலட் ஆக ஆசை. கோவை 'பிளையிங் கிளப்பில்' வாய்ப்பு கிடைத்தது. வீட்டில் அனுமதிக்கவில்லை. திருச்சியில் பி.எஸ்.சி., விலங்கியல் படித்தேன். வனம் தொடர்பான ஆர்வம் இருந்ததால் 'எம்.எஸ்சி., வைல்ட் லைப் பயாலஜி' படித்தேன். கடைசி ஆறு மாதம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு வைல்ட்லைப் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானி டாக்டர் ஏ.ஜே.டி., ஜான்சிங்கிடம் சேர்ந்து ஆராய்ச்சி செய்தேன். சேர்வலாறு அணை வரை அமைத்த கால்வாயால் ஏற்பட்ட பல்லுயிர் பெருக்க மாற்றம் குறித்து ஆய்வு செய்தேன்.பறவை ஆராய்ச்சியாளர் சலீம் அலியிடம் சந்திப்பு, டேராடூன் வைல்ட்லைப் இன்ஸ்டிடியூட்டில் பி.எச்.டி., என என் கனவுகள் சாத்தியமாகி கொண்டே இருந்தது. ஆய்வு படிப்புக்காக 1986 - 1989 வரை ஸ்ரீவில்லிபுத்துார் சாம்பல் நிற அணிகள் சரணாலயத்தில் ஆய்வு செய்தேன். அணிலை படிப்பது எளிதல்ல. மனிதர்களை பார்த்தால் பயந்து ஓடும். அதன் வாழ்க்கையை உணர 7 மாதம் அவற்றோடே இருந்தேன். என் இருப்பை பழக்கப்படுத்தினேன். உணவு கொடுக்கவில்லை. என்னை பார்த்தால் அவை பயப்படக்கூடாது என்ற நிலையை உருவாக்கினேன். ஒரு அணில் என் மீது ஏறி என் முகத்தை பார்த்து விட்டு சென்றதை மறக்கமாட்டேன்.என் ஆய்வு முடியும் நேரத்தில் மத்திய அரசும் எதேச்சையாக இப்பகுதியை சாம்பல் நிற அணிகள் சரணலயாயமாக அறிவித்தது. மீண்டும் டேராடூன் சென்று ராஜாஜி நேஷனல் பார்க்கில் யானைகளை பற்றி ஆய்வு செய்தேன். யானைகள் கழுத்தில் டிரான்ஸ்மீட்டர் போட்டோம். அது வருவது, செல்வதை, கண்காணித்தோம். காலை முதல் மாலை வரை யானைகளுடனே இருந்தேன். மேற்கு தொடர்ச்சி மலையை கேரளா பக்கத்தில் இருந்து ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. பரப்பை அதிகரிக்க ஆய்வு, ஆலோசனை வழங்க கூறினர். சரணாலயத்தையொட்டி உள்ள பகுதிகளை ஆய்வு செய்து அரசுக்கு கூறினோம். 2011ல் நாங்கள் வன ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கிரீன் பியூச்சர் பவுண்டேஷன் துவங்கினோம். இதில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அதிகம் உள்ள தொழிற்சாலைகளுக்கு அவற்றை குறைப்பது குறித்த ஆலோசனை, செயல்திட்டமாக வழங்குவோம். பல்லுயிர் பெருக்க மேலாண்மை திட்டம் செய்து கொடுத்தோம். இதனால் தொழிற்சாலைகளால் வனப்பகுதியில் ஏற்படும் பாதிப்பு குறையும்.காடுகள் அழிக்கப்பட்ட இடத்தில் வளர்க்க வேண்டிய தாவரங்கள் குறித்து பரிந்துரை வழங்கினோம். கிரீன் பியூச்சர் அமைப்பில் இருந்து வெளியேறி தற்போது சுற்றுச்சூழலியல், பல்லுயிர் பெருக்க ஆலோசனை வழங்குகிறேன். மறுசீரமைப்பு, மரம் வளர்ப்பது பற்றிய ஆலோசனை, வனவியல் ஆய்வுகளும் செய்து தருகிறேன்.மேற்கு தொடர்ச்சி மலை நமக்கு இயற்கை கொடுத்த மிகப்பெரிய பல்லுயிர் பெருக்க சுரங்கம் எனலாம். நிறைய பசுமை வெளிகள், முக்கிய இயற்கை அமைப்புகள், ஆறுகள், நீர் வழித்தடங்கள் உள்ளன. இதனால் உயிரினங்கள், செடியினங்களும் அதிகம் உள்ளன. விலங்குகளுக்கு சொர்க்கம் போன்று உள்ளது.விலங்குகளின் குணத்தை படிக்க வேண்டும். நாம் உணவு அளிக்காவிட்டால் விலங்குகள் நம்மை தேடி வராது. வனத்திற்குள்ளே என்ன பிரச்னை என தெரிந்து சரி செய்ய வேண்டும். யானை- மனித மோதலுக்கும் வன சூழலியலுக்கு ஏற்றவாறு தீர்வு பெற முடியும்.எந்த வனத்திலும் பறவைகள், பட்டாம்பூச்சிகள் முக்கியமானவை. முன்பு பார்த்த குறிப்பிட்ட இனம் இல்லை என்றால் அந்த பகுதியில் சூழலியல் பிரச்னை என்பதை உறுதி செய்ய முடியும். மறுசீரமைப்பு செய்தால் அந்த இனங்கள் காட்டிற்கு மீண்டும் வந்து விடும். அப்படியென்றால் சீரமைப்பு சரியாக செல்கிறது என்று அர்த்தம்” என்றார்.