தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பத்து நாட்களுக்கு முன்பு நவம்பர் 4ம் தேதி தியேட்டர்களில், ஓடிடி தளங்களில் முன்னணி நடிகர்களின் படங்களும், சிறிய படங்களும் வெளியாகின.
அதற்குப் பிறகு நேற்று முன்தினம் 'பார்ட்ர்' என்ற ஒரே ஒரு படம் மட்டும் தியேட்டர்களில் வெளியானது. வரும் நவம்பர் 19ம் தேதி தியேட்டர்களில் 'சபாபதி, ஜாங்கோ, கடைசீல பிரியாணி, அடையாள மீட்பு' ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஓடிடி தளத்தில் 'பொன் மாணிக்கவேல்' படம் வெளியாக உள்ளது.
'சபாபதி' படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். 'ஜாங்கோ, கடைசீல பிரியாணி, அடையாள மீட்பு' ஆகிய படங்களில் புதுமுகங்கள் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். பிரபுதேவா நடித்து கடந்த சில வாரங்களாக வெளியாகமல் முடங்கியிருந்த 'பொன் மாணிக்கவேல்' படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
நவம்பர் 25ம் தேதி சிலம்பரசன் நடித்துள்ள 'மாநாடு' படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ம் வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் அதிக அளவில் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பலத்த போட்டி இருக்க வாய்ப்புள்ளது.