பாரெங்கும் திருக்குறள்
பொன் விழா கண்ட சிகாகோ தமிழ்ச் சங்கம், தமிழக அரசின் தமிழ்த்தாய் விருது பெற்ற சிகாகோ தமிழ்ச் சங்கம், பத்தாம் உலகத் தமிழ் தமிழாராய்ச்சி மாநாட்டை முன்னெடுத்து வெற்றி கண்ட சிகாகோ தமிழ்ச் சங்கம், வட அமெரிக்காவில் ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாட்டை(5th International Conference on Thirukkural) ஏப்ரல் 5, 6, 7 தேதிகளில் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (அமெரிக்க கிளை), ஆசியவியல் நிறுவனம்(சென்னை) ஆகியவற்றுடன் இணைந்து சிகாகோ மாநகரில் உலகத் தமிழ் மக்களின் பேராதரவுடன் ஒரு வரலாற்று நிகழ்வாய் நடத்தப்பட்டது. ஐந்தாவது உலகத் திருக்குறள் மாநாடு வட அமெரிக்காவின் சிகாகோ நகரில், முத்தான மூன்று நாட்களில், சிறப்பு விருந்தினர்களுடன் பங்கு பெற்ற அனைவரையும் மன நிறைவு செய்யும் வகையில் செவிக்கும் அறிவுக்கும் பல்வேறு நிகழ்வுகளுடனும் வயிற்றுக்கு பல்சுவை உணவுடனும் சிறப்புடன் நடந்தேறியது. இந்த மாநாட்டை, அனைத்து வசதிகளும் நிறைந்த ஷெரட்டன் லைல் (Sheraton Lisle) என்ற உயர்தர விடுதியின் சிறப்பாய் வடிவமைக்கப்பட்ட உள்ளரங்கத்தில் சிறப்புற நடத்திக்காட்டினர்.திருக்குறள் நூலுக்கு யுனெஸ்கோவின் உலகு தழுவிய தகுதிப் பாட்டினைப் பெறவும், திருக்குறளை வட அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் அடுத்த தலைமுறையினருக்கும், உலக அரங்கிற்கும் எடுத்துச் செல்லும் அளவிற்கு சிறப்பான முறையில் இம்மாநாடு நடைபெற்றது.முதல் நாள்முதல் நாள், ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி, தமிழகப் பாரம்பரிய இசைக் கருவிகள் முழங்க, திருவள்ளுவர் சிலைக்கு மாலையிட்டு தமிழறிஞர்கள் வணங்க, கலந்து கொண்ட ஒவ்வொருவரும் திருக்குறளை கூறி திருக்குறள் ஓதலுடன் மாநாடு துவங்கியது. மாலை 5 மணி வாக்கில் இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர், ஆங்காங் அமெரிக்காவின் பிற பகுதிகளில் இருந்தும் அறிஞர்களின் அறிமுகங்கள் நடைபெற, விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பாடல்களைப் பாட, சிகாகோ இசைக் கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சி அனைவரது மனதையும் கவரும் வண்ணம் நடைபெற்றது. அனைவருக்கும் சுவையான உணவு பரிமாறப்பட்டு இசையோடு கூடிய இரவாய் அது அமைந்தது.இரண்டாம் நாள்இரண்டாம் நாள் காலை பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க, அறிஞர் பெருமக்கள் கூடி வலம் வர, அரங்கத்தில் வரவேற்பு சிறப்பாய் நிகழ்ந்தது. அனைத்து தமிழறிஞர்கள் தமிழ் ஆர்வலர்கள் அமெரிக்க நாட்டு தமிழர்கள் அனைவரது முன்னிலையில் தமிழ் தாய் வாழ்த்துடன் திருக்குறள் ஓதலுடன், குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா மாநாட்டைத் தொடங்கி வைத்தார். மாநாட்டை ஒருங்கிணைத்த சிகாகோ தமிழ்ச் சங்கத் தலைவர் நம்பிராஜன் வரவேற்புரை நல்கினார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் அரசர் அருளாளரின் ஆய்வு அரங்கங்களின் முதன்மை ஆய்வு அரங்கத்தின் தொடக்க உரையைத் தொடர்ந்து, ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜான் சாமுவேல் நோக்க உரை வழங்கினார். அரசின் சார்பாக மாநாட்டில் கலந்து கொண்ட அயலகத் தமிழர் வாரியத்தின் உறுப்பினர் புகழ் காந்தி, அயலகர் தமிழர் வாரியத்தின் வட அமெரிக்க உறுப்பினர் கால்டுவெல் வேல்நம்பி, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் பாலா சுவாமிநாதன், தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவர் வீரா மாநாடு சிறக்க வாழ்த்துரை கூறினர்.