உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / தமிழ் எங்கள் உயிர்மூச்சு: பாசத்துடன் பர்வீன் சுல்தானா

தமிழ் எங்கள் உயிர்மூச்சு: பாசத்துடன் பர்வீன் சுல்தானா

மூச்சுவிட யாரும் கற்றுத் தருகிறார்களா... இயல்பாக சுவாசிப்பது போல தமிழ் என்னோடு இயல்பாக நடைபோடுகிறது, தோளில் சாய்ந்து உலா வருகிறது. என்னில் இருந்து தமிழைப் பிரிப்பது என்பது சுவாசத்தைப் பிரிப்பது போலத்தான் என்கிறார் தமிழ்ப் பேராசிரியை, மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தின் இயக்குநர் இ.சா.பர்வீன் சுல்தானா. கொஞ்சம் கேள்விகளும் நிறைய பதில்களுமாக அவரது நேர்காணல்...

உருது குடும்பத்தில் தமிழ்மகள் உருவான தருணம்?

பிறந்தது முதல் பத்து வயது வரை வடசென்னை. தற்போது மத்திய சென்னையில் (ராயப்பேட்டை) வசிக்கிறேன். பள்ளி, கல்லுாரி, பல்கலை வரை படித்ததும் தமிழ்ப் பேராசிரியையாக வேலை பார்த்ததும் சென்னையில் தான்.அப்பா ஷாஜமால் உருதுமொழி கவிஞர், ஆடை (துணி) நுணுக்க வடிவமைப்பாளர். நன்றாக பாடுவார், கவிதை எழுதுவார். எல்லாமே உருது தான். ஆங்கிலம், உருது தெரியும். அம்மா பைசுன் நிஷா தமிழ்மொழி பேசுபவர். அம்மாவுக்கு உருது பழகி விட்டது என்றாலும் தமிழில் நன்றாகப் பேசுவார். உண்மையைச் சொல்வதென்றால் ஆங்கில வழிக்கல்விக்கு பணம் கட்ட இயலாத அன்றைய சூழலில் என்னை கைதுாக்கி கரைசேர்த்தது மாநகராட்சி, அரசுப் பள்ளிகளின் தமிழ்வழிக் கல்வி தான். அதனால் தான் பட்டப்படிப்பையும் தமிழில் படித்தேன்.

உங்களின் தமிழார்வத்திற்கு யாரும் தடை போட்டதுண்டா?

அப்பா உருது பேசுவார் என்றாலும் திருமந்திரம் புத்தகத்தை கொடுத்து என் தமிழ் ஆர்வத்தைத் துாண்டியவர் அவரே. அதேபோல திருக்குரானையும் படிக்கச் சொல்வார். அப்பா உருதுவில் கவிதைகளை சொல்லத் தொடங்கும் போது மனம் நெகிழ்ந்து விடும்.ஊதுபத்தி புகை போல கவிதையும் கஜலும் இலக்கியமும் ரசனையும் கொண்ட வளர்ப்பில் எந்த வயதில் கவிதை கற்றுக் கொண்டேன் என சொல்ல முடியவில்லை.தமிழில் எனக்கு கிடைத்த வாய்ப்புகள் அதிகம். படித்தது தமிழ்வழி, தமிழ்மொழிக் கல்வி. தமிழ் என்னைத் தழுவிய போது, உருது இலக்கியங்களை காட்டிலும் பலகோடி மடங்கு அதிகமான ரசனையும் அழகும் ஆழமும் தமிழ் இலக்கியங்களில் இருப்பது தெரிந்தது.என்னை கையை பிடித்துக் கொண்டாள் தமிழ்த்தாய். நான் அவள் கரங்களைப் பிடித்து வந்தேன்.

பிரமிக்க வைத்த தமிழ்ப்புத்தகம்...?

