துபாயில் பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற தமிழக மாணவக்கு கோல்டன் விசா
துபாய்: துபாய் சென்ட்ரல் பள்ளிக்கூடத்தில் நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த முஹைதீன் அப்துல் காதர்- சுமையா தம்பதியின் மகள் அசிமா பிளஸ் டூ, சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவில் படித்து 96.6 சதவீத மதிப்பெண் பெற்று பள்ளிக்கூட அளவில் முதலிடம் பெற்றார். மேலும் சைக்காலஜி பாடத்தில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றார். கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு அமீரக அரசு பத்து ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது. துபாய் அன்வர் பிசினஸ்மென் சர்வீஸ் அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் அன்வர்தீன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் அமீரக பிரமுகர் ஷேக் அலி சயீத் அலி புத்தவில் அல் மத்ரூஸி கோல்டன் விசாவை வழங்கினார். விழாவில் அமீரக தொழிலதிபர் ஆபித் ஜூனைத், அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர், செய்யது அபுதாஹிர், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், பெற்றோர் முஹைதீன் அப்துல் காதர், சுமையா மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அனைவரும் அசிமாவின் சாதனையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். அசிமா சென்னை, வண்டலூர் பி.எஸ். அப்துல் ரஹ்மான் கிரசெண்ட் உயர் கல்வி நிறுவனத்தில் தற்போது சேர்ந்துள்ளார். - நமது செய்தியாளர் காஹிலா