அமெரிக்க இல்லினாய்ஸின் 8வது காங்கிரஸ் மாவட்டத்தின் அமெரிக்க பிரதிநிதி ராசா கிருஷ்ணமூர்த்தி மாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசியபோது திருவள்ளுவர் கூறிய வாழ்க்கை நெறியில் நின்று, இங்கு வாழும் தமிழர்கள் அரசியலில் முக்கிய பங்கு எடுத்து பதவிகள் வகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இந்திய தூதர் சோமனார் கோஷ் விழாவில் கலந்து கொண்டு தன்னுடைய தமிழகத்தின் உடனான தொடர்பை வலியுறுத்தி மாநாடு சிறப்பாய் நடக்க வாழ்த்துரை வழங்கினார்.பேராசிரியர் சாலமன் பாப்பையா முதன்மை ஆய்வு அரங்கத்தின் சிறப்பு உரையை ஆற்றினார். அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் பகிர்தல் இணை அமர்வுகளாய் (Parallel sessions) மூன்று அரங்குகளில் இனிதே தொடங்கியது.மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தையும் மிகச் சிறப்புடன் சம்மு ரவி ஒருங்கிணைத்துக் கொடுக்க கலை நிகழ்ச்சிகளின் தொடக்கமாய், கல்வியும் கேள்வியும் என்ற பகுதியில் 30 பேர்கள் கலந்து கொண்ட திருக்குறள் வினாடி வினா நிகழ்ச்சி நாஞ்சில் இ பீற்றர் முன்னெடுப்பில் குழந்தைவேல் ராமசாமி, மேகலா ராமமூர்த்தி வினாடி வினாவை மிகவும் சிறப்பாய் நடத்திக் காட்டினர். அமெரிக்காவில் திருக்குறளை கற்ற மாணவர்களை திருக்குறள் இளவரசன் திருக்குறள் அரசன் என்று கூறி பெருமைப்படுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து சிகாகோ தமிழ் சங்கத்தைச் சார்ந்த பறை இசைக் குழுவினர் அரங்கம் அதிர அனைவரது மனங்களையும் குளிர்விக்கும் வகையில் சிறப்பாய் இசையோடு நடனத்தை தந்தனர். அமெரிக்க தமிழ் பள்ளிகள் நடத்திய உலக மாணவர்கள் பங்கேற்ற திருக்குறள் ஆராய்ச்சி பற்றிய பகிர்வு நம் மாணவர்களின் செயல் திறனை காட்டும் வண்ணம் இருந்தது. அதை அடுத்து பரதநாட்டிய குழு நடனம் நடைபெற்றது. மருத்துவர் சொக்கலிங்கத்தின் வள்ளுவம் கூறும் மருத்துவம் கூடியிருந்தோருக்கு மருத்துவ ஆலோசனையை திருக்குறளின் வாயிலாய் நகைச்சுவையுடன் கூறியது அனைவரது பாராட்டையும் பெற்றது. சிக்காகோ தமிழ்ச் சங்கத்தின் முன்னெடுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கு கொண்ட குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகம் இந்த நிகழ்வில் ஓர் சிறப்பு அம்சமாய் அமைந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று இந்த நிகழ்வில் நம்முடைய பண்பாட்டின் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் நடனமாடி மகிழ்வித்தனர்.திருக்குறளில் மேலாண்மை, திருக்குறளாண்மை (Thirukkuralnership) பற்றி அமெரிக்காவில் பெரும் நிறுவனங்களில் உயர் பதவி வகிக்கும் வேலுச்சாமி சங்கரலிங்கம், சுரேஷ் சம்மந்தம், சேது கிருஷ்ணமூர்த்தி, கே டி ஸ்ரீனிவாச ராஜா, ஸ்ரீதரன் தங்களுடைய வாழ்வை திருக்குறள் எப்படி செதுக்கியது என்று எடுத்துக் கூறியதும் கூடியிருந்தோரின் பாராட்டைப் பெற்று ஊக்கத்தையும் தந்தது.