உள்ளூர் செய்திகள்

ஆக்லாந்தில் சங்கீத உத்சவம்

நியூஸிலாந்து கர்னாடிக் மியூசிக் சொசைட்டி கடந்த 25 வருடங்களாக மிகச் சிறப்பாக சங்கீத உத்சவத்தை இந்தியாவிலிருந்து இசைக் கலைஞர்களை வரவழைத்து ஒவ்வொரு ஜூன் மாதத்திலும் நடத்தி வருகின்றனர். இந்த வருடம் சென்ற மூன்று தினங்களாக சனிக்கிழமை முதல் திங்கள் மாலை வரை சிறந்த இசை கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மூன்று நாட்களும் சங்கீத உத்சவத்தை ஆக்லாந்தில் உள்ள எல்லர்ஸ்லீ மைக்கேல் பார்க் பள்ளி அரங்கத்தில் மிகச் சிறப்பாக முறையில் நடந்தேறியது.. சனி மற்றும் திங்கள் காலை காலை 9 மணிக்கு சங்கீத பள்ளியில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளின் பாட்டு, வயலின் மற்றும் வீணை கச்சேரி நடைபெற்றது. ஆதித்ய நாராயண் கச்சேரிசனியன்று (31/5/2025) மாலை 5 மணியளவில் சங்கீத விழாவின் தொடக்கமாக முரளிதரன் இசைக் கலைஞர்களை வரவேற்று பேசினார். முதல் நாளன்று வித்வான் எஸ் ஆதித்ய நாராயணனின் இசைக் கச்சேரி நடைபெற்றது. அவர் சங்கீத கலா ஆச்சாரியா சுகுணா வரதாச்சாரியிடம் இசை பயின்றவர். நிகழ்ச்சியில் முதலில் அவர் கல்யாணி ராகத்தில் அமைந்த பல்லவி கோபால ஐயர் இயற்றிய வனஜாக்ஷி என்ற வர்ணத்தோடு கச்சேரியை ஆரம்பித்தார். பின் மாயாமாளவகௌளை ராகத்தில் ஸமானமெவரு என்ற கீர்த்தனையை நிரவலுடன் பாடி சிறப்பித்தார். தொடர்ந்து முத்துஸ்வாமி தீக்ஷிதரின் பிருந்தாவன சாரங்காவில் அமைந்த சௌந்தர்ராஜம் ஆஸ்ரயே, ஸத்குரு தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனையை ஒன்றான ஜகதாநந்தகாரகா பாடி ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கினார். பின்னர் காம்போஜி ராகத்தை மையமாக எடுத்துக் கொண்டு மிக அழகாக ஆலாபனை செய்து முசிறி சுப்ரமணிய சாஸ்திரியின் ஓ ரங்கசாயி என்ற கீர்த்தனையை கல்பனா ஸ்வரங்கள் அமைத்து ரெங்கநாதரை கண் முன் நிறுத்தி விட்டார். தொடர்ந்து சுத்த தன்யாசியில் நாராயண நின்ன நாம ஸ்மரணவும், அடாணா ராகத்தில் ஒரு கிருதியை பாடி பின் சாய் பஜன் மற்றும் தில்லானா பாடியும் நிகழ்ச்சியை இனிதாக மங்களம் இசைத்து முடித்தார். அவர் எடுத்துக்கொண்ட ராகங்கள் எல்லாமே மிகச் சிறப்பானதாகும். ரசிகர்கள் அனைவரும் இடைவிடாமல் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சுரேஷ் ராமச்சந்திரா இசைக்கலைஞர்களை வாழ்த்தி நன்றி தெரிவித்தார்சூர்ய பிரகாஷ் இசைக்கச்சேரி. மறுநாள் ஞாயிறன்று (01/06/2025) காலை 10 மணிக்கு வித்வான் சூர்யப்ரகாஷின் இசைக்கச்சேரி அமையபெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜெய்சங்கர் இசை கலைஞர்களை வரவேற்று பேசினார். கருணை செய்வாய் கஜ முகா என்று ஹம்சத்வனி யில் ஆரம்பித்து ருத்ரப்ரியா ராகத்தில் தியாகராஜரின் லாவண்யா ராமா கருணை என்ற கீர்த்தனையை லகுவாக பாடி லதாங்கி ராகத்தில் வேங்கடரமணா உன் திருவிளையாடலை என்ற கீர்த்தனையை பாடி பின்னர் கன்னடா ராகத்தில் ஸ்ரீ மாத்ருபூதம் என்ற கீர்த்தனையை பாடினார். தொடர்ந்து ஹம்சநாத ராகத்தில் தியாகராஜரின் பண்டுரீதீகொலுவை கீர்த்தனையை அழகாக ஸ்வரங்களுடன் பாடி நிகழ்ச்சியில் பைரவி ராகத்தை முதன்மை ராகமாக எடுத்துக்கொண்டு அழகாக ஆலாபனை செய்து தியாகராஜரின் கொலுவை கீர்த்தனையை விஸ்தாராமாக கல்பனா ஸ்வரங்களுடன் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து ராகம் தானம் பல்லவியில் சாரங்க ப்ருந்தாவனசாரங்க மற்றும் ரஸிக ரஞ்சனி ராகங்களை ஆலாபித்து சாரங்கனை ரங்கனை நினை மனமே என்ற பல்லவியை சிறப்பாக ஸ்வரங்களுடன் பாடி சிறப்பான தனி ஆவர்தனத்துடன் முடித்து சிந்துபைரவியில் புரந்தரதாஸரின் வெங்கடாசலநிலையம் என்ற கீர்த்தனையையம், பாரதியாரின் தேஷ் ராகத்தில் அமைந்த தீர்த்த கரையினிலே என்ற பாடல் மனதை நெகிழ்வித்தது, பின்னர் மதுரை மணி ஐயரின் இங்கிலிஷ் நோட்டை பாடி கச்சேரியை மங்களம் பாடி முடித்தார். ரசிகர்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை நீண்ட கரவொலியாக தெரிவித்தனர். பத்மா கோவர்த்தன் இசை கலைஞர்களை பாராட்டி நன்றி தெரிவித்தார்.