மகாபிரபுவும் 65 அறிமுக எழுத்தாளர்களும்!
க டலில் மிதந்தாலும் கவலையில் மூழ்கக் கூடாது! சிக்கலில் சிக்கினாலும் சிதைந்து போகக் கூடாது! என்ற தன்னம்பிக்கை வரிகளுக்கு சொந்தக்காரர் எழுத்தாளர் மகாபிரபு. ஆசிரியர் பிரபு, தந்தை மீது கொண்ட அபிமானத்தால் தந்தை பெயரையும் சேர்த்து மகாபிரபு என்ற பெயரில் எழுதி வருகிறார். தினமலர் லட்சிய ஆசிரியரான இவர் இதுவரை 9 நுால்கள் எழுதியுள்ளார். இவற்றில் 65 அறிமுக எழுத்தாளர்களின் கட்டுரைகளை அரங்கேற்றியிருக்கிறார். இவர் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்தபோது... சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சொந்த ஊர். தொடக்க கல்விக்கு பின்னர் 12ம் வகுப்பு வரை விருதுநகர் குல்லுார்சந்தையில் படித்தேன். அங்கு என் மாமா கிளை நுாலகர் என்பதால் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் போன்றவர்களின் இலக்கிய அறிமுகம் கிடைத்தது. நாளிதழ்கள், வார இதழ்கள், துணுக்குகள், காமிக்ஸ்கள் தான் எனக்குள் எழுத்திற்கு விதை போட்டது எனலாம். முதுகலை முடித்து நண்பர்களுடன் கல்லுாரியில் எம்.பில்., இடம் கிடைக்குமா என தினமும் விசாரிப்போம். ஓர் நாள் உதவி நுாலகர் மிசோரம் மாநிலத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் பணியிடம் ரூ.6500 சம்பளம் என்றவுடன், நண்பர்கள் மவுனமாய் இருந்த நிலையில், துணிந்து முன்வந்தேன். அந்த துணிவு தான் மேப்பில் எங்குள்ளது என்றே தெரியாத எனக்கு பணி கிடைக்க காரணமாய் அமைந்தது. 1998 ஜூலை 8ல் தொடங்கி 2008 வரை மிசோரமில் நான் பணியாற்றியது என் வாழ்வின் பொற்காலம். அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தனர். புது உலகத்தில் நம்பிக்கையோடு இருந்தேன்; 22 வயதில் இருந்த நான் அங்கு 17 வயது மாணவர்களுக்கு பாடம் எடுத்தது புது அனுபவமாய் இருந்தது. ஆங்கில உச்சரிப்பு, வட கிழக்கு மாநில கலாச்சாரத்தில் ஒன்றிணைந்து சில நாட்களிலே அவர்களுக்கு பிடித்த ஆசிரியராய் மாறி விட்டேன்.அங்கு காலை 7:00 மணி, மாலை 5:00 மணி என இரு வேளை சாப்பிடும் வழக்கம் தான் உள்ளது. மிசோ மக்கள் மசாலா, எண்ணெய் அறவே சேர்க்காமல் உப்பு குறைவாக, வேக வைத்தே உண்பார்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் பின்னர் அந்த உணவுகளுக்கு ரசிகனாகி விட்டேன். எனக்கு திருமணமாகி குழந்தைகள் வந்த பின்னர், தமிழ்நாடு வந்து விட்டேன். 80 வருட பாரம்பரியம் மிக்க கல்லல் முருகப்பா பள்ளிக்கு வேலைக்கு வந்த பின்னர் சக ஆசிரியர்களின் துணையோடு மாணவர்களை அறிவியல் கருத்தரங்குகள், போட்டிகளில் பங்கு பெற ஏற்பாடு செய்து வருகிறேன். கல்லல் கிளை நுாலகத்தில் என் சொந்த செலவில் 25 மாணவர்களை உறுப்பினராக்கினேன். நான் கட்டுரை, கவிதை, சிறுகதை என 9 நுால்கள் எழுதியுள்ளேன். என் முதல் நுால் 'உறவுகள்' என்ற கட்டுரை தொகுப்பு. 22 புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி அவர்களின் கட்டுரைகளை அதில் வெளியிட்டேன். 18 வயது மாணவனும், 72 வயது தமிழ் ஆர்வலரும் ஆளுக்கொரு உறவை பற்றி எழுதினர். இப்படி அறிமுக எழுத்தாளர்களின் கட்டுரைதொகுப்பாய் 3 நுால்கள் வெளியிட்டுள்ளேன். இவர்கள் எல்லாம் மாணவர்கள், பல துறை பணியாளர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என எழுத்தார்வம் மிக்கவர்கள். இவ்வாறு 65 கன்னி எழுத்தாளர்களுக்கு அடித்தளமிட்டேன் என்பது எனக்கு பெருமை. தினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2022ல் கிடைத்தது எனக்கு பெரிய கவுரவம். அக்னிச் சிறகுகளின் சாதனையாளர் விருது, இலக்கிய மாமணி விருதுகளும் வாங்கி இருக்கிறேன். எனது 10வது படைப்பாக 'அழகி' எனும் கவிதைத் தொகுப்பு வர உள்ளது. இருக்கும் வரையில் மட்டுமில்லாமல், இறந்த பின்னும் மருத்துவ மாணவர்கள் கற்பிக்க உதவும் விதம் உடல் தானம் செய்ய உள்ளதாக பேசி முடிக்கிறார் ஆசிரியரும் எழுத்தாளருமான மகாபிரபு..! இவரை பாராட்ட 99440 89151