பிரடெரிக் தமிழ்ப்பள்ளி மேரிலாந்து 13-ஆவது ஆண்டு விழா
பிரடெரிக் தமிழ்ப்பள்ளி அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் “தமிழால் இணைவோம்! உணர்வால் உயர்வோம்” என்ற தமிழ் உணர்வோடு இன்று அமெரிக்க வாழ் தமிழர்களின் மூன்றாம் தலைமுறை மாணவர்களுக்குத் தமிழ்க் கல்வி மட்டுமல்லாமல் தமிழர் கலைகள் மற்றும் பண்பாடுகளையும் சேர்த்துப் பயிற்றுவிக்க முனைவர் பாலா குப்புசாமியின் தலைமையில் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமாய் ஆரம்பிக்கப்பட்டுப் பல தன்னார்வலர்கள் கொண்ட நிர்வாக குழுவினரின் முயற்சியால் சிறப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. மே 19-ஆம் நாள் அன்று பிரடெரிக் தமிழ்ப்பள்ளி தனது 13-ஆவது ஆண்டு விழாவை பிரடெரிக் நகரில் உள்ள அர்பானா நடுநிலைப் பள்ளியில் உள்ள மன்றத்தில் கொண்டாடியது. இந்நிகழ்விற்கு ஷோபனா வரவேற்புரை வழங்கினார். ஹார்வர்ட் தமிழிருக்கைக்குழுத் தலைவர் மருத்துவர் ஜானகிராமன் தலைமை சிறப்பு விருந்தினராகப் பங்கு பெற்றார். மேலும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க நிர்வாகிகளும், வாசிங்டன், மேரிலாந்து, வெர்ஜீனியா தமிழ்ப் பள்ளி நிர்வாகிகளும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மழலையர் முதல் உயர்கல்வி வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு வகுப்பு நிறைவுச் சான்றிதழ் மற்றும் விருதுப் பதக்கம் வழங்கப்பட்டன. மேலும், தனிப்பாடல், ஆடல் எனச் சேர்ந்து ஆடி, பாடி மாணவர்கள் தன் திறமைகளை வெளிப்படுத்தினர். பேச்சு போட்டி, கதைசொல்லல், குறள் ஓதுதல், தமிழிசை, கட்டுரை எழுதுதல், தமிழில் பேசலாம் வாங்க, தமிழ் வினாடி வினா போன்ற 12 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்தன. இவை அனைத்திலும் வெற்றி பெற்றவர்களுக்குக் கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டிகள் மாணவர்கள் தங்கள் திறமைகள், அறிவு மற்றும் திறன்களை வெளிப்படுத்தவும், ஆரோக்கியமான போட்டி மற்றும் மேலும் மேலும் கற்க வேண்டும் என்ற உணர்வை வளர்க்கும் வகையிலும் அமைந்தன. கூடுதலாக, தவிர்ப்போம் தமிங்கிலம் என்ற நிகழ்வில் பெற்றோருக்கான நிகழ்வு நடத்தப்பட்டது. அப்போது பெற்றோர்களுக்கு ஒரு தலைப்பில் கொடுக்கப்பட்டு, ஆங்கில வார்த்தையின்றி 2 நிமிடங்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. தட்டுத் தடுமாறி அவர்கள் பேசியது அரங்கினரை ஆரவாரப்படுதியது. மேலும் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர் தன்னார்வலர்கள் பள்ளியினால் அங்கீகரிக்கப்பட்டனர். தமிழ்ப்பண், நாட்டுப்பண் பாடி நெகிழ்ச்சியுடன் நிறைவு பெற்றது 13 ஆவது ஆண்டு விழா. பிரடெரிக் தமிழ்ப் பள்ளி மாணவர்களே இவ்விழாவின் தொகுப்பாளர்களாகவும் நெறியாளர்களாகவும் செயற்பட்டு நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளையும் வழங்கியது பார்வையாளர்கள் சிறப்பாகக் கண்டுகளிக்க உதவி மிகவும் பாராட்டுதலுக்குரியதாக இருந்தது. கல்வி, கலை, பண்பாடு என அனைத்தையும் தமிழ் உணர்வோடு அடுத்த தலைமுறையினரைச் சென்றடையப் பாடுபடும் பிரடெரிக் தமிழ்ப்பள்ளியின் சேவை மேலும் தொடரட்டும்! - நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்