உள்ளூர் செய்திகள்

கனடா பாராளுமன்றத்தில் இந்து கலாசார சமய விழா

கனடா நாடு பல்லின மக்கள் சுமூகமாக ஒருவரை ஒருவர் மதித்தும் சேர்ந்தும் தத்தம் மத, இன மற்றும் மொழி பேதம் பல கடந்து ஒற்றுமையுடனும், பாங்குடனும் வடமெரிக்க கண்டத்தி்ல் மகுடமாய் வீற்றிருக்கிறது. அதை போற்றும் விதமாக ஒவ்வொரு மாதமும் கொண்டாடும் கனடிய அரசு, நவம்பர் மாதம் இந்துசமய மரபை கொண்டாடும் மாதமாக பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. மூத்த அமைச்சர்கள், சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல அமைப்புகள் பங்கேற்றனர். இந்திய மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வாழ்வியலோடு பின்னப்பட்டு போற்றப்பட்டு வந்த இந்து மதத்தின் சாரம்சத்தை இந்த நிகழ்வும் பங்குபெற்ற மக்களும் கனடிய தலைநகர் ஓட்டாவாவில் பாராளுமன்ற வளாகத்தில் பறைசாற்றினர். இவ்விழாவானது பிக்கரிங்-ப்ரூக்ளின் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் தலைமையில் லிபரல் அரசின் மூத்த அரசியல் பிரமுகர்கள் வீற்றிருக்க இந்து காலாசார நிகழ்வுகள் பிரமாண்டமாக அரங்கேறின. கலாசார நிகழ்வுகள் குத்து விளக்கேற்றி தொடங்கப்பட்டது. ராஜ் கணேஷ் திருப்புகழில் தொந்திசரிய என்ற பாடலை தமிழகம் சார்பாக பாடி சிறப்பித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் உரையாற்றும்பொழுது இந்துமதம் உயிர்களுக்கு தீங்கு நல்காமை, கடமை, சேவை, அறம் போற்றி வாழும் வாழ்வை சிறப்பிப்பதாய் இருக்கிறது என்றார்.இந்திய அரசின் கவுன்சிலர் ஜெனரல் தினேஷ் பட்நாயக் இந்திய கனடிய உறவுகள் இனிவரும் காலங்களில் மேம்படும் எனவும் உலகமே ஓர் குடும்பம். அனைவரும் இன்புற்றிருக்க பாரதம் ஓர் எடுத்துக்காட்டாக திகழ்கிறது எனவும் கனடாவில் குடியேறிய இந்திய மக்கள் தம் வாழ்வை மட்டுமல்ல வாழும் இந்நிலப்பரப்பின் மேன்மைக்கு தமது பங்கை சிறப்புடன் வழங்கி வருகின்றனர் என கூறியபொழுது கரகோஷ ஒலியால் அரங்கம் அதிர்ந்தது.டொரோண்டோவிலிருந்து ஸ்கை கனடா வேதாந்திரி மகரிஷி அமைப்பின் சார்பாக கருணாமூர்த்தி, நாச்சியப்பன், ப்ரியா வடிவேலு மற்றும் முருகன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.- கனடாவில் இருந்து நமது செய்தியாளர் சுதர்சன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்