கத்தார் தமிழர் சங்கத்தின் சார்பில் அப்துல் கலாம் இலக்கிய விழா
கத்தார் தமிழர் சங்கத்தின் சார்பில் அப்துல் கலாம் இலக்கிய விழாகத்தார் தமிழர் சங்கம் ஏபிஜே அப்துல் கலாம் நினைவாக இந்திய பள்ளி மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள் மற்றும் இலக்கிய விழாவை நடத்தியது. முந்தைய ஆண்டுகளில் பேச்சுப்போட்டி மட்டுமே நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு போட்டிகள் விரிவுபடுத்தப்பட்டு ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகள் சேர்க்கப்பட்டன.இலக்கியப் போட்டிகள் 21 நவம்பர் 2025 அன்று பவன்ஸ் பொதுப் பள்ளியில் நடைபெற்றன. இளநிலை, நடுநிலை, உயர்நிலை என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் 15 இந்திய பள்ளிகளை சேர்ந்த 250 க்கும் மேலான மாணவர்கள் ஓவியம், பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா மற்றும் சிறப்பு கவியரங்கம் 22 நவம்பர் 2025 அன்று சாவித்திரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் நடந்தேறியது. இந்தியத் துணைத் தூதர் சந்திப்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார். மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் மொழி ஆற்றலை பாராட்டிய அவர், “இலக்கியமும் கலைகளும் மாணவர்களின் நற்பண்புகளையும் சிந்தனையையும் வளப்படுத்துகின்றன” என குறிப்பிட்டார்.சிறப்பு கவியரங்கத்தில், கவிஞர்கள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை வழங்கினர். “சங்க இலக்கியமும் வாழ்வியலும்” என்ற தலைப்பில் பேசிய பேச்சாளர்கள், மனிதநேயம், அன்பு, வீரம் மற்றும் ஒழுக்க நடத்தை ஆகியவற்றில் சங்க இலக்கியம் எவ்வாறு நவீன சமூகத்தை தொடர்ந்து வழிநடத்த முடியும் என்பதை விவாதித்தனர். மாணவர்களின் கற்பனைத் திறன் மற்றும் மொழித்திறனை வளர்த்தெடுக்கும், தமிழ் கலாசாரம் மற்றும் தமிழ் மொழியின் செழுமையை பேணி காக்கும் இந்நிகழ்ச்சியை நடத்திய கத்தார் தமிழர் சங்கத்தை அனைவரும் பாராட்டினர்.