| ADDED : ஜூன் 21, 2026 02:50 AM
கால்பந்து வீரராக உருவாக வேண்டுமெனில், கடும் சிரத்தை எடுக்க வேண்டும். அதிக நேரம் ஓட வேண்டும். ஓடி, ஓடி, ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஓடியே தீர வேண்டும், அதுதான் கால்பந்து! மைதானத்தில் பந்தைத் துரத்தும் வேகம் குறையாமல் தீர்க்கமாகப் பேசுகிறார் சந்தோஷ் டிராபி கால்பந்து வீரரான திருப்பூரின் பூபாலன். திருப்பூர், காலேஜ் ரோடு, மாஸ்கோ நகரைச் சேர்ந்த இந்த 27 வயது இளைஞரின் கால்பந்துப் பயணம், கணியாம்பூண்டி மைக்ரோகிட்ஸ் பள்ளியில் எட்டாம் வகுப்பில் தொடங்கியது. பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து கல்லுாரி நாட்களிலும் மைதானமே கதி என்று கிடந்தவருக்குப் பல மாநிலப் போட்டிகள் கைகொடுத்தன. கேரளா கோழிக்கோடு, சென்னை எஸ்.ஆர்.எம்., காரைக்குடி, கன்னியாகுமரி எனப் பூபாலனின் கால்கள் ஓடிய துாரமெல்லாம் வெற்றிகள் விளைந்தன. தொடர் பயிற்சியின் பலனாக, கடந்த 2023-ல் தமிழக சீனியர் 'ஏ' அணிக்குத் தேர்வாகி, பெங்களூருவில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கினார். அந்த அனுபவமும் உழைப்பும், கடந்த 2025 மற்றும் நடப்பு 2026-ஆம் ஆண்டின் புகழ்பெற்ற 'சந்தோஷ் டிராபி' தொடரில் அவரைப் பங்கேற்கச் செய்துள்ளது. தற்போது இந்தியாவின் 'டாப் 20' கிளப்புகளில் ஒன்றான 'பெங்களூரு எப்.சி.' அணிக்காக விளையாடி, திருப்பூருக்குப் பெருமை சேர்த்து வருகிறார். கால்பந்து விளையாட்டின் நுணுக்கங்கள் குறித்து பூபாலன் பகிர்ந்து கொண்டவை: மைதானத்தில் தொடங்கும் ஓட்டம்தான் கால்பந்துக்கு உயிர். 90 நிமிடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து ஓடக்கூடிய அசாத்திய 'பிட்னெஸ்' (உடல் தகுதி) இல்லாமல் இதில் சாதிக்கவே முடியாது. எதிரணியினரின் நகர்வுகளை நொடிப் பொழுதில் கணிக்கும் தனித்துவத் திறனும், சர்வதேச வீரர்களின் ஆட்ட யுத்திகளைக் கூர்ந்து கவனிக்கும் பக்குவமும் வேண்டும். எல்லாவற்றையும் விட, பிள்ளைகளைக் கால்பந்து விளையாட அனுப்பப் பெற்றோர் தயங்கக் கூடாது. 'அடிபட்டுவிடும்' என்ற பயத்தை அவர்கள் கைவிட வேண்டும். நான் 12 வயதில் உதைக்கத் தொடங்கிய பந்து, 15 வருடப் போராட்டத்திற்குப் பிறகுதான் என்னை இந்தச் சிறந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. கால்பந்தில் எடுத்தவுடனேயே சாதித்துவிட முடியாது; சலிக்காத முயற்சியும் பயிற்சியும் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.