உள்ளூர் செய்திகள்

குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளையின் நிமிடத்திற்கோர் குறள் - படப்பிடிப்பு நிகழ்ச்சி

பியர்லாந்து, டெக்சாஸ் மீனாட்சி அம்மன் திருக்கோவில் இளைஞர் மையத்தில் திருக்குறள் ஆர்வலர்கள் அலையென திரண்டிருந்தனர். காரணம், குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை அரங்கேற்றிய திருக்குறள் ஒப்பித்தல் நிகழ்ச்சி. தமிழரின் பாரம்பரியம், மொழி கம்பீரம் மற்றும் அறநெறி மரபுகளை பேணும் முயற்சியாக, குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை ஒரு அபூர்வமான திருக்குறள் ஒப்பித்தல் நிகழ்ச்சியை பியர்லாந்து ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோயில் இளைஞர் மையத்தில் வெகு சிறப்பாக நடத்தியது. படிப்பினை மிகுந்த திருக்குறள் ஓதலில், 133 பேர் - பாலர்கள் முதல் மூத்தோர்கள் வரை - ஒவ்வொருவரும் ஒவ்வொரு அதிகாரத்தின் முதல் குறளையும் அதன் அர்த்தத்தையும் ஒப்பித்து தங்கள் தமிழார்வத்தை நிரூபித்தனர். இந்நிகழ்ச்சியை ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ்த் துறைத்தலைவர் டாக்டர் டி. விஜயலட்சுமி துவக்கி வைத்தார். அவருடைய துவக்க உரையில் தமிழை எப்படி பேணிக்காப்பது மற்றும் வெளிநாடுகளில் தமிழ் வளர்ச்சியை எப்படி மேம்படுத்துவது என பல குறிப்புகளை வழங்கினார். குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளைஅமைப்பின் தலைவர்மாலா கோபால் வரவேற்புரையில் கூறியதாவது: “நம் மொழி, இலக்கியம், மரபு ஆகியவை எங்கு இருந்தாலும் அழியக்கூடாது. அதனை வாழ்விப்பதே KKSF அமைப்பின் நோக்கம்.” அவருடைய உரை, பெருமை படுத்தும் பாசமூட்டும் தன்மையுடன், தமிழைப் பாதுகாக்கும் சுயவிளக்கத்தை வெளிப்படுத்தியது. இந்நிகழ்வில் அறக்கட்டளையின் அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்த படப்பதிவு சிறப்பாக நிறைவேற திறம்பட உழைத்தனர். பிள்ளைகளின் பெற்றோர் உற்சாகமாக வருகை தந்து, குடும்பமாக பங்கேற்று, சிறு வயதிலேயே தமிழைப் பாசமுடன் வளர்க்கும் முயற்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சி முடிவில், மாலா கோபால் நன்றியுரையாற்றி, இந்தத் திருக்குறள் நிகழ்வுகள் தொடரும் என்றும், மற்ற அதிகாரங்கள் மற்றும் குறள்கள் குறுந்திரை வழியாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று இந்த முயற்சியை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். இதேபோன்று வேறொரு படப்பதிவு நிகழ்வு விரைவில் நடைபெறும். அந்த நிகழ்வும் வெற்றி பெற உங்கள் பங்கேற்பு மற்றும் ஆசிகளை வேண்டுகிறோம். தகவல்: நந்து ராதாகிருஷ்ணன், செயல் இயக்குனர், குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை - நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்