தஞ்சோங் மாலிம் தந்த தமிழ்த்தலைவன்
தமிழர் பண்பாடு, கலாசாரம், மொழியை பாதுகாக்க உலகளவில் இளமை துடிப்புடன் செயல்படும் தமிழ் அமைப்புகளில், 'உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்' முதன்மையானது. இந்த அமைப்பை, பல்வேறு நாடுகளில் கலை, இலக்கியம், வரலாறு தொடர்பான தமிழ் தொன்மைகளை பேணிக்காத்து பெருமைமிகு இடத்திற்கு கொண்டு செல்லும் பொறுப்பை, 10 ஆண்டுகளாக திறம்பட செய்து, தமிழர் நெஞ்சங்களில் நிறைந்து வருகிறார், மலேசியாவை சேர்ந்தவரான உலக தமிழ் பண்பாட்டு இயக்கத் தலைவர் ப.கு.சண்முகம்.மலேசியாவில் செப்டம்பரில் நடக்கவுள்ள சர்வதேச மாநாட்டிற்காக தமிழகத்தில் முக்கிய தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்களுக்கு அழைப்பு விடுக்க மதுரை வந்தபோது தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக நம்மிடம் அவர்...மலேசியாவின் தஞ்சோங் மாலிம் பகுதியில் பிறந்து வளர்ந்தாலும் என் பூர்வீகம் தமிழகம் நெய்வேலி. அப்பா பக்கிரிசாமி, அம்மா குப்பம்மாள். மலேசியாவில் தமிழ் வழியில் படித்தேன். கலைத்துறையில் ஆர்வத்தால் படிக்கும் போதே தமிழ், சமூக, புராண நாடகங்கள் தயாரித்து அரங்கேற்றியுள்ளேன். 1950களில் மலேசியாவில் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பான ஆங்கில ஆட்சி காலம். கிடைத்த காண்ட்ராக்ட் பணிகளை செய்து, தமிழ் அமைப்புகள் மூலம் என் தமிழ்த் தாகத்தை தீர்த்து வந்தேன்.மலேசியாவில் 1969ல் உள்நாட்டு கலவரத்தை நேரில் பார்த்து, ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் வீட்டில் தஞ்சமடைந்து தப்பித்த நபர்களில் நானும் ஒருவர். அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் 'என் காலத்தில் இப்படி ஒரு சம்பவமா' என கலங்கிய சம்பவம் இன்றும் நினைவில் உள்ளது. அப்போதெல்லாம் மலேசியாவில் தொழில்ரீதியான வளர்ச்சி இல்லை. தமிழர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் வளர்ச்சியை பெற்றிருந்தனர்.அந்த காலகட்டத்தில் தான் இலங்கை யாழ்பாணத்தில் அமரர் கனகரத்தினத்தால் 1974ல் உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நிறுவப்பட்டது. இதன் 6வது தலைவராக 10 ஆண்டுகளாக தொடர்கிறேன். இந்த இயக்கம் மூலம் பல்வேறு நாடுகளில் சர்வதேச மாநாடு நடத்தியுள்ளேன். நான் எழுதிய சிறுகதைகள் மலாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.உலக அளவில் தமிழ்ச் சமூகத்திற்கு பணியாற்றுவோரை உற்சாகப்படுத்த மலேசியாவிற்கு அழைத்து 'சர்வதேச சான்றோர் விழா' நடத்தி தங்கப் பதக்கங்கள் பரிசளிக்கிறோம். மலேசியாவில் 523 தமிழ்ப் பள்ளிகளில் உள்ள 70 ஆயிரம் மாணவர்களுக்கு உதவி செய்துவருகிறோம். தமிழ்ப் பள்ளிகளுக்கு சென்னை வி.ஜி.பி., சந்தோஷம் சார்பில் திருவள்ளுவர் சிலைகளை வழங்கி வருகிறோம்.அடுத்தாண்டு மார்ச்சில் தொழிலதிபர் ஓம் தியாகராஜன் தலைமையில் அகத்தியர் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழ்ப் பண்பாட்டு இயக்க சேவையால் ஈர்க்கப்பட்ட மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், ரூ.10 லட்சம் நிதி மாநாடு நடத்த இயக்கத்திற்கு வழங்கியுள்ளார்.மலேசியாவில் 30க்கும் மேற்பட்ட ஹிந்து கோயில்களை ஒரு கட்டட கான்ட்ராக்டராக கட்டிய பேறும் எனக்குள்ளது. அங்கு தமிழ் கலாசாரத்தை ஊக்குவிக்கிறோம். தமிழ் நிகழ்ச்சிகளுக்கு, சேலை கட்டி வரும் பெண்களையும், வேஷ்டி கட்டி வரும் இளைஞர்களையும் கவுரவிக்கிறோம். நுாற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நுால் வெளியிட்டுள்ளோம்.வரும் தலைமுறையினருக்கு தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும், தொன்மையையும் கொண்டு செல்வதை கடமையாக நினைக்கிறேன். தமிழ் மொழி, பண்பாடு உலகெங்கும் எழுச்சி பெற்று வருவதை தற்போது காண முடிகிறது. அது அழுத்தமுற வேரூன்ற எங்கள் அமைப்பு உறுதுணையாக இருக்கும்.தமிழர் அனைவரும் தமிழை படிக்க வேண்டும்; பேச வேண்டும். தமிழில் குழந்தைகளுக்கு பெயரிடுதல் வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார் தமிழாய் வாழும் 77 வயது ப.கு.சண்முகம்.