ஜெயந்தின் புல்லாங்குழல் ஓசைஞாயிறன்று மாலை 5 மணிக்கு (01/06/2025) இசை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த வித்வான் ஜெ.ஏ.ஜெயந்தின் புல்லாங்குழல் இசைக்கச்சேரிக்கு தீரஜ் வெங்கடாச்சலம் இசை கலைஞர்களை வரவேற்று அறிமுகப்படுத்தினார். ஜெயந்த் முதலில் கேதாரகௌள ராகத்தில் தியாகராஜரின் கீர்த்தனையை மிக அழகாக வாசித்து தொடர்ந்து அவரின் பிந்து மாலினி ராகத்தில் எந்த முத்தோ எந்த சொகுசு என்ற கீர்த்தனையை அழகாக வசித்து முடித்தார். பின்னர் ஆதி தாளத்தில் அமைந்த பட்டணம் சுப்ரமணிய ஐயரின் ஷண்முகப்ரியா ராகத்தில் மரி இவரே திக்கெவரையா ராம என்ற கீர்த்தனையும் பிறகு நளினகாந்தி ராகத்தில் மனவியாலக்கின் இசைத்து மோஹனராகத்தை முதன்மை ராகமாக எடுத்துக்கொண்டு விஸ்தாரமாக ஆலாபனை செய்து தியாகராஜரின் நன்னு பாலிம்ப கீர்த்தனையை மிகச் சிறப்பாக இசைத்தார். அவரின் புல்லாங்குழல் நாதம் இசை ரசிகர்களை கிறங்கடித்தது எனலாம். பின்னர் பெஹாக் ராகத்தில் நாராயணத்தே நமோ நமோ, ஆஹிர்பைரவியில் பிபரே ராமரசம், புரந்தர தாஸரின் சிந்து பைரவி ராகத்தில் தம்பூரி மீட்டித்தவா இசைத்தும் சாயி பஜன் பௌள ராகத்தில் இசைத்தும் மங்களம் இசைத்தும் கச்சேரியை முடித்தார். ஜெயந்தின் புல்லாங்குழலிசை கேட்போரின் மனதை மயக்குவதாக இருந்தது, கச்சேரியின் இறுதியில் ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று நீண்ட நேரம் கரவொலி எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சொசைட்டியின் செயலாளரான ரவி நாகராஜன் நிகழ்ச்சியை பாராட்டி பேசினார்.நந்தினியின் பாட்டுக் கச்சேரிமறுநாள் திங்களன்று (02/06/2025) மாலை 5 மணிக்கு சாந்தி ரவி நிகழ்ச்சியின் தொடக்க உரை கூறினார். தருண் முரளீதரன் இசை கலைஞர்களை வரவேற்று அறிமுகப்படுத்தினார். விதூஷி டாக்டர் என்.ஜெ. நந்தினியின் பாட்டு கச்சேரி நடைபெற்றது. பஞ்சரத்ன கீர்த்தனைகளில் ஒன்றான கௌள ராகத்தில் துடுக்குகள என்ற கீர்த்தனையுடன் நிகழ்ச்சி ஆரம்பமே காலை கட்டியது. தொடர்ந்து பேகடா ராகத்தில் ஒரு கீர்த்தனை, நாடகப்ரியா ராக க்ருதி , ஷ்யாமா சாஸ்திரியின் புன்னாக வராளி கனகஷைல லலித விஹாரி, தியாகராஜரின் ஜெயந்தஸ்ரீ ராகத்தில் மருகேலரா போன்ற கீர்த்தனைகளை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து கல்யாணி ராகத்தில் நீண்ட ஆலாபனை செய்து கல்பனா ஸ்வரங்கள் அமைத்து பாடியது சிறப்பாக அமைந்தது. பின்னர் புரந்தர தாஸரின் மாண்ட் ராகத்தில் பாரோ கிருஷ்ணையா மற்றும் பௌள ராகத்தில் தில்லானா பாடி கச்சேரியை இனிதே நிறைவு செய்தார். பக்கவாத்தியம் அருமைமூன்று நாள் கச்சேரிகளிலும் பக்க வாத்ய கலைஞர்களான சம்பத் வயலின் இசையும், சங்கர நாராயணனின் மிருதங்க தனிஆவர்த்தனமும் மிகச் சிறப்பாக அமைந்து ரசிகர்களின் கரகோஷத்தை பெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் பவானி சுரேஷ் இசைக்கலைஞர்களை வெகுவாக பாராட்டி பேசினார். கர்னாடிக் சொசைட்டியின் செயலர் ரவி நாகராஜன் சங்கீத விழாவில் மூன்று நாட்களும் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார். சங்கீத விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் மூன்று நாட்களும் சிறப்பான உணவு வழங்கப்பட்டது.. மனதுக்கு மகிழ்ச்சியான சங்கீகத்தை மூன்று நாட்களும் கேட்டு ரசித்த முழு மன நிறைவோடு அடுத்த வருடம் நடக்க போகும் இசைவிழாவை எதிர் நோக்கி ரசிகர்கள் சென்றனர் என்பதில் சங்கேதமில்லை. - - நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !