உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / சொந்தமுள்ள வாழ்க்கை - சொர்க்கத்துக்கு மேலே...

சொந்தமுள்ள வாழ்க்கை - சொர்க்கத்துக்கு மேலே...

'உங்க பாட்டன், பூட்டன், கொள்ளு தாத்தா பேரு என்ன தெரியுமா' என யாரிடமாவது கேட்டு பாருங்கள். 'அது வந்து... அது வந்து...' என யோசிப்பவர்கள் அதிகம். இதே கேள்வியை மதுரை உசிலம்பட்டி மேலப்புதுாரைச் சேர்ந்த சட்டமுத்து, அடஞ்சாரம்மாள் வாரிசுகளின் எள்ளு பேரன்களிடம் கேட்டு பாருங்கள். பேர் முதற்கொண்டு யார் யாருக்கு என்ன உறவுமுறை. இப்போது எங்கே இருக்கிறார்கள் எனச் சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்தி விடுவார்கள்.இதற்கெல்லாம் ஒரு பின்னணி இருக்கிறது.இவர்களும் தங்கள் கொள்ளு தாத்தா, உறவுகள் தெரியாமல்தான் இருந்தனர். சமீபத்தில் உசிலம்பட்டியில் குடும்பமாக சந்தித்தபோதுதான் பழைய உறவுகளை புதிதாக பார்த்து சங்கோஜப்பட்டு பேசி பழகி உரிமையுடன் உறவு முறை சொல்லி மகிழ்ந்திருக்கிறார்கள். இதற்கு விதை போட்டது சட்டமுத்து பேரன்களில் ஒருவரான பாண்டி. இவர் மிட்டாய் வியாபாரம் செய்கிறார்.இந்த அபூர்வ சந்திப்பு குறித்து உறவுகள் சார்பாக தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பாண்டி கூறியது: ''எங்க தாத்தா பாட்டி சட்டமுத்து, -அடஞ்சாரம்மாளுக்கு 5 மகன்கள், 5 மகள்கள். அவர்களின் வாரிசுகள் இன்று 7வது தலைமுறையாக இருக்கின்றனர். 3வது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எங்களை வழிநடத்துகிறார்கள். 3 ஆண்டுகளுக்கு முன் உறவினர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது 'வாரிசுகள் எல்லாம் சேர்ந்தா எப்படி இருக்கும்' என ஆசைப்பட்டேன். அதற்கான முயற்சி மேற்கொண்டேன்.என் மாமனாரின் அப்பா சுப்புராம், சட்டமுத்து தாத்தாவின் பேரன். அவரது குடும்பம் மூலம் பிற வாரிசுகளின் விபரங்களை சேகரித்து போனில் தொடர்பு கொண்டேன். அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் உறவினர்கள் முருகேசன், ஜெகதீசன் என்னுடன் சேர்ந்துகொண்டனர். நாலைந்து தடவை 'மீட்டிங்' போட்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசித்தோம். இதற்காக 2 மாதம் எடுத்துக்கொண்டோம். தென்மாவட்டங்களிலும், சென்னை, பெங்களூரு நகரங்களிலும் உறவுகள் வசிப்பதை தெரிந்து பிப்.9ம் தேதி உசிலம்பட்டியில் திருமண மண்டபத்தில் ஒன்றுகூடுவோம் என தகவல் தெரிவித்தோம். அழைப்பிதழும் அனுப்பினோம். அவர்களும் ஆர்வமுடன் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.'மூன்றாம் தலைமுறை' என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு உருவாக்கி தினமும் எங்கள் முயற்சிகளை 'அப்டேட்' செய்தோம். பலர் எங்களுக்கு வழிகாட்டினார்கள். 'எங்களை நேர்ல கூப்பிடல' என சிலர் வருத்தப்பட்டனர். எங்கள் நோக்கத்தை புரிந்துகொண்டு பங்கேற்றனர். 240 குடும்பங்களைச் சேர்ந்த 600 பேர் வந்தனர். நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.எல்லோரிடமும் பாசமும் தேடலும் இருந்திருக்கிறது. ஆனால் அதை யார் துாண்டிவிடுவது என்பதுதான் இங்கே கேள்விக்குறி. அந்த பாசத்தை நாங்கள் துாண்டியதால்தான் இன்று அனைவரும் ஒன்றுக்கூடினோம். சில மனஸ்தாபங்களால் பேசாமல் இருந்தவர்கள்கூட பேசி ஒன்றுசேர்ந்தார்கள். அங்கேயே மாப்பிள்ளை, பெண் பார்க்கும் படலமும் நடந்தது. செலவுகளை பகிர்ந்துகொண்டோம். ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இனி ஆண்டுதோறும் மே மாதம் கோடை விடுமுறையில் சந்திக்க முடிவு செய்துள்ளோம். அடிக்கடி சந்திக்க முடியவில்லை என்றாலும் வாட்ஸ் ஆப் மூலம் நலம் விசாரிப்புகள் இனி அதிகமாக இருக்கும்'' என சாதித்த மகிழ்ச்சியில் பேசிய பாண்டிக்கு, தாத்தா சட்டமுத்து முதல் அனைவரின் போட்டோக்களையும் கண்டு பிடிக்க ஆசையாம். அந்த முயற்சியிலும் வெற்றிபெறட்டும். இவரை வாழ்த்த 80564 59329எல்லோரிடமும் பாசமும் தேடலும் இருந்திருக்கிறது. ஆனால் அதை யார் துாண்டிவிடுவது என்பதுதான் இங்கே கேள்விக்குறி. அந்த பாசத்தை நாங்கள் துாண்டியதால்தான் இன்று அனைவரும் ஒன்றுகூடினோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி