தமிழர்களுக்கு எதிரான பாடகியை பயன்படுத்துவதா? ஹாரிஸ் ஜெயராஜ், மதன் கார்க்கிக்கு எதிர்ப்பு
ADDED : 1464 days ago
தனது நிறுவன விளம்பரங்கள் மூலம் புகழ்பெற்ற லெஜண்ட் அருள் சரவணன் அண்ணாச்சி ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்திகா திவாரி தமிழில் அறிமுகமாகிறார். மேலும் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மதன்கார்க்கி மற்றும் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்காக சமீபத்தில் மிகவும் பிரபலமாகியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த பாப் பாடகி யோகானியை அழைத்துப் பாட வைத்திருக்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு அந்தப் பாடலின் ரெக்கார்டிங் மும்பையில் நடைபெற்றுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ், யோகானி மற்றும் மதன்கார்க்கி ஆகியோர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. இதற்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பாடகி யோகானி சிங்கள இராணுவ தளபதி பிரசன்ன டி சில்வாவின் மகள். சிங்கள இனவெறியர்கள் தமிழர்கள் மீது நடத்திய போரைப் புகழ்ந்து பாடிய பெண்ணை அழைத்து தமிழில் பாட வைத்திருப்பதால் ஈழத் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.