உள்ளூர் செய்திகள்

பிரிஸ்பேனில் சகோதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்

பிரிஸ்பேனில் சகோதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் பிரிஸ்பேன்: லலிதகலாலயா நாட்டியப் பள்ளியின் மாணவிகளும், பாலசுப்பிரமணியன்-சித்ரா தம்பதிகளின் புதல்விகளுமான, செல்வி திவ்யா மற்றும் செல்வி வித்யாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த சனிக்கிழமை, 25 அக்டோபர் அன்று, பிரிஸ்பேன் QACI கலையரங்கில் சிறப்பாக அரங்கேறியது. துவக்கம் முதல் இறுதி வரை இரு சகோதரிகளும் அனாயசமாக ஆடி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். சகோதரிகளின் அனைத்து நடனங்களும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. அவற்றில், குறிப்பாக சகோதரிகளின் மீரா பஜன் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. நாக நிருத்தத்தில் பாம்பு போல் ஆடிய திவ்யாவின் அயராத ஆட்டமும் சுழற்சியும் அனைவரையும் திகைக்க வைத்தது. இசையில், நாட்டியப்பள்ளியின் ஆசிரியை பத்மலட்சுமி ஶ்ரீராம் நட்டுவாங்கம் செய்ய, சங்கீத ரத்னா சுதேவ் வாரியார் வாய்ப்பாட்டு பாடினார். பக்க வாத்தியத்தில், மாயவரம் விஸ்வநாதன் மிருதங்கமும், உள்ளுர் கலைஞர் அஸ்வின் நாராயணன் வயலினும், சிட்னியைச் சேர்ந்த வெங்கடேஷ் சிரிதரன் புல்லாங்குழலும், வெங்கடேசின் சகோதரி சௌம்யா சிரீதரன் வீணையும் வாசித்தனர். செல்வி சிவானி ஶ்ரீராம் அவ்வப்போது அவர்களுடன் இணைந்து பல்வேறு சிறப்பு இசைக் கோர்வைகளை சேர்த்து வழங்கி மெருகூட்டினார். நாட்டியப்பள்ளியின் ஆசிரியை பத்மலட்சுமி ஶ்ரீராம், சகோதரிகளின் அற்புத ஆட்டத்தைப் பாராட்டி பேசி, அவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். இறுதியில், சகோதரிகளின் பெற்றோர் நன்றி நல்கி நாட்டியப்பள்ளி ஆசிரியையும், இசைக்கலைஞர்களையும் கௌரவித்தனர். - பிரிஸ்பேனில் இருந்து நமது செய்தியாளர் ஆ.சோ. ரெங்கநாதன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !