உள்ளூர் செய்திகள்

மகா உத்சவ் 2025: வட அமெரிக்க சௌராஷ்டிரா மாநாடு

மகா உத்சவ் 2025 மாநாடு, ஜூலை 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் அட்லாண்டாவின் Gas South Convention Center இல் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது வட அமெரிக்காவில் நடக்கும் ஆறாவது சௌராஷ்ட்ரா மாநாடாகும். இம்மாநாட்டை மகா உத்சவ் நிர்வாக குழுவினர், அட்லாண்டா பல்கார் குழு மற்றும் சௌராஷ்டிர அசோசியேஷனுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இம் மாநாட்டில் கிட்டத்தட்ட எண்ணூறுக்கும் மேலான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பான சௌராஷ்ட்ரா மாநாடு 150 தன்னார்வலர்களின் 18 மாதங்களுக்கும் மேலான அயராத உழைப்பினால் தொடக்கம் முதல் இறுதிவரை எந்த இடையூறும் இல்லாமல் தங்குதடையின்றி நடந்தேறியது. இம்மாநாட்டில் இடம்பெற்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் சௌராஷ்ட்ரா சமூகத்தின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. இதில் பொஷ்கன்னொ (தாண்டியா ஆட்டம்), பரதநாட்டியம், கரகாட்டம், சிலம்பாட்டம், இன்னிசை கச்சேரி, இசை நாடகம் (ஜுக்பாக்ஸ் வித் புள்ளிங்கோஸ்), பட்டிமன்றம், ஆண்கள் - பெண்கள் நடனம், மற்றும் குழந்தைகளின் முக அலங்காரம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன. அது மட்டும் அல்லாமல் நிதி மேலாண்மை, தொழில்முறை தகவல்கள் பரிமாற்றம், யோகா, தியானம் போன்ற பல தலைப்புகளில் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெரியவர்களுக்கு சௌராஷ்ட்ரா பேசவும், எழுதவும் கற்றுக்கொடுக்க வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது மற்றும் சௌராஷ்ட்ர மொழியின் முக்கியத்துவம் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சௌராஷ்ட்ரா மக்களின் பாரம்பரிய தொழிலான கைத்தறி நெசவு எவ்வாறு செய்யப்படுகிறது என்பதன் காணொளி வரும்கால சந்ததியருக்காக காண்பிக்கப்பட்டது. சௌராஷ்ட்ரா திருமண மரபுகள் மற்றும் சௌராஷ்ட்ரா பண்டிகைகள் பற்றிய விளக்கக் கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் கண்காட்சிகள், சமூகத்தின் பாரம்பரிய விழாக்கள் மற்றும் திருமணச் சடங்குகளின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் விளக்கின. பங்கேற்பாளர்கள் எல்லா நிகழ்ச்சிகளையும் மிகுந்த ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர். தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் சௌராஷ்ட்ரா மக்களின் பாரம்பரிய உணவுகளும் பரிமாறப்பட்டன. புதிய தொடர்புகளை உருவாக்குவதும், பழைய சொந்தங்களை/நண்பர்களை இணைப்பதும் இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக இருந்தது. ஒரு பங்கேற்பாளர், 'இந்நிகழ்வு என் தாய் வீட்டிற்கு வந்து செல்லும் உணர்வை தருகிறது' என்று குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர் 'மகா உத்சவ் குழுவினரின் அன்பான விருந்தோம்பல் மற்றும் இங்கிருக்கும் உற்சாகமான சூழ்நிலையில் மூழ்கிவிட்டேன்' என்று பாராட்டினார். 'இடம், விருந்தோம்பல், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் சுவையான உணவு என ஒவ்வொரு விவரமும் துல்லியமாகவும் கவனமாகவும் செயல்படுத்தப்பட்டுள்ளது,' என்று பல பங்கேற்பாளர்கள் பகிர்ந்து கொண்டனர். சௌராஷ்டிரா அசோசியேஷன் இந்த மாநாடுகளை மேம்படுத்துவதிலும், சமூகத்தை ஒருங்கிணைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. இம்மாநாட்டில் வருங்கால இளைய தலைமுறையினரை இணைக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தன. அவற்றை சௌராஷ்ட்ரா அசோசியேஷனின் இளைய தலைமுறையினர் குழு வடிவமைத்து சிறப்பாக செயல்படுத்தியது. இதன் மூலம் எங்களுக்கு பிறகு எங்கள் தாய்மொழியையும், எங்கள் சமூகத்தையும் காப்பாற்ற எங்கள் இளைய தலைமுறையினர் உள்ளனர் என்னும் நம்பிக்கை எங்களுள் எழுந்துள்ளது. இந்த மாநாடு எல்லோருக்கும் ஒரு 'மறக்க முடியாத நிகழ்வாக' அமைந்திருந்தது. இம்மாநாட்டின் முழக்கமான 'அட்லாண்டா ஆவோ, சொந்தோஸ்கன் ரவோ (அட்லாண்டாவுக்கு வாங்க, சந்தோசமா இருங்க)' என்ற உணர்வு பங்கேற்பாளர்கள் அனைவராலும் உணரப்பட்டது. இந்நிகழ்வை சாத்தியமாக்கிய மகா உத்சவ் நிர்வாகக்குழு, தன்னார்வலர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வு எதிர்கால சமூகக் கூட்டத்திற்கு ஒரு அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்: சுவர்ணபிரபா கும்பா சந்திரசேகரன் & ஸ்ரீகுமார் சோமங்கிளி சுப்ரமணியன். - நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்