வலைத்தமிழ் பதிப்பக வெளியீடாக வந்துள்ள உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் (Thirukkural Translations in World Languages) என்ற ஆங்கில நூலை சாலமன் பாப்பையா வெளியிட்டார். இந்நூலை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் முனைவர். பாலா சாமிநாதன், சிகாகோ தமிழ்ச்சங்கத் தலைவர் நம்பிராஜன் வைத்திலிங்கம், தமிழறிஞர் முனைவர் ப. மருதநாயகம், ஹார்வார்ட் தமிழிருக்கை புரவலர்கள் மருத்துவர். விஜய் ஜானகிராமன், மருத்துவர் சம்மந்தம், திருக்குறள் ஆர்வலர் தாமஸ் ஹிட்டோஷி புருக்ஷ்மா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். இந்த நூலின் நோக்கத்தை பற்றி வலைத்தமிழ் நிறுவனரான பார்த்தசாரதி உரைப்பதிவைத் தொடர்ந்து, இதன் இணை ஆசிரியர்களான மிசௌரி இளங்கோ தங்கவேல், டெக்ஸாஸ் செந்தில் துரைசாமி திருக்குறளை உலக அளவில் எடுத்துச் செல்ல செய்யப்படும் முயற்சிகளை எடுத்துக் கூறினர்.மிசௌரி தமிழ் சங்கம், மில்வாக்கி தமிழ் சங்கம், சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகிய மூன்று சங்கங்களின் உறுப்பினர்கள் சிலம்பாட்டம், நாடகம் ஆகியவற்றை நடத்தி மாநாட்டில் தங்களுடைய பங்களிப்பை அளித்தனர். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பயிற்சி தந்து தமிழ் இலக்கிய பாடல்கள் மாணவர்களாலும் பெரியவர்களாலும் பாடப்பட்டது நம் இலக்கியத்தின் பெருமையை உணரச் செய்தது. இரவு உணவிற்குப் பிறகு அமெரிக்காவில் இசையில் புகழ்பெற்ற இளம் பாடகர்களின் இன்னிசை நிகழ்ச்சி குறளோடு குரல் என்ற பெயரில் அனைவரது மனம் கவர்ந்த திரைப்படப் பாடல்கள் அரங்கத்தில் ஒலித்தன.மூன்றாம் நாள்ஏப்ரல் ஏழாம் தேதி பெரும் தமிழ் அறிஞர் பேராசிரியர் ப மருதநாயகம், இலங்கைத் தமிழ் அறிஞர் பேராசிரியர் சண்முகதாஸ் , திருக்குறள் சிறப்புரை (Planery session speech) ஆற்றி இரண்டாம் நாள் நிகழ்வு தொடங்கியது. அறிஞர்களின் ஆய்வு கட்டுரைகள் நான்கு அரங்குகளில் இணை அமர்வுகளாய் பேராசிரியர்களின் தலைமையில் வழங்கப்பட்டன. இந்த ஆய்வு அரங்குகளின் நிகழ்வுகளை, உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அமெரிக்கக் கிளையின் துணைத்தலைவர் ரவி பாலாவால் சிறப்பாய்த் திட்டமிடப்பட்டிருந்தன. அதனை அடுத்து மதியம் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் விவாத மேடை நடந்தது. வட அமெரிக்காவின் பல பகுதிகளில் இருந்து வந்த தமிழ் ஆர்வலர்கள் அவருடன் விவாதம் செய்தது மாநாட்டிற்கு மெருகேற்றியது.திருக்குறளை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இயக்கப்பட்ட அமெரிக்க தமிழ்ப் பள்ளி மாணவர்களின் திருக்குறள் நாடகம், சிறப்பு விருந்தினர் சாலமன் பாப்பையா முன்னிலையில், அவரது பாராட்டைப் பெற்று அரங்கேறியது. வள்ளுவம் வலியுறுத்துவது ஒழுக்கமா? கல்வியா? என்ற தலைப்பில் அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற திருக்குறள் பட்டிமன்றம், நம்முடைய அடுத்த தலைமுறையினர் தமிழை எவ்வளவு கற்று இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தது.