உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / மதுரை சித்திரவீதிக்காரன்...

மதுரை சித்திரவீதிக்காரன்...

மதுரையின் பொக்கிஷமாக இருக்கும் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி தமிழ் மாத பெயர்களான சித்திரை, ஆடி, ஆவணி, மாசி பெயர்களில் வீதிகள் இருப்பது எவ்வளவு சிறப்பானதோ, 12 மாதமும் திருவிழா நடக்கும் நகரம் மதுரை என்பதும் சிறப்பானதுதானே. ஜாதி, மத வேறுபாடின்றி சமூக நல்லிணக்கத்துடன் இன்றும் திருவிழாக்களை மதுரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். திருவிழாவுக்கெல்லாம் திருவிழாவான சித்திரைத் திருவிழாவே இதற்கு சாட்சி. அந்த பெயரையே தனது புனைப் பெயராக கொண்டு மதுரை திருவிழாக்கள் குறித்து ஆய்வு செய்து நுாலாக வெளியிட்டு வருகிறார் சித்திரவீதிக்காரன்.தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்.''என் இயற்பெயர் சுந்தர். மதுரை கோவில்பாப்பாக்குடியில் வசிக்கிறேன். பெண்கள் கல்லுாரியில் ஆய்வக உதவியாளாராக பணிபுரிகிறேன். சிறுவயதில் அப்பா என்னை அடிக்கடி மீனாட்சி அம்மன் கோயில் அழைத்துச்செல்வார். இதனால் சித்திரை வீதி மீது எனக்கு ஒருவித ஈர்ப்பு உண்டு. நான் பார்க்கும் திருவிழாக்களை 2010ல் 'மதுரை வாசகன்' என்ற பிளாக்கில் எழுத ஆரம்பித்தேன். இன்றும் எழுதி வருகிறேன். அதில் திருவிழாக்கள் மட்டுமில்லாமல் நான் படித்த நுால்கள் குறித்து திறனாய்வு செய்கிறேன். தற்போது maduraivaasagan யுடியூப் சானல் வாயிலாகவும் புத்தக அறிமுகம் செய்து வருகிறேன்.எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் துாண்டுதலின்பேரில் மதுரை திருவிழாக்கள் குறித்து கட்டுரைகளை தொகுக்க ஆரம்பித்தேன். இதற்கு அவர் தலைமையிலான பசுமை நடை அமைப்பும் காரணம். மாதந்தோறும் வரலாற்று, தொல்லியல் சார்ந்த இடங்களுக்கு அந்த அமைப்பின்மூலம் பயணிப்போம். உடன் வருவோருக்கு அந்த இடம் குறித்து நாங்கள் அறிந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வோம். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் பங்கேற்று ஆச்சரியம் தரும் வரலாற்று நிகழ்வுகளை ஆதாரங்களுடன் கூறுவார்.அதேபோல் அழகர்கோவில் குறித்து பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதிய நுால், மனோகர் தேவதாஸின் மதுரை குறித்த ஓவியங்கள் ரொம்பவே என்னை ஈர்த்தது.இதுபோன்ற சூழலில்தான் மதுரை திருவிழாக்கள் குறித்து எழுத வேண்டும் என தோன்றியது. சித்திரைத்திருவிழா, மீனாட்சி கோயில் திருவிழாக்கள், மேலுார் அ.வல்லாளபட்டி புரவி எடுப்பு திருவிழா, கோரிப்பாளையம் சந்தனக்கூடு திருவிழா, செயின்ட் மேரீஸ் சர்ச் தேர்பவனி திருவிழா, புத்தகத்திருவிழா, வளையங்குளம் நாடகத்திருவிழா உட்பட மதுரை நகர், மாவட்டங்களில் நடக்கும் அனைத்து திருவிழாக்களையும் தினமலர் உள்ளிட்ட நாளிதழ்கள், புத்தகங்கள் போன்ற வற்றை ஆதாரமாக கொண்டு முதற்கட்டமாக 23 திருவிழாக்கள் குறித்து எழுதி 'திருவிழாக்களின் தலைநகரம் - மதுரை' என்ற நுாலை 2019ல் வெளியிட்டேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.அடுத்த நுாலுக்கு திருவிழா குறித்த செய்திகளை சேகரித்து வருகிறேன். சமீபத்தில் கூட மதுரை டி.கல்லுப்பட்டியில் நடந்த ஏழு ஊர் முத்தாலம்மன் கோயில் திருவிழாவுக்கு சென்று விபரங்களை சேகரித்தேன். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இத்திருவிழாவில் ஏழு ஊர்களில் இருந்தும் அம்மனை சப்பரத்தில் மக்கள் சுமந்து வருவது சிறப்பு. மதுரையைச் சுற்றியுள்ள நகரங்களில் நடக்கும் முக்கியமான திருவிழாக்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறேன்'' என்கிறார் இந்த சித்திரவீதிக்காரன்.இவரை வாழ்த்த 90471 17841


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி