அமீரகத் தமிழ் நாடக ஆர்வலர்களுக்கு குறுநாடக விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு!!
முத்தமிழில் ஒன்றான நாடகம் எனும் கலையில் திறமையும் ஈடுபாடும் உள்ளவர்கள் மிக அரிது. சுவாரசியமான கதை களத்தினை உருவாக்கி, பல நாட்கள், பல மணி நேர ஒத்திகைக்கு பிறகு மேடையேற்றுவது என்பது சவாலானது. மேலும் 12 நிமிடத்திற்கு உட்பட்ட கதையை உருவாக்கி அதனை மேடையாக்கம் செய்வதற்கு அதனினும் பெரு முயற்சி தேவைப்படுகிறது. பரபரப்பான துபாய் நகரத்தில், தமிழ் சமூகத்தினருக்கான இப்படி ஒரு வாய்ப்பினை கடந்த 8 வருடங்களாக தொடர்ந்து வழங்கி வருகின்றனர் விழா அமைப்பினர். கதைகள் அனைத்தும் பெறப்பட்டதும் விழாவின் சிறப்பு விருந்தினர் தேர்ந்தெடுத்த கதைகள் மட்டுமே பங்குபெறும் வாய்ப்பினை பெறும். 12 நிமிடங்களுக்கு உட்பட்ட கதைகள், 12 கலைஞர்கள் மட்டுமே கொண்ட ஒவ்வொரு குழுவினரால் மேடையேறும். 12 விதமான பரிசுகளை பெற நாடக எழுத்தாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் அனைவரும் போட்டியிடுவர். ஏறத்தாழ 120 கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறவும் காணவும் பலர் ஆர்வத்துடன் முன்வருவர் என்றால் அது மிகையில்லை. சிறு குழந்தைகள் தாங்களே எழுதி இயக்குவதும், முழுதும் பெண்களே பங்கு பெறும் நாடகங்களும் இந்த விழாவின் சிறப்பம்சம் எனலாம். நாடக உலகில் பிரபலமானவர்களும், பழுத்த நாடக நடிப்பு அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டுமே இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக வந்து சிறப்பித்துள்ளனர். எந்த லாப நோக்கமும் இல்லாது இங்குள்ள தமிழர்களுக்கு நாடக கலையின் அனுபவங்களை தரும் ஒற்றை நோக்கத்துடன் நடை பெற்று வருகிறது இவ்விழா, இவ்விழாவில் பங்கு பெற்ற அனுபவத்திலும், ஊக்கத்திலும் ஓரிரு குழுக்கள் சென்னையில் நடக்கும் நாடக விழாவிலும் பங்கு கொண்டு பெருமை சேர்த்துள்ளனர்!!! இவ்வருட அக்டோபரில் நடக்க இருக்கும் அமீரக குறுநாடக விழாவினைக் காணவும் கலந்து கொள்ளவும் அனைவரையும் வரவேற்று, 15.7.2024 தேதிக்கு முன்பு தங்கள் நாடக கதை வசனத்தை தமிழில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டுமென்றும், மேலும் விபரங்களுக்கு 2024ameeragakurunadagavizha@gmail.com அல்லது 050 3920387 ஐ அணுகலாம் எனவும் தகவல் அளித்தனர் விழா அமைப்பாளர்களான ஆனந்த் சுப்ரமணியன் மற்றும் ரமா மலர். - நமது செய்தியாளர் காஹிலா