உள்ளூர் செய்திகள்

செங்கடல் தமிழ்ச் சமூகம் சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

செங்கடல் தமிழ்ச் சமூகத்தின் சார்பில் ஜெத்தா மாநகரில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகளை மனோதிடத்துடன் சந்திக்க பயிற்சி நடத்தப்பட்டது. ஜெத்தா மாநகரில் ஷரஃபியாவில் உள்ள லக்கி தர்பார் உணவக கூட்ட அரங்கில் 9 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் வெற்றிக்கு வழி என்னும் தலைப்பில் ஆண்டு இறுதித் தேர்வுகளை பயமின்றி எப்படி எதிர்கொள்வது, சிறப்பான மதிப்பெண் எடுக்க என்ன வழி, பெற்றோர்களுக்கும் மற்றும், மாணாக்கர்களுக்கும் பயிற்சி உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்தியப் பன்னாட்டுப் பள்ளி, மவாரித் பள்ளி, டெல்லி பப்ளிக் பள்ளி, ஸ்ரீலங்கன் பன்னாட்டுப் பள்ளி உள்ளிட்ட மேல்நிலைப் பள்ளி மாணாக்கர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். செங்கடல் தமிழ்ச் சமூகத்தின் தஞ்சை லயன் ஜாஹிர் ஹுஸைன் வரவேற்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ளவும், இலக்கினை அடைய திட்டம் தீட்டுவதும், அதை செயல்படுத்த அயராத உழைப்பு கொடுக்கும் பயிற்சிகள் தொடர்ச்சியாக செய்தால் வெற்றி நம்மை தேடி வரும் என்றும் போராட்ட குணம் அதிகம் கொண்டு தடைகளை தகர்த்து வெற்றி காண முயல வேண்டும் என உந்துதல் அளிக்க... அதனைத் தொடர்ந்து இந்தியப் பன்னாட்டுப் பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு அறிவியல் ஆசிரியை தாஸ் அவர்கள் தேர்வுகளை அச்சமின்றி எப்படி எழுதுவது என்றும் எளிதான கேள்விகளுக்கு முதலில் தெளிவாக எழுதுவதும், நூறு சதவிகிதம் எழுதி சிறந்த மதிப்பெண்கள் எடுக்கும் வழிமுறைகளை விளக்கமாக எடுத்துரைத்தார். தொடர்ந்து பன்னாட்டுப் பள்ளி தமிழ் ஆசிரியர், உளவியல் பட்டம் பெற்று ஆலோசனைகள் மற்றும் பயிற்சி கொடுத்து வருகின்ற பானு ஹமீத் மாணாக்கர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சிறந்த ஆலோசனைகளையும், மனநலம் சார்ந்த பயிற்சிகளும் வழங்கினார். மேலும் இந்தியப் பன்னாட்டுப் பள்ளி கணித ஆசிரியர் குரு, டெல்லி பப்ளிக் பள்ளி ஆங்கில ஆசிரியர் கணேஷ் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் வழிமுறைகளையும், நேரத்தை சிறப்பாக கையாளும் யுக்திகளையும் எடுத்துக் கூறி தவறில்லாமல் எழுதும் முறை மற்றும் தேர்வு அறையில் எப்படி நடந்து கொள்வது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினர். நிறைவில் ஆசிரியப் பெருமக்களை செங்கடல் தமிழ்ச் சமூக நிர்வாகிகள் கௌரவித்து நினைவு பரிசுகள் வழங்க அராம்கோ நிறுவனத்தின் மூத்த பொறியாளர் செங்கடல் தமிழ்ச் சமூக நிர்வாகியுமான குலாம் முஹைதீன் நன்றி கூற இரவு உணவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் செங்கடல் தமிழ்ச் சமூகத்தின் நிர்வாகிகள் ஜொஹராள் குலாம், சாதிக் பாட்சா, இர்ஃபான், ராயிஸ், ஜூல்பிகார், ஃபாரூக், முகமது உமர், அப்பாஸ், சலீம் உள்ளிட்டவர்களும், தாயிஃப் பல்கலைக்கழக பேராசிரியர் இஸ்புதீன், கியா நாசர், சிவகாசி ஜாகிர், சாகுல் ஹமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆண்டு இறுதித் தேர்வு நடைபெற இருக்கின்ற சமயத்தில் மிகச்சிறந்த ஏற்பாடாக நிகழ்ச்சி அமைந்தது என்று வந்திருந்த பெற்றோர்கள் மற்றும் மாணாக்கள் கூறி விடை பெற்றனர். - நமது செய்தியாளர் M.Siraj


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்