சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ கந்த சஷ்டி 2 ஆம் நாள் விழா கோலாகலம்
சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் ஸ்ரீ கந்த சஷ்டி இரண்டாம் நாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்றைய விட இன்று பக்தப் பெருமக்கள் ஆலயம் நிரம்பி வழிய ஸ்ரீ முருகப் பெருமான் ஸ்ரீ சண்டிகேஸ்வரராக சந்தணக் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிக் காட்சி நல்கியது மெய்சிலிர்க்க வைத்தது. முன்னதாக சிறப்பு அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. பக்தப் பெருமக்களின் கந்தர் அனுபூதி திருப்புகழ் பாராயணம் செவிக்கு இன்பம் பயக்கும் பெரு விருந்தாகச் சுவைத்தது. தொடர்ந்து சத்ரு சம்ஹார த்ருஷதி அர்ச்சனை ஆலயத்தை தெய்வீக மயமாக்க மஹா தீபாராதனை “ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ....வீர வேல் முருகனுக்கு அரோகரா “ சரண கோஷம் முழங்க நடைபெற்றது. தலைமை அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார் கந்த சஷ்டி மகிமை பற்றி பக்திப் பரவசப் பாடலுடன் விளக்கி மகிழ்வித்தார். சுறுசுறுப்பின் மறுபெயராக விளங்கும் ஆலய மேலாண்மைக்குழு உறுப்பினர் சத்திஷ் தலைமையில் நிரம்பி வழிந்த பக்தப் பெருமக்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. - நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்