உள்ளூர் செய்திகள்

ரியாத் தமிழ்ச் சங்க நூல்கள் வெளியீட்டு விழா

ரியாத் தமிழ்ச் சங்கத்தின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா - விரியும் சிறகுகள் விழாவாக சிறப்பாக நடைபெற்றது. ரியாத் தமிழ்ச் சங்கம் கடந்த ஆண்டுகளில் உலகளாவிய அளவில் நடத்திய கவிதை மற்றும் சிறுகதைப் போட்டிகளின் தேர்வு பெற்ற கதை, கவிதைகள் இரு தொகுப்பாகவும் கவிஞர் ஷேக் முகமது ஷாஜகான் எழுதிய சிறுகதைகள் 1000 டாலர் கவிதையும் நம்பிக்கைப் பூக்களும்' என்கிற தலைப்பிலும், கவிஞர் இப்னு ஹம்துன் எழுதிய கவிதைகள் 'மௌனத்தின் பாடல்' என்கிற தலைப்பிலுமாக நான்கு நூல்கள் சிறப்பாக வெளியிடப்பட்டன. விழா ஒருங்கிணைப்பாளர் பொருளாளர் நரேஷ் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார். தலைவர் ஹைதர் அலி வரவேற்புரை வழங்க விழாவை செயற்குழு உறுப்பினர் மாதவன் தொகுத்து வழங்கினார். உலகளாவிய கவிதைப் போட்டித் தொகுப்பான 'நீர் தேடி வந்த நிலம்' நூலை முன்னாள் பொருளாளர் ராம் மோகன் வெளியிட செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் பெற்றுக் கொண்டார். நூலை ஆய்வு செய்து தமிழாசிரியர் பூங்குழலி பேசினார். உதைக்கப்படாத கால்பந்து என்ற சிறுகதைத் தொகுப்பு நூலை சங்கத்தின் மேனாள் தலைவர் வெற்றிவேல் வெளியிட செயற்குழு உறுப்பினர் அரவிந்த் பெற்றுக்கொண்டார். மற்றொரு செயற்குழு உறுப்பினர் மதி சிறப்பாக ஆய்வுரை நிகழ்த்தினார். அடுத்து, பதிப்பகக் குழுவின் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஜியாவுதீன் தனது உரையில் தமிழ் இலக்கியத்தில் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் பங்களிப்பு பற்றியும், ஒரே முயற்சியில் நான்கு புத்தகங்களையும் அச்சிட்டு வெளியிட்ட அனுபவம் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் இப்புத்தகங்களை அழகாக வடிவமைத்து அச்சிட்டு வெளியிட்ட சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகத்துக்கும் அதன் உரிமையாளர் புகழேந்திக்கும் நன்றி தெரிவித்தார். நடப்பாண்டில் நடந்த உலகளாவிய கவிதைப் போட்டியின் இறுதி நடுவராக செயற்பட்ட கவிஞர் கலாப்ரியாவுக்கு, தலைவர் ஹைதர் அலியுடன் இணைந்து பதிப்பக குழு தலைவர் ஜியாவுதீன் பாராட்டுக் கேடயத்தை வழங்க, அவர் சார்பாக மேனாள் தலைவர் சஜ்ஜாவுதீன் பெற்றுக்கொண்டார். இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து ஒத்துழைத்த எழுத்தாளர் பெ.கருணாகரனுக்கு, தலைவர் ஹைதர் அலியுடன் இணைந்து மேனாள் தலைவர் சாகுல் ஹமீது பாராட்டு கேடயம் வழங்க, அவர் சார்பாக மேனாள் தலைவர் ஷாஜஹான் பெற்றுக்கொண்டார். மௌனத்தின் பாடல் கவிதை நூலை துணைச் செயலாளர் இர்ஷாத் வெளியிட துணைத் தலைவர் ஜாபர் சாதிக் பெற்றுக் கொண்டார். நூல் பற்றிய ஆய்வுரை செயற்குழு உறுப்பினர் சிவராமலிங்கம் சிறப்பாக வழங்கினார். கவிஞர் இப்னு ஹம்துன் தனது ஏற்புரையில் இலக்கியத்தின் தேவை என்ன? இன்றைய காலம் எவ்வாறு சவால்கள் நிறைந்தது என்பதை விளக்கினார். இறுதியாக இலக்கிய ஷாஜகான் எழுதிய '1000 டாலர் கவிதையும் நம்பிக்கை பூக்களும்' சிறுகதைத் தொகுப்பை மேனாள் தலைவர் இம்தியாஸ் வெளியிட. செயற்குழு உறுப்பினர் யூசுப், தம்பீஸ் வாசிம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூலை முருகேஸ்வரி ஆய்வு செய்து அருமையாக உரையாற்றினார். இலக்கியர் ஷாஜகான் தனது இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டும் உரமிட்டும் வளர்த்த அனைவருக்கும் இதய நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். செயலாளர் சரவணன் நன்றியுரை அளிக்க, இரவு உணவுடன் விழா இனிதே நிறைவுற்றது. - நமது செய்தியாளர் M Siraj


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்