உள்ளூர் செய்திகள்

ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் திருக்குறள் அரபு மொழிபெயர்ப்பு நூல்

ஷார்ஜா: சென்னைப்பல்கலைக் கழகம், அரபு, பாரசீகம் & உருதுத் தலைவர் பேராசிரியர் அ ஜாகிர் ஹுசைன் அரபியில் மொழிபெயர்த்த திருக்குறள் நூலின் கையெழுத்திடும் நிகழ்வு ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கோலாகலமாக நடைபெற்றது. அமீரகத்தின் முன்னோடி அரபுக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் டாக்டர் ஷிஹாப் கானெம், டாக்டர் டாக்டர் அப்துல் ஹக்கீம் அல்ஸுபைதி, டாக்டர் மர்யம் அல் ஷெனாஷி, டாக்டர் அனஸ் அஹ்மத் அய்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர், முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஹ்ரூப், ஈமான் செயலாளர் யாசீன், முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஷா சிறப்பு அழைப்பாளர்களாக விழாவில் பங்கேற்றனர். அரபு எழுத்தாளர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் பேராசிரியர் ஜாகிர் ஹுசைன் கையெழுத்திட்டு திருக்குறள் அரபு மொழிபெயர்ப்பு நூலை வழங்கினார். திருக்குறள் அரபு கையெழுத்திடும் நிகழ்வு பார்வையாளர்களை அரபு மக்களை வெகுவாக கவர்ந்தது. சர்வதேச புத்தகச் சந்தையில் திருக்குறள் அரபு நூல் இடம் பெறுவது இதுவே முதல்முறை. ஷார்ஜா புத்தக ஆணையம் நிகழ்வை மிகவும் நேர்த்தியாக ஒருங்கிணைத்திருந்தது. கலமுன் பதிப்பகம், ஷார்ஜா நூலை வள்ளுவரின் படத்துடன் அழகாக வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. - துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !