மருதநாயகம் - கமல்ஹாசனை ஈர்த்தது எப்படி ?
ADDED : 1451 days ago
தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கமல்ஹாசனால் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு பின் கைவிடப்பட்ட படம் மருதநாயகம். இங்கிலாந்து ராணி எலிசெபத் சென்னைக்கு வந்து இப்படத்தைத் துவக்கி வைத்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் படம் அத்துடன் நின்றுவிட்டது. அந்தப் படம் மட்டும் முழுமையாக உருவாகி வெளிவந்திருந்தால் பாகுபலி படங்களுக்கு முன்பே தமிழில் ஒரு பெரும் சரித்திர சாதனை நிகழ்ந்திருக்கும்.
மருதநாயகம் படத்தை எடுக்க கமல்ஹாசனுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது வானமாமலை எழுதிய தமிழர் நாட்டுப்பாடல்கள் என்ற புத்தகத்தில் இடம் பெற்றிருந்த கான்சாகிபு சண்டை என்ற பாடல் என்பது பிக் பாஸ் 5 மூலமாக வெளிவந்துள்ளது. நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்தப் புத்தகம் பற்றி அறிமுகப்படுத்திய போது அது பற்றி கமல்ஹாசன் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ்ல ஒரு கமர்ஷியல் சினிமா எடுக்கணும்னு கதை தேடிய போது, ஒரு சின்ன கிணறு, நம்ம தாகத்துக்கு வெட்டிக்கலாமேன்னு ஆரம்பித்த போது, கான்சாகிபு சண்டை என்ற ஒரு புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அந்த கிணற்றுக்குள்ளிருந்து பூதாகரமான ஒரு சரித்திர உருவம் எழுந்து நின்றது. அந்த உருவத்திற்குப் பெயர் தெரிந்தது. என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக, நான் கிட்டத்தட்ட ஒழுங்கா காலேஜிக்குப் போய் படிச்சிருந்தால் கண்டிப்பா அதுல ஒரு பி.எச்டி எழுதியிருப்பேன் நான்.
அந்த அளவிற்கு அந்த மனிதரைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், பேசவும் முடிகிறது என்றால், அதற்கு ஆரம்ப விதை கான்சாகிபு சண்டை என்ற அந்த நாட்டுப்பாடல். அதிலிருந்து எழுந்த கதாநாயகன் பெயர் முகம்மது யூசுப் கான், அல்லது மருதநாயகம் என்ற தமிழ் வீரன்,” என்றார்.
மேலும், தேவர் மகன் படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான இஞ்சி இடுப்பழகா...பாடலில் அந்த வார்த்தையும் மற்றும் மறக்க மனம் கூடுதில்லையே என்ற வரிகளையும் நாட்டுப்புறப் பாடல்களில் நான் படித்தது. வாலி அவர்களிடம் நான் ரசித்தது என்று சொன்னேன். அவரும் ஏறு தழுவுதல் போன்று அதையும் அரவணைத்துக் கொண்டு அந்தப் பாடலில் இந்த வார்த்தைகளை இடம் பெற வைத்தார்,” என்றார்.