இந்த மாநாட்டை ஒட்டி பல போட்டிகள் நடத்தப்பட்டன. அந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநாட்டின் மேடையில் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகள் பெற்ற மாணவர்களின் பெருமிதமான முகங்கள் இந்த மாநாடு வெற்றி பெற்றதை எடுத்துக் காட்டியது என்றே சொல்லலாம்.இந்த நிகழ்வில் சிறப்புப் பங்காற்றிய ஆதரவாளர்கள், புரவலர்கள், கொடையாளர்கள் ஆகியோருக்குச் சிறப்பு செய்யப்பட்டது. சிகாகோ நகரில் உள்ள அடையார் ஆனந்த பவன் உணவகம் சுவையான உணவைத் தந்து அனைவரையும் மகிழ்வித்தது. அனைத்து தரப்பினரையும் மனநிறைவு கொள்ளும் படியாய் காலை, மதியம், மாலை, இரவு அனைத்து வேளைகளிலும் பல்வேறு வகையான அறுசுவை உணவு தந்து செவிக்கும் அறிவுக்கும் மட்டுமல்லாது பயிற்றுக்கும் தரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை விஜய் சாந்தலிங்கம் செம்மையாக செய்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத் தலைவர் அரசர் அருளாளர் மாநாட்டை நடத்திக் கொடுத்த அனைவரையும் பாராட்டிய பின், சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் சரவணக்குமார் மணியனின் நன்றி நவிலலுடன் மாநாடு முடிவற்றது.இந்த நிகழ்வின் வெற்றியே இதை மிகுந்த தன்னார்வத்துடன் கவனத்துடன் அன்புடன் அனைத்துப் பணிகளையும் செய்த தன்னார்வலர்கள் தான் என்று கூறினால் மிகையாகாது. இணையதளம் உருவாக்கம் தொடங்கி, ஆய்வுக்கட்டுரைகளைப் பெற்று, அவற்றை ஆய்ந்து, ஆய்வாளர்களை அமெரிக்காவிற்கு வர ஏற்பாடு செய்து, நிகழ்வு தினத்தில் பதிவு செய்வது, நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுப்பது, விருந்தினர்களுக்கு உணவு படைப்பது என்று தமிழுக்காக எத்தனையோ பணிகளை, உயர் பதவிகளை வகித்திருந்த போதும், கடுமையான பணிகளுக்கு நடுவே, முனைந்து செய்த தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றி கூறாமல் இருக்க முடியாது.இந்த நிகழ்வில் சிறப்புப் பங்காற்றிய ஆதரவாளர்கள், புரவலர்கள், கொடையாளர்கள் ஆகியோருக்குச் சிறப்பு செய்யப்பட்டது. சிகாகோ நகரில் உள்ள அடையார் ஆனந்த பவன், சாயிராம் இந்தியன் கிச்சன் (வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு விருந்து), மதுரை கிச்சன், தக்ஷின் இந்தியன் ரெஸ்டாரண்ட், நம்ம கிச்சன் ஆகிய உணவகங்கள் சுவையான உணவைத் தந்து அனைவரையும் மகிழ்வித்தது. அனைத்து தரப்பினரையும் மனநிறைவு கொள்ளும் படியாய் காலை, மதியம், மாலை, இரவு அனைத்து வேளைகளிலும் பல்வேறு வகையான அறுசுவை உணவு தந்து செவிக்கும் அறிவுக்கும் மட்டுமல்லாது பயிற்றுக்கும் தரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை விஜய் சாந்தலிங்கம் செம்மையாக செய்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இம்மாநாட்டில் திருக்குறளோடு பிறமொழிகளில் தோன்றிய அறநூல்கள் பல்வேறு நாடுகளைச் சார்ந்த 30 அறிஞர்களால் பல்வேறு கோணங்களில் ஒப்பிட்டு ஆராயப்பட்டது. இத்தகைய ஒப்பீட்டு ஆய்வின் மூலம் திருக்குறளின் தனித்தன்மை தக்க தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து நிலைநாட்டப்பட்டதோடு திருக்குறளின் உலகளாவிய பரந்த தகுதிப்பாடும் அனைத்துலக அறிஞர்களும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் நிலைநாட்டப் பெற்றது.- நமது செய்தியாளர் முனைவர் மெய் சித்ரா , தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், ஆங்காங்