எனது கைப்பையில் எப்போதும் ஒரு புத்தகம் இருக்கும். தினந்தோறும் படித்துக் கொண்டிருப்பேன். சாலையை கடக்கின்ற தாய், தன் குழந்தையை இறுகப்பற்றுவதைப் போல நான் புத்தகங்களை என்னுடன் பிடித்துக் கொள்கிறேன். எந்த புத்தகம் என்று யாரேனும் கேட்டால் பதில் சொல்லத் தெரியாது.பைபிளில் இருந்து ஒரு சொல், திருக்குறள், குரான், திருமந்திரம், ராமாயணம், மகாபாரதத்தில் இருந்து அவ்வப்போது மனதில் ஒரு சொல் வந்து விழும். கம்பராமாயணத்தில் ஆறு எப்படி ஓடியது என்பதற்கு 'சான்றோர் கவியென கிடந்த கோதாவரி' என்ற சொல்லாடல் வரும். கவிதை போல, அதுவும் சான்றோர்களால் எழுதப்பட்ட கவிதை போல கோதாவரி கிடந்தது, அது ஓடவில்லை. அதாவது கிடுகிடுவென ஓடிப்போய் கடலில் கலக்கவில்லை. என்னை எடுத்துக் கொள் என்பது போல கோதாவரி மக்களுக்காக மெதுவாக செல்கிறதாம். இதையெல்லாம் படிக்கும் போது தமிழ் எப்படி ஈர்க்காமல் இருக்கும்.

உங்கள் ஆசான்...

கவிதை, நுால், சொல் அது எந்த மதமாக இருக்கட்டும், பெரிய மனிதர்கள் எழுதிய தத்துவ நுாலாகட்டும்... ஒரு மனிதன் எதையோ இந்த உலகிற்கு தந்துவிட துடிக்கிறான். அந்த துடிப்பு அடங்கிய அத்தனை புத்தகங்களும் நான் படிக்கத் தகுந்த புத்தகங்கள் தான். ஒவ்வொரு புத்தகமும் எனக்கு குருநாதர் போல எதையாவது சொல்லித்தருகின்றன.

எந்த மேடை உங்களுக்கான களம் அமைத்து தந்தது

இலக்கிய மேடைகள் தான். பாரதி மன்றம், பாரதிதாசன் மன்றம், கம்பன் கழகங்கள், ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்ற அமைப்பு ஆகியவை மேடைகளைத் தந்தன. நுாலகங்கள் எங்களுக்கான மேடை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தன. பள்ளிகளில் உள்ள தமிழ்மன்றங்கள் எங்களை வளர்த்தன.

பட்டிமன்றம், சொற்பொழிவு... எது சுகமான பயணம்... சவாலான பயணம்...

நான் சமையல் தெரிந்தவள். நீங்கள் காய்கறிகளை தந்தால் விதவிதமாய் சுவையாய் சமைத்துத் தருவேன். அது பட்டிமன்றமாக இருந்தாலும் சரி, வழக்காடு மன்றமானாலும் சரி. ஆனால் இலக்கியம் பேசும் போது இலக்கியங்கள் எனக்குள் உயிர்ப்புடன் உலாவுகின்றன. என்னை உயர்த்திக் கொள்வதற்காக எனக்குள் இருக்கும் ரசனையை மேம்படுத்துவதற்காக என்னை செதுக்குவதற்காக இலக்கியம் பேசுகிறேன். அதுவே பட்டிமன்றத்தில் சுயஎழுச்சி பற்றி நான் பேசினால் என் முன்னால் இருப்பவர்கள் உயர்கிறார்கள், மகிழ்கிறார்கள்.

உலகத்தமிழ்ச்சங்க இயக்குநர் பொறுப்பு... எப்படி கிடைத்தது. அதை எப்படி பயன்படுத்த போகிறீர்கள்.

இந்த பணியைத் தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. மதுரை மண்ணை மிதித்தால் புண்ணியம் என்பார்கள். மதுரை என்றாலே எனக்குப் பிடித்த விஷயம் மனிதர்கள் தான். அந்த மனிதர்கள் தான் மதுரை மண்ணின் மாண்பை சுமக்கின்றனர்.

மதுரைத்தமிழ் எப்படி இருக்கிறது.

