கலைத்திறனை நிரூபித்த நவராத்திரி கலை விழா
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நவராத்திரி கலை விழா ஒன்பது நாளும் களை கட்டியது. திருப்பூர் பிரேமா கல்வி நிறுவனங்கள், திருப்பூர் வடக்கு ரோட்டரி நவராத்திரி குழு, ஆதீஸ்வரர் டிரஸ்ட் மற்றும் திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆகியன இணைந்து நடத்திய இக்கலை விழாவில், மாலை, 6:00 மணிக்கு துவங்கி, இரவு, 9:00 மணி வரை தினமும் ஒவ்வொரு பள்ளி மாணவ, மாணவியரின் வண்ணமிகு, அதுவும் பக்தி சுவை நிரம்பிய நடனம், நாடகம் என அரங்கேறின. ஏதோ நிகழ்ச்சி என்றில்லாமல், ஒன்பது நாளும் கலை நிகழ்ச்சிகள் மிகுந்த சிரத்தையோடு அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து பள்ளி மாணவ, மாணவியர் வித்தியாசத்தை காட்டி, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தினர். அதிலும், காவடியாட்டம், மயில் நடனம், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், காந்தாரா நடனம் என பல்வேறு விதமான நடனங்களை வடிவமைத்த பள்ளி ஆசிரியர்களை பாராட்டியே ஆக வேண்டும்.ஒவ்வொரு நாள் நிகழ்ச்சி நிறைவில், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. அவ்வகையில், ஒன்பது நாளிலும் மொத்தம், 710 மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டதாக, நவராத்திரி கலை விழாக்குழு சேர்மன் சுப்ரமணியன், தலைவர் ரவி, செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் குமார் ஆகியோர் தெரிவித்தனர். தொடர்ந்து, 33வது ஆண்டாக நடந்த நவராத்திரி கலை விழா, பக்தர்களின் மனங்களில் நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கும் என்றால், அது மிகையாகாது.