இது அலங்காரம் தான். தமிழின் தாய் மடி இது.

மெல்லத் தமிழ் இனி சாகும்... உண்மையா...

பாரதியின் பாட்டிலேயே இதற்கான விடை இருக்கிறது. 'மெல்லத்தமிழ் இனி சாகும் என்று... அப்பேதை உரை செய்தனன்' என்று பாரதியார் எழுதியுள்ளார். 'இவ்வசை தமிழருக்கு எய்திடலாமோ...' என்று கேட்கிறார். இந்த வசனம் நமக்கு வந்து சேரலாமா என்று கேட்கிறார் பாரதி. இது ஒருபோதும் நம்மை வந்து சேராது. இந்த உலகத்தில் 14 கோடி தமிழர்கள் நிறைந்துள்ளனர். இந்த பூமிப்பந்தில் ஒரு தமிழன் இருக்கின்ற வரைக்கும் கூட மீண்டும் அந்த இனம் உயிர்த்தெழும். தமிழை வெறும் மொழியாக பேசுவதில்லை. அது எங்கள் உயிர்மூச்சு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Minimole P C
செப் 13, 2025 09:24

This lady told that the biggest Tresure that KK left to this world is Stalin. Now you may understand that what type of lady she is. My mother tonque is Tamil and I used to enjoy Bharathiyar, Kannadasan works. But I hate Tamil because this lady type people who used Tamil to their growth. Third rated


Balu1968
செப் 10, 2025 05:25

நமது தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த நல்ல பேச்சாளர்களில் இவரும் ஒருவர். தன்னைவிட தன் குழந்தைகள் மேன்மை பெற வேண்டும் என்று, அன்பை அடக்கி அதிகாரத்தை மட்டும் வெளியில் காட்டுபவர்கள் தந்தைகள். சுல்தானம்மா பேச்சு ஒரு தந்தையின் அன்பை வெளிக்காட்டும் பேச்சாக இருக்கும் என்பதில் ஐயமில்லை, கடுமை கலந்த அன்பு. நாம் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டியது ஒன்று என்னவெனில் இனம் என்பது வேறு, மதம் என்பது வேறு. மதம் மாறலாம் இனம் மாறமுடியாது. தமிழினம் கிடைக்கப்பெற்ற தமிழ் மொழி போதிக்கும் நல்லெண்ணம் கொண்ட மனிதர் சுல்தானம்மா. சுல்தானம்மாவின் தமிழ் தொண்டு மென்மேலும் சிறக்க, பல காலங்கள் நமது சமுதாயத்திற்கு பயன் தர, கற்பனைக்கெட்டாத அண்டசராசரங்களை படைத்தவனை ஒருமனதாக வேண்டி வாழ்த்துகிறேன் மதுரை-பாலு ஆஸ்திரேலியா


sankaran
செப் 09, 2025 21:08

அது சரி... பேர்ல பாதி கூட தமிழ்ல இல்லையே...


Shankar Ganesh
செப் 08, 2025 22:41

அகில உலக உருட்டு


Subramanian
செப் 08, 2025 13:36

தமிழை நேசிப்பவன் கட்டாயமாக எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பான்


Abdul Rahim
செப் 08, 2025 13:02

அருமையான இந்த பேட்டியை தந்த தினமலர் உங்கள் தமிழ் புலமைக்கு உண்மையிலேயே மரியாதை, தொடருங்கள் உங்கள் தமிழ்த்தொண்டை தடையின்றி.


karthik
செப் 08, 2025 12:12

தமிழும் ஆன்மீகமும் என்றுமே இனைந்து தான் வளர்ந்துள்ளது அதை ஏற்றுக்கொள்வீர்களா?


Shekar
செப் 08, 2025 09:49

அப்போ உருது அரபி எல்லாம்?


James Mani
செப் 08, 2025 07:34

உண்மை அருமை தமிழ் வளர்க


Barakat Ali
செப் 07, 2025 16:13

தமிழில் தொழுவதுண்டா ????


Shankar Ganesh
செப் 08, 2025 22:42

அல்வா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை